விகடனின் "Doubt of Common man" பக்கத்தில் " ஸ்டார்ட் அப் தொடங்குவதற்கான வழிகள் என்ன? முதலீட்டை எங்கெல்லாம் திரட்டலாம்? என்று விகடன் வாசகர் கவின் கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து வெற்றிகரமாக ஸ்டார்ட் அப் நடத்தும் குமரி ஷாப்பி நிறுவனர் தீபினிடம் கேட்டோம். அவர் கூறிய பதில் இதோ...
இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. ஒருகாலத்தில் தொழில்நுட்பம் என்பது இந்தியாவில் புதிதாகத் தொழில் தொடங்குவதற்கு எட்டாக் கனியாய் இருந்தது. ஆனால், இன்று தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் AI என்னும் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் என்று டிஜிட்டல் தளத்தில் பல்வேறு துறைகள் உருவாகியிருக்கின்றன.
இந்த துறைகளின் வளர்ச்சியால் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் தொழில் முறைகளில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு மற்றும் புதிய தொழில் சிந்தனைகள் உருவாகின்றன. இதுவே இந்தியாவில் இன்று புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவதற்கு அடிப்படையாய் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் இருக்கும் தொழில்களில் இந்த தொழிலில் இந்த யுக்தியைப் பயன்படுத்தினால் இன்னும் பெரிய அளவில் இது வெற்றியாகும் என்று நமக்கு தோன்றியதை தொழிலில் செயல்படுத்தினால் அதுவே ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆகிறது. எடுத்துக்காட்டாக எங்கள் குமரி ஷாப்பி நிறுவனத்தில் மாட்டுச்சாணம், செடிகள், விதைகள் என்று மக்களுக்கு தேவையுள்ள, லோக்கலில் கிடைக்கும் பொருட்களையும் நாங்கள் டெலிவரி செய்வோம்.
அதுபோல டெலிவரியும் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் அதிவிரைவாக நாங்கள் செய்தோம். இந்த மாதிரியான புதிய ஐடியாக்களை நாம் தொழிலில் செயல்படுத்த வேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கும் முன் நாம் எந்தத் தொழிலைச் செய்யவிருக்கிறோமோ அதில் மற்றவர்கள் இதுவரை பண்ணாதவற்றை செயல்படுத்தி நம்மை நோக்கி வரும் வாடிக்கையாளர்களுக்கு எளிமையாய், மொபைல் பேமண்ட் போன்ற தொழில்நுட்ப உதவியுடன் புவி சார் குறியீட்டு எண் போன்ற சர்வதேச அளவில் யோசித்து அவற்றை ஒருங்கிணைத்து நல்ல தொழில் நிறுவனமாக கட்டமைக்க வேண்டும்.
அதுவே நமக்கு பாதி வெற்றியைத் தரும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பொறுத்த வரையில் லாபம் ஈட்ட குறைந்தது இரண்டு வருடங்களாவது ஆகும். அதுவரை நாம் களத்தில் நிற்க வேண்டும். இன்று எடுத்துக்காட்டாக 10 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஓராண்டில் தொடங்கப்பட்டால், அடுத்த ஆண்டு அந்த 10 நிறுவனங்களில் 2 நிறுவனங்களே களத்தில் நிலைத்திருக்கின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க எண்ணுபவர்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஸ்டேபிலாக நிற்பதற்கேற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டு அதன்பின் தொழிலில் இறங்க வேண்டும். தொழிலில் நமது நிலைத்திருக்கும் தன்மையே நமக்கு முதலீட்டை ஈட்டிக் கொடுக்கும்.
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் தொடங்குவதற்கு உதவி செய்யும் வகையில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் & இன்னோவேஷன் மிஷன் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இதுவரை 5225க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக இந்த அமைப்பு உதவியுள்ளது. ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்படுவதில் ஆரம்பித்து பிராண்டிங் வரை இந்த அமைப்பு நமக்கு உதவி செய்யும்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!
ஸ்டார்ட் அப் நிறுவனமோ அல்லது வேறு எந்த பிசினஸோ நாம் செய்தால் அதற்காக கடன் வாங்கிச் செய்வதை தடுக்க வேண்டும். கையிருப்பைத் தாண்டி செலவுகள் அதிகமானால் நிதியாளர்களிடம் பணம் வேண்டி அணுகலாம். அதுபோலவே ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவி செய்ய வென்ச்சர், ஏஞ்சல் போன்ற முதலீட்டு அமைப்புகளும் உள்ளன. இன்றைய காலக்கட்டத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்கே இன்குபேஷன் சென்டர் என்றுள்ளன.
ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு தேவையான ஐடியா மட்டும் இருந்தாலே அவர்கள் நம்மை வழிநடத்துவார்கள். நல்ல ஐடியாஸ் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசே பத்து இலட்சம் முதல் ஐம்பது இலட்சம் ரூபாய் வரை மானியமாக கொடுக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க வேண்டும் என்று நினைத்து நல்ல பிளானிங்குடன் நாம் இறங்கினால் நம் கையைத் தூக்கி மேலே கொண்டு வரவே பல நிறுவனங்கள் உள்ளன. எனவே ஸ்டார்ட் அப் தொடங்க எண்ணுபவர்கள் எந்த பயமும் இல்லாமல் தாராளமாய் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்!" என்றார்.
இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!
source https://www.vikatan.com/business/doubt-of-common-man-what-are-the-ways-to-start-a-startup
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக