கேரள மாநில பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் செஸ் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு நிதி தரவில்லை எனக் கூறி வரிகள் உயர்த்தப்பட்டிருப்பதாக ஆளும் சி.பி.எம் கூறிவருகிறது. வரி விதிப்பைக் கண்டித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் போராட்டம் நடத்திவருகிறது. முதல்வர் பினராயி விஜயன் சென்ற காரை நோக்கி கறுப்புக் கொடி காட்டிய இளைஞர் காங்கிரஸ் பெண் நிர்வாகியின் ஆடையைப் பிடித்து இழுத்த போலீஸ்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் செல்லும் சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் போலீஸ் கெடுபிடி அதிகரித்திருப்பதாகவும், இதனால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.
முதல்வர் பினராயி விஜயனின் மனைவி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டுக்குச் சென்றார். அவரை கொச்சி விமான நிலையத்துக்கு வழியனுப்ப முதல்வர் பினராயி விஜயன் சென்றார். முதல்வர் செல்வதாகக் கூறி போலீஸார் சாலைகளில் வகனங்களை விடாமல் தடுத்து நிறுத்தினர். எர்ணாகுளம் மற்றூர் பகுதியில் தன்னுடைய நான்கு வயது மகளுக்கு மருந்து வாங்குவதற்காக காரில் சென்ற கோட்டயம், திருவஞ்சியூர் பகுதியைச் சேர்ந்த சரண் என்பவரையும் போலீஸார் தடுத்து நிறுத்தினர். காரை ஓரமாக நிறுத்திவிட்டு மெடிக்கல் ஸ்டோரில் மருந்துவாங்கிவிட்டு உடனே சென்றுவிடுவதாக அவர் கூறியும், போலீஸ் அவரது காரை விடவில்லை. ஒரு ஹோட்டல் அருகே காரை நிறுத்திவிட்டு மெடிக்கலில் மருந்துவாங்க முயன்ற அவரிடம் போலீஸார் கோபப்பட்டிருக்கின்றனர். அதுபற்றி கேட்ட மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளரையும் போலீஸார் எச்சரித்திருக்கின்றனர். இது குறித்து முதல்வர் பினராயி விஜயனுக்கும், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் அவர் புகார் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
குழந்தைக்கு மருந்துவாங்கச் சென்றவரை தடுத்து நிறுத்திய விவகாரத்தில் மனித உரிமை கமிஷன் தாமாக முன்வந்து வழக்கு பதிந்திருக்கிறது. நான்கு நாள்களுக்குள் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி எர்ணாகுளம் ரூரல் மாவட்ட போலீஸ் எஸ்.பி-க்கு மனித உரிமை கமிஷன் சேர்மன் நீதிபதி ஆண்டனி டொமினிக் உத்தரவிட்டிருக்கிறார். இதுபோன்று திருச்சூர் மாவட்டம், மண்ணூத்தி பகுதியில் கடந்த திங்கள்கிழமை முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்காக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் ஸ்கூலுக்கு தாமதமாக சென்றதாகப் புகார் எழுந்தது. மேலும் முதல்வர் செல்லும் வழியில், மருந்து வாங்க மருத்துவமனைக்குச் செல்ல காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தன்னுடைய அம்மாவுடன் நின்றுகொண்டிருந்ததாகவும், அவரை போலீஸார் கைதுசெய்ததாகவும் புகார் எழுந்தது. முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.
முதல்வர் செல்லும் சாலைகளில் போலீஸ் கெடுபிடி அதிகரித்திருப்பதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். நேற்று ஆளும் சி.பி.எம்-க்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வி.டி.சதீசன் பேசுகையில், "முதல்வர் சாலையில் செல்வதாகக் கூறி, அம்மாவுக்கு மருந்துவாங்கச் சென்ற காங்கிரஸ் நிர்வாகியை போலீஸார் பிடித்துச் சென்றனர். யாரை நீங்கள் பயப்படுத்துகிறீர்கள். இது ஸ்டாலினின் ரஷ்யா அல்ல மிஸ்டர் பினராயி விஜயன். இது ஜனநாயகமான கேரளம் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். முதல்வருக்கு பயமாக இருந்தால் நீங்கள் வீட்டில் இருங்கள். எதற்காக மக்களைப் பயப்படுத்தி வீட்டில் இருக்கச் சொல்கிறீர்கள். நீங்கள் தலைமைச் செயலகத்திலோ, கிளப் ஹவுசிலோ இருந்துகொண்டு ஃபைல்களை அங்கு கொண்டுவரச் சொல்லுங்கள். நீங்கள் ரோட்டில் இறங்கினால் மக்களைத் தடுத்து சிறை வைப்பது என்ன நியாயம்" என்றார் ஆவேசமாக.
source https://www.vikatan.com/government-and-politics/politics/kerala-congress-opposition-leader-slams-cm-pinarayi-vijayan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக