குடியிருப்பு வளாகங்களில் ஃபிளாட் வைத்திருக்கும் மூன்றில் இரண்டு பங்கு உரிமையாளர்கள் இசைவு இருந்தால் அப்பார்ட்மென்ட் புதுப்பிக்கப்படவோ, மொத்த வளாகத்தையும் இடித்து புதுக்கட்டடம் உருவாக்கப்படவோ அனுமதி வழங்கப்படும் என்ற தமிழக அரசு கொண்டு வந்த மாற்றத்துக்கான சட்ட வரையறைக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அப்பார்ட்மென்ட் ஓனர்ஷிப் ஆக்ட் 1994
முன்னதாக தமிழக அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியால் கொண்டுவரப்பட்ட, ``தமிழ்நாடு அப்பார்ட்மென்ட் ஓனர்ஷிப் ஆக்ட் - 1994-ல்'' சென்ற 2022-ம் ஆண்டு இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டிருந்தது. இந்தச் சட்ட வரையறைக்கான அனுமதி தற்போது கிடைக்கப்பட்டுள்ளது.
நமது தமிழ்நாட்டில் அப்பார்ட்மென்டுகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அவ்வாறு கடந்த காலங்களில் கட்டப்பட்ட பல கட்டடங்கள் சரியாகப் பராமரிக்கப்படாமலும், பழுதடைந்தும் உள்ளது. மேலும், பழைய அப்பார்ட்மென்ட் வளாகங்கள் நகரின் மத்திய பகுதிகளில் இருந்தாலும், இரண்டு அல்லது மூன்று அடுக்கு கொண்ட வளாகங்களாக உள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்
அந்த வளாகங்களை வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு நிலப்பரப்பின் உரிமை (UDS) பொதுவாக அதிகமாக இருக்கும். தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இது போன்ற அப்பார்ட்மென்ட் உரிமையாளர்களிடமிருந்து வளாகங்களை வாங்கி பெரிய வளாகங்களை உருவாக்கி வருகின்றன.
அவ்வாறு நடைபெறும்போது பழைய உரிமையாளர்களுக்கு புது ஃபிளாட் உட்பட பல்வேறு சலுகைகள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. ஆனால், தற்போது ஒரு குடியிருப்பு வளாகத்தில் உள்ள பத்து உரிமையாளர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அந்தக் கட்டடத்தில் மாற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது. இனி மூன்றில் இரண்டு பங்கு உரிமையாளர்கள் சம்மதம் தெரிவிக்கும்பட்சத்தில் கட்டிடங்களில் மாற்றங்களை மேற்கொள்ள முடியும்.
நகரங்களில் நிலத்துக்கான தேவை அதிகமாக உள்ளது. தேவைக்குப் போதுமான இடமில்லாத காரணத்தால் நிலத்தின் விலை மிக அதிகமாக உள்ளது. தற்போது இந்த மாற்றத்தின் மூலம் நகரின் மத்திய பகுதிகளில் பல்லடுக்கு அப்பார்ட்மென்ட் வளாகங்கள் பெருகுவதற்கு வாய்ப்புள்ளது. இது நகரின் வீட்டுத் தேவைக்கு மிகுந்த பயனளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
என்றாலும், இந்த மாற்றங்கள் நடைபெறுவதற்கு அந்த அப்பார்ட்மென்ட் வளாகத்தில் குறைந்தபட்சம் நான்கு வீடுகள் இருக்க வேண்டும். அந்த வளாகத்தில் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் நடைமுறையில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த மாற்றம் செல்லுபடி ஆகும்.
தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது ரியல் எஸ்டேட் துறையின் விருப்பமாக உள்ளது. வீட்டை இடித்து கட்டுவதற்கு உரிமையாளர்கள் மறுக்கும் பட்சத்தில் அவர்களின் இசைவுக்கு எதிராக அப்பார்ட்மென்ட் வளாகம் இடிக்கப்பட்டால் அவர்களுக்கு எவ்வாறு நஷ்ட ஈடு வழங்குவது என்பது போன்ற விதிமுறைகளையும் தெளிவாக உருவாக்கப்பட வேண்டும்.
இந்த மாற்றம் நிச்சயம் நகரில் புதிய வீடுகளைக் கட்டுவதற்கு உதவிகரமாக இருக்கும். அதைச் சரியான முறையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் நடைமுறைப்படுத்துவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/tamil-nadu-apartment-owners-act-amendment-president-approves
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக