சஞ்சீவினி கோப்ர்டே என்ற பெண், கடந்த 04.02.2023 அன்று கொடைக்கானலுக்கு சென்று விட்டு, அவரது இருப்பிடமான கூக்காலுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இரவு 7 மணியளவில் கூக்கால் ரோடு, இடும்பன்கரை முனீஸ்வரர் கோவில் அருகே, இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்தவர்கள் காரை வழி மறித்துள்ளனர். காரின் முன் சீட்டில் ஒருவரும், பின் சீட்டில் ஒருவரும் ஏறியதால், அப்பெண் சத்தமிட்டார். அப்போது, அவரின் முடியைப் பிடித்து இழுத்து, ஆபாச வார்த்தைளில் பேசியுள்ளனர். அப்பெண்ணின் வாயை மூடி, அவரது ஆடையை இழுத்து துன்புறுத்தியுள்ளனர். அந்த நேரம், அவ்வழியே வந்த இருவரைக் கண்டதும், குற்றவாளிகள் தப்பியோடியுள்ளனர்.
குற்றவாளிகள் மீது இந்திய தண்டைனைச் சட்டப்பிரிவுகள் 341,294(b), 323,354(A) மற்றும் TNPHW சட்டப்பிரிவு 4-இன் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 05.02.2023 அன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கடந்த 07.02.2023 அன்று அவர்கள் மீது குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 10.02.2023 அன்று நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்பட்டு, 13.02.2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, சம்பவம் நடந்த பத்து நாள்களில், குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட 7 நாளில், தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். பெண்கள் மீதான வன்முறைக்கெதிரான வழகில், அதிவிரைவில் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பில், கொடைக்கானல் நீதித்துறை நடுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விவாதித்துள்ளார். தீர்ப்பில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது...
“ஒவ்வொரு முறையும் பெண் தனக்காக நிற்கும்போது, அது சாத்தியமா என்று தெரியாமல், அவள் எல்லா பெண்களுக்காகவும் நிற்கிறாள். சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து நமது சமூகத்தை பாதுகாப்பதற்கும் நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை, ஒருபோதும் மன்னிக்க முடியாதவை, ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாதவை.
பெண்களை ஒரு சமூகம் நன்றாக நடத்தினால் மட்டும் போதாது. எல்லா ஆண்களும் பெண்களை நன்றாக நடத்துகிறார்களா என்பதை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்பதுதான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைவதற்கான வழி என்று இந்த நீதிமன்றம் உறுதியாக நம்புகிறது" என்று கூறியதோடு, குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா 20,000 ரூபாய் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இது குறித்து, மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ``பெண்கள் சம்பந்தமான பாலியல் சீண்டல் வழக்குகளில் வெளிவந்த தீர்ப்புகளில், இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறையை கலாசாரம், ஒழுக்கம் என்னும் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடாது. இப்படியான வன்முறைகள் பொறுத்துக் கொள்ளமுடியாதவை என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு எப்படி இருக்குமோ, அவ்வளவு ஆழத்தோடும், சமூகக் கண்ணோட்டத்தோடும், முற்போக்குச் சிந்தனையோடும் இந்தத் தீர்ப்பு உள்ளது. நான் அறிந்தவரையில், உயர் நீதிமன்றங்களில் கூட இத்தனை ஆழத்துடன் தீர்ப்புகள் எழுதுவதில்லை” என்றார்.
- நிலவுமொழி செந்தாமரை
source https://www.vikatan.com/government-and-politics/judiciary/harassments-against-women-judge-s-verdict-within-10-days
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக