Ad

சனி, 25 பிப்ரவரி, 2023

`கொடநாடு பெயரைச் சொல்லி பூச்சாண்டி காட்டுவது இனி செல்லாது!' - ஈரோட்டில் கொதித்த எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து நேற்றைய தினம் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருங்கல்பாளையத்தில் பேசுகையில், ``அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்காேவன் ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்து, இந்த ஈரோடு கிழக்குத் தாெகுதிக்கு என்ன செய்தார். அவர் வெற்றி பெற்றால் அவரை இங்கு காணமுடியாது. தி.மு.க ஆட்சிக்கு வந்து 22 மாதங்களாகியும் இந்தத் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை. இதைக் கேட்டால் கொடநாடு பிரச்னையை கையில் எடுக்கிறார்கள். கொடநாடுக்கும், ஈரோடுக்கும் என்ன சம்பந்தம். கொடநாட்டில் நடைபெற்ற திருட்டில் சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் கைதுசெய்தோம். ஆனால் அந்தக் கொலையாளிகளுக்கு ஜாமீன் பெற்றுத் தந்தவர்கள் தி.மு.க-வினர். கேரளாவில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் என கடும் குற்றங்கள் புரிந்த அவர்களுக்கு ஆதரவாக வாதாடுபவர் தி.மு.க-வின் எம்.பி என்றால் அதற்கு என்ன காரணம்?

பிரசாரம்

கொடநாடு பெயரைச் சொல்லி சும்மா பூச்சாண்டி காட்டுவது இனி செல்லாது. ஐ.ஜி தலைமையிலான விசாரணை கமிஷன், இந்த வழக்கை 90 சதவிகிதம் விசாரித்து நீதிமன்றத்தில் 750 பக்க அறிக்கையை தாக்கல் செய்திருந்த நிலையில், எதற்காக இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி மாற்றினீர்கள், இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. குற்றவாளிகளுக்கும், தி.மு.க-வுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். இதற்கு விரைவில் விடை கிடைக்கும் என்ற செய்தியை இந்த நேரத்தில் பதிவுசெய்கிறேன்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு தி.மு.க எதையும் செய்யவில்லை. ஆனால், நாங்கள் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை இந்தத் தொகுதிக்காக செய்து தந்திருப்பதால், நெஞ்சை நிமிர்த்தி உங்களிடம் வாக்குகளைக் தைரியமாக கேட்கிறோம். 7.50 லட்சம் முதியோர்களின் உதவித்தொகையை தி.மு.க அரசு நிறுத்திவிட்டது. உழைக்கும் திறனற்ற முதியோர்களின் உதவித்தொகையை நிறுத்தியவர்தான் இந்த சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின்" என்றார். நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி கூறியதைக் கேளுங்கள் எனக் கூறி எல்.இ.டி திரையில் நளினி, `சிதம்பரம் நீட் தேர்வு இனி ரத்து ஆகாது' என்று கூறிய பேட்டி ஒளிபரப்பப்பட்டது. அதேபோல, `ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்துசெய்வோம்' என்று முதல்வர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் பேசிய காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி மேலும் பேசுகையில், ``நீட் தேர்வை ரத்துசெய்வதாகக் கூறியதை கேட்டு 12 மாணவர்களின் உயிர் போனது. அவர்கள் உயிர் போனதற்கு தி.மு.க அரசுதான் பொறுப்பு. இதற்கு யார் காரணம்.

மக்களை ஏமாற்றியவர்களுக்கு தோல்வியைப் பரிசாக அளிக்க வேண்டும். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை அளிப்பதாகக் கூறியவர்கள், இதுவரை தரவில்லை. இரண்டு நாளுக்கு முன்பு இங்குப் பேசிய உதயநிதி ஸ்டாலின், `இப்போதுதான் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் 6 மாதங்களில் வழங்கி விடுவோம்' என்றார். ஆனால், ஈரோட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், `மார்ச் மாத பட்ஜெட்டில் அறிவித்து விடுவோம்' என்கிறார். அப்பாவும், மகனும் கூறுவது அனைத்தும் பொய். 22 மாதங்களாக தராதவர்கள் இப்போது தந்துவிடவா போகிறார்கள்,
மின்கட்டணம் 12 முதல் 54 சதவிகிதம் வரை உயர்த்தியிருக்கிறார்கள். சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது. 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 25 கொலைகள் நடந்திருக்கின்றன. 13-ம் தேதி ஒரே நாளில் 9 கொலைகள் நடந்திருக்கின்றன. தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவல்துறை மானியக் கோரிக்கையில்  2,136 பேர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பவர்கள் என்று கணக்கெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தனர். இவர்களில் 148 பேர் மட்டுமே கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

மற்றவர்கள் எல்லாம் தி.மு.க-காரர்கள். இதை நான் சொல்லவில்லை. அவர்கள் கொடுத்த மானியக் கோரிக்கை தொடர்பான புத்தகத்தில்தான் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஈரோட்டில் பேசிய ஸ்டாலின் பேச்சுவாக்கில், அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்று பேசிவிட்டார். உண்மையில் அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத்தான் ஸ்டாலின் இப்போது திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்பதை ஸ்டாலினே ஒப்புக்கொள்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஏற்கெனவே ரூ.55 கோடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவு மண்டபம் கட்டினீர்கள். அதை தவறு என்று கூறவில்லை. ஆனால் ரூ. 81 கோடி செலவில் எழுதாத பேனாவை கடலில் வைப்பதால் யாருக்கு என்ன பயன், இது மக்களின் வரிப்பணம். மண்டபம் முன்பு ரூ. 2 கோடியில் பேனாவை வைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை மாணவர்களுக்கு எழுதும் பேனாவை வாங்கிக் காெடுங்கள். 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் 7 சட்டக் கல்லூரிகள், 76 கலை அறிவியல் கல்லூரிகள், 3 கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தலைவாசலில் ரூ.1,000 கோடி செலவில் பிரமாண்டமான கால்நடை மருத்துவப் பூங்கா கொண்டு வந்தோம். ஏராளமான பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் கட்டித் தந்தோம். இதன் காரணமாக இந்திய அளவில் உயர்கல்வித் திட்டத்தில் தமிழகம் முதலிடத்தை பெறச் செய்தோம்.

2011-ம் ஆண்டில் தி.மு.க ஆட்சி முடியும்போது, 100-க்கு 32 பேர் மட்டுமே உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தனர். இப்போது 100-க்கு 54 பேர் படிக்கிறார்கள். இதைப்பற்றி படித்தால்தான் இதெல்லாம் தெரியும். தனது குடும்பத்தை பற்றி மட்டுமே கவலைப்படுபவர்தான் ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல், `கண் தெரியாத கபோதி' என்று என்னைப் பற்றி ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்னிடம் இருக்கின்றன. இதெல்லாம் நீங்கள் கொடுத்த கோரிக்கைகள். இதை நிறைவேற்றவில்லை என்று கூறியதற்காக என்னை கண் தெரியாத கபோதி என்கிறார். உங்கள் கோரிக்கையை சொன்னதற்காகதான், அவர் அப்படி கூறியிருக்கிறார். எனவே அவர் என்னைச் சொல்லவில்லை. மக்களாகிய உங்களைத்தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார்.

அ.தி.மு.க. தொண்டர்

ஏழைகளுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை நிறுத்தியதுதான் ஸ்டாலினின் சாதனை. வரி மேல் வரி போட்டதுதான் மக்களுக்காக இவர்கள் செய்தது. ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதாகக் கூறி அதை செய்யவில்லை. கைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் தருவதாகக் கூறி அதையும் தரவில்லை. இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சாரக் கணக்கெடுப்பு என்று சொன்னதை செய்தீர்களா. பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் என்று கூறிவிட்டு இந்தத் தொகுதியைச் சேர்ந்த 2,000 தூய்மைத் தாெழிலாளர்களை பணியிலிருந்தே நீக்கிவிட்டார்கள். அரசு ஊழியருக்கு பென்சன் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றுவதாகக் கூறி அவர்களையும் ஏமாற்றி விட்டார். படித்தவர்களையும், படிக்காதவர்களையும் ஏமாற்றி பட்டை நாமம் அடித்தவர் ஸ்டாலின். 3 கூட்டத்தொடர்களில் 6 முறை சட்டப்பேரவையில் நான் பேசினேன். 2 மணி நேரம், இரண்டரை மணி நேரம் வரை புள்ளிவிவரத்தோடு பேசினேன். அத்தனையும் ஒளிபரப்பு செய்திருந்தால் நீங்கள் டெபாசிட்கூட வாங்க மாட்டீர்கள். ஆனால், மக்களுக்காக நான் பேசியதை ஒளிபரப்பாமல் தடுத்துவிட்டனர்.

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயலலிதா பற்றி அறிக்கை விடுத்திருக்கிறார். ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் ஜெயலலிதா. இப்படியொரு பெண்ணைப் பார்க்க முடியாது. தனிப்பெண்மணியாக பிளவுபட்ட கட்சியை ஒன்றாக்கி ஆட்சியை திறம்பட செய்தார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் ரஜினிகாந்த். ஜெயலலிதாவின் ஆட்சியை ரஜினிகாந்த்கூட புகழ்ந்திருக்கிறார். ஆனால் ஸ்டாலின் மட்டும் அ.தி.மு.க ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்று கூறுகிறார். அ.தி.மு.க ஆட்சியே பொற்கால ஆட்சி. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உணவு உற்பத்தியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறோம். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரையும் ஏமாற்றிய தி.மு.க ஆட்சியை நீங்கள் புறக்கணியுங்கள்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/edappadi-palaniswamy-slams-dmk-government-in-erode-east-election-final-campaign

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக