டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (ஏடிஆர்) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு கடந்த 2021-22-ம் நிதியாண்டில் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், "கடந்த 2021-22-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் தேசிய கட்சிகள் ரூ.20,000-க்கு மேல் பெற்ற நன்கொடை விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி பா.ஜ.க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் ஒட்டுமொத்தமாக ரூ.780.77 கோடியை நன்கொடையாக பெற்றிருக்கின்றன.
இதில் அதிகபட்சமாக பா.ஜ.க ரூ.614.62 கோடியை நன்கொடையாக பெற்றிருக்கிறது. அந்த கட்சிக்கு 4,957 நன்கொடைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கடந்த 2020-21-ம் நிதியாண்டில் பா.ஜ.க-வுக்கு ரூ.477.54 கோடி நன்கொடை கிடைத்தது.
தற்போது அந்த கட்சிக்கு 28.71 சதவீதம் நன்கொடை அதிகரித்திருக்கிறது. கடந்த 2021-22-ம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.95.45 கோடி நன்கொடை கிடைத்திருக்கிறது. அதற்கு முந்தைய நிதியாண்டில் அந்த கட்சி ரூ.74.52 கோடி நன்கொடை வசூலித்தது. தற்போது 28.09 சதவீதம் அளவுக்கு நன்கொடை அதிகரித்திருக்கிறது.
தேசியவாத காங்கிரஸுக்கு ரூ.57.9 கோடி, மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.10 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.1.94 கோடி, திரிணமூல் காங்கிரஸுக்கு ரூ.43 லட்சம், தேசிய மக்கள் கட்சிக்கு ரூ.35 லட்சம் நன்கொடைகள் கிடைத்திருக்கின்றன. தேசிய கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கிய மாநிலங்களில் டெல்லி யூனியன் பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கிருந்து ரூ.395.84 கோடி நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது. இதில் மிக அதிகபட்சமாக பா.ஜ.க-வுக்கு ரூ.366.57 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் இருந்து காங்கிரஸ் ரூ.27.51 கோடியை நன்கொடையாகப் பெற்றிருக்கிறது. டெல்லியை அடுத்து மகாராஷ்டிராவில் இருந்து தேசிய கட்சிகளுக்கு ரூ.105.35 கோடி நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது.
அதில் பா.ஜ.க-வுக்கு ரூ.29.59 கோடி, காங்கிரஸுக்கு ரூ.19.53 கோடி, தேசியவாத காங்கிரஸுக்கு ரூ.55.47 கோடி வழங்கப்பட்டிருக்கின்றன. குஜராத்தில் இருந்து ரூ.44.95 கோடி, அசாமில் இருந்து ரூ.23கோடி, கர்நாடகாவில் இருந்து ரூ.22.97 கோடி தேசிய கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்பில் ரூ.625.88 கோடியும், தனிநபர்கள் சார்பில் ரூ.153.32 கோடியும் தேசிய கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்பில் பா.ஜ.க-வுக்கு மட்டும் ரூ.548.80 கோடி நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-got-rs-614-crore-from-donations-congress-rs-94-crore-in-fy22-says-adr-report
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக