வரும் 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடனே மீண்டும் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதேபோல, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் போட்டியிடவிருக்கிறார். இந்தநிலையில், குடியரசுக் கட்சிக்குளாகவே டிரம்ப்-க்கு போட்டியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார். யார் இந்த விவேக் ராமசாமி? அவர் பின்னணி என்ன?
குடும்பப் பின்னணி:
விவேக் ராமசாமி அடிப்படையில் ஓர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரின் பெற்றோர் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு அருகிலுள்ள வடக்கன்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். கேரளாவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த விவேக்கின் தந்தை வி.ஜி.ராமசாமி, பணி நிமித்தமாக அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு ஓகியோ (Ohio) மாகாணத்திலுள்ள General Electric Plant-ல் மின் பொறியாளராக பணிசெய்தார். அதேபோல, விவேக்கின் தாயாரான கீதாவும் அமெரிக்காவில் முதியோர் மனநல மருத்துவராக பணியாற்றினார்.
கல்வியும் வேலையும்:
பெற்றோர் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்திருந்தாலும், விவேக் பிறந்து வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவின் ஓகியோ மாகணத்திலுள்ள சின்சினாட்டி(Cincinnati) பகுதியில்தான். பள்ளிப்படிப்பை சின்சினாட்டியில் உள்ள செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் 2003-ம் ஆண்டு முடித்தார். அதன்பிறகு, இளங்கலை பயோலஜி பட்டப்படிப்பை பிரசித்தி பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் (Harvard University) படித்தார். தனது கல்லூரி காலங்களில் படிப்பில் மட்டுமல்லாமல் மியூசிக், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஆர்வம் மிக்கவராக வலம்வந்தார் விவேக் ராமசாமி.
2007-ம் ஆண்டு ராமசாமி இளம் தொழில்முனைவோருடன் இணைந்து கேம்பஸ் வென்ச்சர் நெட்வொர்க் (Campus Venture Network) நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்பிறகு, 2010-2013 காலகட்டங்களில், யேல் சட்டப் பள்ளியில் (Yale Law School) சட்டப்படிப்பையும் படித்து முடித்தார். அதன்பிறகு, 2014-ம் ஆண்டு `Roivant Sciences' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் மருந்து வளர்ச்சியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார். அந்தநிலையில், 2015-ம் ஆண்டு விவேக் ராமசாமியின் மருந்து மேம்பாட்டு பங்களிப்பு பற்றி புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழ் அட்டைப்படத்துடன் கட்டுரை வெளியிட்டது.
அதைத்தொடர்ந்து, 2020-ம் ஆண்டு `Chapter Medicare' என்ற இணை மருத்துவ நிறுவனத்தையும் தொடங்கினார். அமெரிக்காவின் மிகப்பெரிய பயோடெக் தொழிலதிபர் எனும் நிலைக்கு உயர்ந்தார். 2021-ம் ஆண்டுவரை Roivant Sciences நிறுவனத்தின் தலைமை நிர்வாக (CEO) அதிகாரியாகப் பணியாற்றியவர், தனது பதவியிலிருந்து விலகினார். தற்போது Strive Asset Management நிறுவனத்தின் இணை நிறுவநராகவும், நிர்வாகத் தலைவராகவும் பணியில் இருக்கிறார். அமெரிக்க மருத்துவத் துறைகளில் முன்னணி தொழிலதிபராக வலம்வரும் விவேக் ராமசாமியின் மொத்த சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4,140 கோடி ரூபாய்க்கும் அதிகம். தொழிலதிபராக இருந்தபடியே Woke, Nation of victims ஆகிய இரண்டு நூல்களையும் எழுதியிருக்கிறார் விவேக் ராமசாமி.
அரசியல் களம்:
2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போதே விவேக் ராமசாமிக்கு அரசியல்மீதான ஆர்வம் தொற்றிக்கொண்டது. குறிப்பாக, குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நின்ற டொனால்டு ட்ரம்பின் வெற்றி, விவேக் ராமசாமிக்கு அரசியல் உத்வேகத்தை அளித்தது. மேலும், அமெரிக்க தேசியவாதத்தின் மீது தீவிர நம்பிக்கையையும் விவேகக்கின் மனதில் விதைத்தது. இந்த நிலையில், 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். விவேக் ராமசாமி மட்டுமல்லாமல் மற்றொரு இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலியும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். அமெரிக்க குடியரசுக் கட்சியில் மட்டுமே சுமார் 10-க்கும் மேற்பட்டோர் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருப்பது, டொனால்டு ட்ரம்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலைப் பொறுத்தவரையில், விவேக் ராமசாமி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபர் அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். மேலும், தற்போதைய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸிம் இந்திய வம்சாவளி என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/another-indian-origin-in-us-president-election-race-who-is-this-vivek-ramasamy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக