Ad

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

500 வகையான ரகங்கள்... வேலூரில் களைகட்டிய காய்கறித் திருவிழா!

வேலூரில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழாவை தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு நேற்று முன்தினம் (26.2.23) நடத்தியது.

மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா

இந்தத் திருவிழாவில் வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு மரபு விதைகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர். இந்த மாபெரும் திருவிழாவில் 80 வகையான கிழங்குகள், 70 வகையான தக்காளிகள், 45 வகையான பூசணிக்காய், 40 வகையான சுரக்காய்கள், 30 வகையான கத்திரிக்காய்கள், 65 வகையான மிளகாய்கள் என சுமார் 500 வகையான பாரம்பர்ய மரபு ரகங்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததால், இந்த மாபெரும் மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா களைகட்டியது. பொதுமக்கள் வரிசையாக இந்த மரபு ரகங்களைப் பார்வையிட்டு ஆங்காங்கே நின்றிருந்த விழா ஒருங்கிணைப்பாளர்களிடம் இந்த மரபு ரகங்களைப் பற்றியும் இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.

103 கிலோ வெற்றிலைவள்ளிக் கிழங்கு...

இந்த திருவிழாவில் சக்கரைவள்ளி கிழங்கு, காட்டுவள்ளிக் கிழங்கு, வெற்றிலை வள்ளிக் கிழங்கு, கொடி உருளைக் கிழங்கு, கருணைக் கிழங்கு என சுமார் 80 வகையான கிழங்கு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் காவிதண்டலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஸ்வநாதன் என்பவரின் தோட்டத்தில் இரண்டு ஆண்டுக் காலம் விளைந்த சுமார் 103 கிலோ எடை கொண்ட வெற்றிலைவள்ளிக் கிழங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த கிழங்கு அறுவடை செய்த போது சுமார் 120 கிலோ எடை இருந்ததாகவும், அறுவடை செய்து சில நாட்கள் ஆனதால்  நீர்சத்து சற்று குறைந்து தற்போது 103 கிலோ எடை இருப்பதாகவும் இந்தக் கிழங்கை விளைவித்த விவசாயி விஸ்வநாதன் தெரிவித்தார்.

மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா

பூசணி, தக்காளி, கத்திரி, மிளகாய்கள்...

இந்தத் திருவிழாவில் குடம் பூசணி, நாம பூசணி, சிட்டு பூசணி, கூம்பு பூசணி, வரி பூசணி என சுமார் 1 கிலோ எடை கொண்ட பூசணி முதல் 15 கிலோ எடை கொண்ட பெரிய பூசணி வரை 45 வகையான பூசணிக்காய்களும், கறுப்பு வால் தக்காளி , சிவப்பு வரி தக்காளி உள்ளிட்ட நாம் அன்றாட வாழ்வில் பார்க்காத பல வகை தக்காளிகள் காட்சிப்படுத்தப்பட்டது நம்மை பிரமிக்க வைத்தது.

கோவை வரி கத்திரி, பச்சை தொப்பி கத்திரி, இலவம்பாடி முள் கத்திரி உள்ளிட்ட நம் மரபு கத்திரிக்காய்கள் பார்க்கும்போதே நம் நாக்கில் சுவை எட்டிப் பார்க்கிறது. மேலும் இந்த திருவிழாவில் பல வகை சுரக்காய்கள், மிளகாய்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்தத் திருவிழா குறித்து விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான உழுது உண் சுந்தர் கூறுகையில் "கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து அழிவின் விளிம்பில் இருந்த பல்வேறு மரபு காய்கறிகள் மற்றும் விதைகளை மீட்டெடுத்து வருகிறோம். நாங்கள் மீட்டெடுத்த விதைகள் மற்றும் காய்கறிகள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை எடுத்துகூறி அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் நோக்கத்தில்தான் இந்த திருவிழாவை நடத்துகிறோம்.

மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா

அடுத்த தலைமுறை நஞ்சில்லா உணவை உட்கொள்வதற்கும் , ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கும் இது போன்ற திருவிழாக்கள் முக்கிய காரணியாக இருந்து வருகிறது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட இந்த திருவிழாவிற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். நம் மரபு விதைகள் தமிழ்நாடு முழுவதும் பரவ வேண்டும் என்பதற்காக திருவிழாவில் பங்கேற்ற விவசாயி களுக்கு மரபு விதைகளை இலவசமாக வழங்கி அந்த விதையை வைத்து அவர்கள் மூலமாக ஒரு நாலு விவசாயிகளுக்கு மரபு விதைகளைக் கொடுக்க அறிவுறுத்தி வருகிறோம்" என்றார்.

விழாவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த மரபு விவசாயிகள், மரபு விதைகள் முக்கியத்துவம் பற்றியும், அதை விளைவிப்பது பற்றியும் தங்களுடைய கருத்துகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.

மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா

இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். இன்றைய இளம் தலைமுறை இளைஞர்கள் இந்தத் திருவிழாவில் அதிக அளவில்  கலந்துகொண்டு நம் மரபு விதைகள் மற்றும் காய்கறிகள் பற்றி தெரிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் மரபு விதைகளையும் அதிக அளவில் வாங்கிச் சென்றது நமக்கு பெரும் நம்பிக்கை அளித்தது.



source https://www.vikatan.com/agriculture/organic-farming/500-varieties-of-traditional-varieties-weeded-vegetable-festival-in-vellore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக