Ad

வியாழன், 23 பிப்ரவரி, 2023

ஆளுநர் ரவி: `அரசியல், சரித்திரத்தைக் குறிவைத்து மேடைதோறும் பேசுவதன் தாக்கம் என்ன?!'

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆர்.என்.ரவி பேசிவருகிறார். அவர், சனாதன தர்மம் குறித்துப் பேசிய கருத்துகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகின.

ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என்.ரவி, “சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டதே பாரதம். மரத்தின் இலைகள், கிளைகள்போல, நம் எண்ணங்கள், செயல்பாடுகள், கொள்கைகள் ஆகியவை வேறுபடலாம். ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை போல, மரத்தின் வேர் போன்று பரமேஸ்வரா என்பது ஒன்றே என்று சனாதனம் கூறுகிறது. அதுவே கடவுள். ரிஷிகளாலும், முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது” என்றார்.

மேலும், “புத்த மதத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளும், தத்துவங்களும் சனாதன தர்மத்திலிருந்து வந்தவையே. இந்தியா ராணுவத்திலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சியடைவதைப் போல, ஆன்மிகத்திலும் வளர்வது முக்கியம். வல்லரசு நாடக நாம் வளர்ந்துவரும் நிலையில், இங்கு தலைமைப் பதவியில் இருப்பவர்கள் ஆன்மிகத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்" என்று ஆர்.என்.ரவி கூறினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநரின் அந்தப் பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. ‘சனாதனத்துக்கு ஆதரவாக அவர் பேசலாம். ஆனால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதைப் பேச வேண்டும்‘ என்ற விமர்சனங்களை முன்வைத்த அரசியல் தலைவர்கள், ‘ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கு ஆதரவாகவும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகவும் பேசலாம்’ என்றார்கள்.

டெல்லி தமிழ் கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆர்.என்.ரவி, ஜி.யு.போப் பற்றியும் திருக்குறளை அவர் மொழிபெயர்த்தது பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசினார். அதாவது, “ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பை பார்த்தீர்களானால், அது ஆன்மா இல்லாத ஒரு சடலம் போல இருக்கும். தடயவியல் கூடத்தில் ஒரு உடலில் எல்லா உறுப்புகளும் இருக்கும். ஆனால், ஆன்மா இருக்காது. ஆன்மா இல்லை என்றால் உடலுக்கு அர்த்தமே கிடையாது. இதைத்தான் ஜி.யு.போப் செய்தார்” என்றார் ஆர்.என்.ரவி. அவரது இந்தப் பேச்சைக் கண்டித்து தமிழறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆர்.என்.ரவி

சமீபத்தில் தமிழ்நாடு பற்றிய ஆர்.என்.ரவியின் பேச்சும் பெரும் சர்ச்சையாக மாறியது. காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தன்னார்வலர்களைப் பாராட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். அப்போது, "பிரதமர் மோடியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதுவும் மிகக் குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது. எல்லாவற்றுக்கும், நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்" என்று ஆர்.என்.ரவி பேசினார்.

தீன்தயாள் உபாத்யாயா சிந்தனைச் சிதறல்கள், தீன்தயாள் உபாத்யாயா ஒருங்கிணைந்த மனிதநேயம் ஆகிய தலைப்பிலான நூல்கள் வெளியீட்டு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, ``சனாதன தர்மம் மிகவும் விரிவானது. தர்மம் என்பதை மதம் என்று நாம் புரிந்து கொண்டுவிட்டோம். அப்படி புரிந்துகொண்டதால் மாபெரும் தவறு செய்துவிட்டோம். டார்வினின் கோட்பாடு , மார்க்ஸின் சித்தாந்தம், இறையியல், ரூசோ கோட்பாடு எல்லாம் இந்தியாவின் தேசியத்துவ வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தின.

ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியாவை கார்ல் மார்க்ஸின் சிந்தனை சிதைத்துப் போட்டது. அந்த சிந்தனை இப்போது புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மார்க்ஸின் சித்தாந்தம், இல்லாதவர்கள் மேலே உயர வேண்டும் என்று கூறுகிறது. இது, இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான மோதலை உருவாக்குகிறது. இது, சமூகத்தில் பிளவுகளுக்கு காரணமாகவும் நிரந்தரமான மோதலையும் உருவாக்கக்கூடியது" என்று ஆர்.என்.ரவி பேசினார்.

மேலும், ``ஜனநாயகத்துக்கு உதாரணமாக ஆபிரகாம் லிங்கனை காட்டுகிற போக்கு இருக்கிறது. டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டைப் பின்பற்றுகிறார்கள். இவை அனைத்துமே நமது மேற்கத்திய அடிமை நிலையின் வெளிப்பாடு. இந்திய பேராசிரியர்கள் ஐரோப்பிய தத்துவத்தை உயர்ந்ததாக தூக்கிப் பிடிப்பது வேதனைக்குரியது" என்றும் ஆளுநர் பேசினார். இந்தப் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களே! ஹிட்லர், முசோலினி, மனு, கோல்வால்கர், கோட்சே போன்றவர்களின் கருத்துக்கு அடிமை என்பதில் சிலருக்கு வெட்கம் இல்லாதபோது... புத்தர், வள்ளுவர், மார்க்ஸ், லிங்கன், டார்வின், அம்பேத்கர், பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதில் எங்களுக்கு பெருமைதான்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மார்க்சியம் குறித்த ஆளுநரின் பேச்சைக் கண்டித்து பிப்ரவரி 28-ம் தேதி ஆளுநர் மளிகை முன்பு கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்திருக்கிறார்.

சு.வெங்கடேசன் ட்வீட்

‘தமிழ்நாடு’ என்பதைவிட ‘தமிழகம்’ என்று குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும் என்ற கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ஒரு விளக்கத்தை ஆர்.என்.ரவி அளித்திருந்தார். அதில், ``காசி, தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை.

தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது. வரலாற்று பண்பாட்டு சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது பேச்சின் அடிப்படை புரியாமல் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாதப் பொருளாகியிருக்கின்றன" என்று ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார். ஆளுநர் தெரிவிக்கும் பெரும்பாலான கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகி, அவற்றுக்கு எதிர்ப்பும் கண்டனமும் விமர்சனமும் தொடர்ந்து எழுந்தாலும், சர்ச்சைக்குரிய பேச்சுகளை அவர் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-the-impact-of-governor-ravi-speaking-on-the-plot-targeting-politics-and-history

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக