Ad

வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

Doctor Vikatan: வாய்வழியே மூச்சு விடுவது ஆபத்தானதா?

Doctor Vikatan: வாய் வழியாக மூச்சுவிடுவது எதனால் ஏற்படுகிறது? அதை எப்படி சரி செய்துகொள்வது?

- மனோபாலா, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை மருத்துவர் சுரேஷ்

நுரையீரல் சிகிச்சை மருத்துவர் சுரேஷ் | சென்னை

நம்மில் பெரும்பாலானோர் மூக்கின் வழியே சுவாசிக்கிறோம். சிலர் வாய் வழியே சுவாசிப்பதுண்டு. மூக்கின் வழியே சுவாசிக்கும்போது மூச்சுக்காற்றிலுள்ள தூசு, சூழல் மாசிலுள்ள நுண்துகள்கள் போன்றவை வடிகட்டப்பட்டு, நுரையீரலுக்குள் அனுப்பப்படும்.

வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்று தாக்கும்போது, அது மூச்சுக்காற்றின் வழியே உள் செல்வதால், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் போன்றவை ஏற்படும்போது, மூக்கின் வழியே சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அதனால் சிலர் வாய் வழியே சுவாசிப்பார்கள். குறிப்பாக, குழந்தைகள்.... மூக்கடைப்பு ஏற்படும்போது, இரவில் குழந்தைகளால் மூக்கின் வழியே சுவாசிக்க முடியாமல் வாய் வழியே சுவாசிப்பதைப் பார்க்கலாம்.

இது தவிர டான்சில்ஸ் எனப்படும் தொண்டைச்சதை வீக்கம், அடினாய்டு, ஸ்லீப் ஆப்னியா போன்ற பாதிப்புகள் இருந்தாலும் வாய் வழியே மூச்சு விடுவார்கள். இவர்களுக்கு காலையில் கண் விழிக்கும்போது நாக்கு வறண்டு போயிருக்கும். இரவில் தூங்கும்போது வாயிலிருந்து எச்சில் வழியும். இதன் காரணமாக காலையில் எழுந்ததும் அவர்கள் ஆழ்ந்த உறக்கம் இல்லாததுபோல களைப்பாக உணர்வார்கள். இதற்கு காரணம் வாய்வழியே மூச்சு விடுவதுதான்.

உடல் பருமன் உள்ளவர்களுக்கு குறட்டை பிரச்னை இருக்கும். இது இரவில் அதிகரிக்கும்போது ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, மூளைக்கு சிக்னல் செல்லும். அதனால் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்திருப்பார்கள். இது இரவு முழுவதும் தொடரும் பட்சத்தில் மறுநாள் காலை களைப்பு, தூக்கக் கலக்கம், வேலைகளில் எரிச்சல் உணர்வு போன்றவை இருக்கும்.

தொண்டை வீக்கம்

இதற்கு சிகிச்சை அளிக்கப்படாதபட்சத்தில் ரத்தச் சர்க்கரையும் ரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டுக்குள் வராமல் அதிகரிக்கலாம். நுரையீரலில் அழுத்தம் கூடலாம். ஹார்ட் அட்டாக் வரலாம். பக்கவாதம் பாதிக்கலாம். எனவே இந்த அறிகுறிகள் இருப்பவர்கள், உடனடியாக நுரையீரல் மருத்துவரை அணுகி, ஸ்லீப் ஆப்னியா பாதிப்பு இருக்கிறதா என டெஸ்ட் செய்து, அது உறுதியானால் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

டான்சில்ஸ் மற்றும் அடினாய்டு பிரச்னை காரணமாக வாய்வழியே மூச்சு விடுபவர்கள், இ.என்.டி மருத்துவரை அணுகி அறுவை சிகிச்சை தேவையா அல்லது மருந்துகளின் மூலம் சமாளிக்க முடியுமா என ஆலோசனை பெற வேண்டும். அலர்ஜி காரணமாக வாய் வழியே மூச்சு விடுபவர்கள், அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். புகை, வெளிப்புற மாசு, கட்டுமான தூசு என காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

நாம் மூக்கின் வழியே சுவாசிக்கும்போது ஆக்ஸிஜனை உள்ளே இழுத்து, கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறோம். தொடர்ந்து வாய்வழியே சுவாசித்துக்கொண்டிருந்தால் கார்பன் டை ஆக்ஸைடு நம் ரத்தத்தில் கலக்க வாய்ப்பு உண்டு. அதனால் நச்சு சேரும் வாய்ப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளைப் பொறுத்தவரை, வாய்வழியே சுவாசிக்கும் பழக்கத்தால் அவர்களது வளர்ச்சி பாதிக்கப்படும். பாடங்களை கவனிப்பதில் சிரமம் இருக்கும்.

குறட்டை

எனவே குழந்தைகள் வாய்வழியே மூச்சு விடுவதைப் பார்த்தால் பெற்றோர் உடனே அவர்களை குழந்தைகளுக்கான நுரையீரல் மருத்துவரிடமோ, இ.என்.டி மருத்துவரிடமோ அழைத்துச் சென்று பிரச்னையைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பல பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-is-mouth-breathing-dangerous

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக