Ad

வியாழன், 16 பிப்ரவரி, 2023

`பிரச்னைகளை எதிர்கொள்வோம்!’ - திருநம்பி, பட்டதாரி பெண் காதலர் தினத்தில் சுயமரியாதை திருமணம்

விருதுநகர் மாவட்டம், மகராஜபுரம், அயன் கரிசல்குளம், அழகாபுரி, காந்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் - ஆண்டாள் தம்பதியின் மகன், அருண் ஃபாஷ். திருநம்பியான இவர், எம்.பி.ஏ பட்டதாரி. இவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த காளியப்பன் - செந்தாமரையின் மகள் அருணாதேவிக்கும் இடையே 6 மாதங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. அருணாதேவி பி.காம் (சி.எஸ்) பட்டதாரி. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த நிலையில், இருதரப்பு பெற்றோரும் ஒப்புக்கொள்ளவில்லை.

வழக்குரைஞர் சென்னியப்பனுடன்...

இந்நிலையில், இருவரும் காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி அன்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெரியார் சுயமரிமாதை திருமண நிலையத்தை அணுகி தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். இதையடுத்து திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சிவலிங்கம், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சென்னியப்பன் ஆகியோர் தலைமையில் வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்தம் என்ற பெயரால் திருமணம் செய்து கொண்டனர்.

காதல் தம்பதி அருண் ஃபாஷ் - அருணாதேவியிடம் பேசினோம்...
``ஆறு மாதங்களுக்கு முன் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் சாதாரண நட்பாகப் பழகிய நாங்கள், பின்னாளில் காதல் வயப்பட்டோம். ஒருவர் மீது ஒருவர் காட்டிய அக்கறை, பாசம் இவற்றால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்.

நாங்களும் சமுதாயத்தில் மற்ற தம்பதிகளைப்போல வாழ விரும்புகிறோம். எங்கள் விருப்பத்தை வீட்டில் கூறியபோது அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். எங்களைப் பிரிக்க எவ்வளவோ முயற்சிகளைச் செய்தனர். அதனால் நாங்கள் இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டோம்.

வாழ்த்துகளை பகிரும் நண்பர்கள்...

எங்களுக்கு பிரியா என்ற திருநங்கை அடைக்கலம் கொடுத்தார். மனித உரிமைகள் விழிப்புணர்வு போராளியான மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன், மனிதம் சட்ட உதவி மையத்தின் வழக்குரைஞர் சென்னியப்பன் உதவியுடன் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தை அணுகினோம். எங்களுக்கு உதவி புரிய அவர்கள் சம்மதித்து இந்த சுயமரியாதை திருமணத்தை சிவலிங்கம் தலைமையில் நடத்தி வைத்தனர்.

இனிவரும் காலங்களில் நாங்கள் சமுதாயத்தில் நிறைய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்துள்ளோம். இருவரும் பட்டதாரியாக இருந்தாலும் வேலையின்றி இருக்கிறோம். எங்களுக்கு உதவி புரிய சிவலிங்கம், வழக்குரைஞர்கள் ப.பா.மோகன், சென்னியப்பன் ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.

அருண் ஃபாஷ், அருணா தேவி

திருநர்களும் சமுதாயத்தின் ஓர் அங்கம்தான். எங்களை எதிர்ப்பவர்களை நாங்கள் கண்டு கொள்வதில்லை.
திருநர்கள் பலர் வெற்றியாளர்களாக வாழ்ந்து காட்டுகிறார்கள். காவல்துறை எஸ்.ஐ-யாகவும், வழக்கறிஞராகவும், மேற்கு வங்கத்தில் நீதிபதியாகவும் இருக்கிறார்கள். அதேபோல நாங்களும் சமுதாயத்தில் நல்ல நிலைமைக்கு வருவோம்’’ என்றனர் உறுதியுடன்.



source https://www.vikatan.com/gender/graduate-girl-married-a-transgender

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக