ஹைதராபாத் அம்பர்பெட் பகுதியில் பிரதீப் என்ற 5 வயது சிறுவனின் தந்தை, செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். சிறுவன் தனியாக நடந்து வந்தபோது தெரு நாய்கள் அவனைச் சுற்றிவளைத்து உடலெங்கும் கடித்துக் குதறியுள்ளன.
தடுமாறி கீழே விழுந்த சிறுவன், ஒவ்வொரு முறை எழும்போதும் மீண்டும் மீண்டும் 3 தெருநாய்கள் தாக்கி உள்ளன. பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகி உள்ளன.
அருகில் யாருமில்லா சமயத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதால் சிறுவனைக் காப்பாற்ற இயலவில்லை. தெருநாய்கள் கடித்து சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதும், பெற்றோர் தரப்பில் இருந்து எந்தப் புகாரும் காவல் நிலையத்தில் அளிக்கப்படவில்லை.
சமீப காலத்தில் குழந்தைகள், பெரியவர்களை தெருநாய்கள் துரத்தித் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, தெருநாய் தாக்கும்பட்சத்தில் ஒருவர் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என்னவென்று, ராணிப்பேட்டையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ரா.கிஷோர் குமாரிடம் கேட்டோம்.
தெரு நாய்கள் வெறிபிடித்து கடிப்பதற்கான காரணம் என்ன?
``ஒரு நாய் ஒருவரை துரத்திக் கடிக்கும்போது கூட்டத்தில் இருக்கும் அனைத்து நாய்களும் ஓடிப்போய் காரணமின்றிக் கடிக்கும். இது இயற்கையாகவே இவற்றின் மரபணுவில் கலந்த ஒரு செயல்.
தெருநாய்களின் இந்த மாற்றத்துக்கு மக்கள்தொகை பெருக்கமும், நகரங்களில் இடமின்மையும் முக்கிய காரணம். முன்பெல்லாம் நாய்களுக்கென்று நிறைய இடங்கள் இருந்தன.
பெரும்பாலும் கிராமங்களில் நாய்கள் ஊர் எல்லையிலோ தொலைவிலோ இருக்கும். சாப்பாட்டுக்காக மட்டுமே மக்களை நெருங்கும். அவை குப்பைகளில் தெருக்களில் கிடைக்கும் உணவுகளையே உண்ணும்.
ஆனால், நகர்ப்புறங்களில் இடமின்மை, மக்கள் தொகை காரணமாக குடியிருப்புகள், கட்டடங்கள் அதிகமானதால் நாய்கள் தெருவில் உலவ ஆரம்பித்தன. அவற்றுக்கென இடங்கள் இல்லாமல் போயின. இதனால் மனிதர்களுடன் நெருங்கி இருக்கும் வகையில் நாய்கள் தெருவில் தள்ளப்பட்டன.
நாட்டு நாய்கள் மிகவும் பழைமையான நாயினம். இவை ஆசியா முழுக்க பரவி இருக்கின்றன. நாம் வீடுகளில் வளர்க்கும் நாய்களான டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்டை வீடு மாறும்போதோ, நம்மால் வளர்க்க முடியாத சூழ்நிலைகளின் போதோ தெருவில் விட்டு விடுகிறோம்.
அப்படி அவை தெருவில் விடப்படும்போது அந்த நாய்களுக்கும் தெருவில் வசிக்கும் நாட்டு நாய்களுக்கும் இடையில் இனப்பெருக்கம் நடந்து குட்டிள் பிறக்கின்றன. இந்தக் குட்டிகளிடம் கடிக்கும் சுபாவம் அதிகமாக இருக்கும்.
நாய்கள் திடீரென ஒருவரை கடிக்காது. நாய்கள் கடிப்பதற்கு பொதுவான சில காரணங்கள் உள்ளன:
1. தெரு நாய்களைப் பொறுத்தவரை ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் முரட்டுத்தனமாக இருக்கும். அச்சமயத்தில் நாய்களின் மூளை பாதிக்கப்பட்டுள்ளதால் கண்ணில் தென்படுபவர்களையெல்லாம் கடிக்கும்.
2. தெரு நாய்கள் அறிமுகம் இல்லாதவர்களை ஒருபோதும் நம்பாது. அதனால் அவை பொதுவாக, அறிமுகமில்லாதவர்களையே (Strangers) கடிக்கும்.
3. நாய் இனங்கள் அனைத்துமே, ஒரு பொருள் வேகமாக ஓடும் போது (Moving objects) அதைத் துரத்திக் கடிக்கும் தன்மையுடையவை. உதாரணத்துக்கு கோழியோ, ஆடோ, மாடோ அல்லது வேகமாக நாமே ஒரு பைக்கிலோ காரிலோ செல்லும் போது அதைத் துரத்தி பிடிக்கும். இதற்கு Prey drive என்று பெயர்.
4. தெருநாய்கள் பயந்த சுபாவம் கொண்டவை. தேவையில்லாமல் யாரையும் கடிக்காது. முக்கியமான உணர்வுத் தாக்குதலின் அடிப்படையிலேயே அவை கடிக்கும். உதாரணத்துக்கு வலி. காயம்பட்ட அல்லது தாக்கப்பட்ட நாய் வலியில் இருக்கும்போது அந்த நாயை நாம் தொடும்போது அல்லது சீண்டும்போது வலியின் அடிப்படையில் கடிக்க வாய்ப்பு உள்ளது.
5. இனப்பெருக்கக் காலத்தின்போது நிறைய நாய்கள் ஒரு பெண் நாய்க்காக சண்டையிட்டுக்கொள்ளும். அந்தச் சமயத்தில் ஒவ்வொரு நாயும் மிகவும் முரட்டுத் தனத்தோடுகூடிய கோபத்தில் இருக்கும். அந்த நேரத்தில் நாம் நாய்களை அணுகும்போது அவை கடிக்க வாய்ப்புள்ளது.
6. பெண் நாய்களின் மகப்பேறு காலத்தில் அவற்றின் குட்டிகளைத் தொடும்போதும், தூக்கும்போதும் தன் குட்டிகளை ஏதாவது செய்துவிடுவார்களோ என்று குட்டிகளின் பாதுகாப்பைக் கருதி கடிக்க வாய்ப்புள்ளது.
7. ஒரு பகுதியில் வாழும் நாய் குறிப்பிட்ட தூரம் வரை அதன் எல்லையாகக் கருதிக்கொள்ளும். அப்படி இருக்கும் சமயத்தில் அந்த எல்லைக்குள் யாராவது முகம் தெரியாத மூன்றாம் நபர் வந்தால் அவர்ரைக் கடிக்க வாய்ப்பு உள்ளது. தனது எல்லையைப் பாதுகாப்பதற்காகவே அந்த இடத்தில் அந்த நாய் கடிக்கிறது.
8. தெரு நாய்களுக்கு பெரும்பாலும் உணவு கிடைக்காது. அரிதாகவே அவற்றுக்கு உணவு கிடைக்கும். அப்படி அவை உணவு சாப்பிடும்போது அவற்றைத் தொடக் கூடாது. அருகில் வருவோர், அந்தச் சாப்பாட்டை எடுத்துக்கொள்வார்கள் அல்லது திருடிவிடுவார்கள் என்ற பயத்தால் கடிக்க வாய்ப்புள்ளது. இதற்கு Food Aggression என்ற பெயரும் உள்ளது.
9. சில நாய்கள், சிறுவயதிலேயே அதிகமாக மனிதரால் பாதிக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு, நாய்களை கல்லால் அடிப்பது, சுடு தண்ணீர் ஊற்றுவது, விரட்டித் துரத்துவது போன்ற பல காயங்களை சந்தித்திருக்கும். இந்தச் சமயத்தில் தெருநாய்களை நம்முடைய குழந்தைகளோ, பெரியவரோ நெருங்கி விளையாடும்போது அதன் பழைய நினைவுகளில் பதிந்துள்ள மனித செயல்களின் அடிப்படையில் தன்னுடைய பாதுகாப்பைக் கருதி கடிக்க வாய்ப்புள்ளது.
தெரு நாய்களைப் பற்றி குழந்தைகளும் பெரியவர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை:
1. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் பத்து நாள்கள் வரைதான் உயிரோடு இருக்கும். பிறகு இறந்துவிடும். நாய்க்கடிபட்ட ஒருவர் அதைக் கண்காணிக்க வேண்டும். ஒருவேளை அந்த நாய் பத்து நாள்களுக்குள் இறந்துவிட்டால் அந்த நபரும் ரேபிஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அர்த்தம். அச்சமயத்தில் Anti Rabies vaccine மற்றும் Anti rabies immunoglobulin போட்டுக்கொள்வது நல்லது. இது நோயின் தீவிரத்தைக் குறைக்கும்.
2. நாய் துரத்தும்போது ஓடக் கூடாது. திரும்பி நின்று சத்தம் போட்டு மிரட்ட வேண்டும். அப்படி மிரட்டும்போது நாய்கள் திரும்பிப் போக வாய்ப்பிருக்கிறது. இன்னும் வேகமாக ஓடினால் வேகமாக நம்மை துரத்திப் பிடிக்க வாய்ப்புள்ளது.
3. குட்டி போட்ட நாய்களின் பக்கத்தில் குழந்தைகளை விடக்கூடாது. குட்டிகளை எடுத்து விளையாடக் கூடாது.
4. இரவு நேரங்களில் தெருநாய்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்குச் செல்வதைக் குறைக்க வேண்டும்.
source https://www.vikatan.com/social-affairs/kids/hyderabad-5-year-old-boy-died-in-stray-day-bite
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக