Ad

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

Doctor Vikatan: வருடக்கணக்காக வாக்கிங் செய்தும் குறையாத உடல் எடை... காரணமென்ன?

Doctor Vikatan: வாக்கிங் செய்தால் உடல் எடை குறையும் என்கிறார்கள் பலரும். நான் பல வருடங்களாக வாக்கிங் செய்து வருகிறேன். என் உடல் எடையில் எந்த மாற்றத்தையும் பார்க்க முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்?

பதிலளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா.

ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா | சென்னை

ஜிம்முக்கு சென்று வொர்க் அவுட் செய்வதைவிடவும் பலரும் எடையைக் குறைக்க வாக்கிங் செய்வதையே விரும்புகிறார்கள். வாக்கிங் மட்டுமே எடைக்குறைப்புக்குப் போதுமானதுதான். அரைமணி நேர நடைப்பயிற்சியிலேயே ஒருவர் 150 கலோரிகளை எரிக்க முடியும். ஆனால் மெதுவாக நடக்காமல், வேகமான நடையாக இருக்க வேண்டியது முக்கியம். அப்படி நடந்தாலே உடல் எடையைக் குறைக்க முடியும்.

ஒரு மருத்துவராக நான் எல்லோருக்கும் சொல்ல விரும்புகிற மெசேஜ் ஒன்று இருக்கிறது. அதாவது நம்முடைய இலக்கு வெறும் எடைக்குறைப்பாக மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்ட முயற்சியாக இருக்க வேண்டும்.

அதனால் வாழ்நாள் முழுவதும் உடல்திறனை மேம்படுத்துவதும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நடைப்பயிற்சி மட்டுமன்றி வேறு சில பயிற்சிகளையும் செய்வது சிறந்தது.

வாழ்க்கையில் இப்போதுதான் முதல்முறையாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கப் போகிறவர் என்றால் முதலில் வாக்கிங் மட்டும் செய்தாலே போதுமானது. சில நாள்களுக்கு வாக்கிங் செய்து உடலின் ஏரோபிக் தன்மை வளர்ந்தபிறகு மற்ற பயிற்சிகளையும் செய்யத் தொடங்கலாம்.

எடைக்குறைப்பு என்பது பல விஷயங்களை உள்ளடக்கியது. வெறும் வாக்கிங் மட்டும் செய்வேன், உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்ற மாட்டேன், தூக்கத்தை முறைப்படுத்த மாட்டேன் என்பது பலன் தராது.

வாக்கிங்

எடைக்குறைப்புக்காக வாக்கிங் செல்வது என முடிவெடுத்துவிட்டால், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே ஊட்டச்சத்து ஆலோசகர் அல்லது மருத்துவரைச் சந்தித்து அவரின் ஆலோசனைகளோடு சேர்த்து இரண்டையும் பின்பற்றும்போது நிச்சயம் பலன் தரும். வருடக்கணக்காக வாக்கிங் செய்தும் எடை குறையவில்லை என்றால், நீங்கள் உணவு விஷயத்தில் கோட்டை விட்டிருக்கலாம். மெதுவாக நடப்பவராக இருக்கலாம். இப்படி ஏதோ ஓரிடத்தில் தவறு நடந்திருக்கலாம். அதைத் தெரிந்து கொண்டு சரிசெய்யப் பாருங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-weight-that-does-not-decrease-after-years-of-walking-what-are-the-reasons

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக