பாரத் ஜோடோ யாத்திரை முடிந்த பிறகு, முதன் முறையாக கேரள மாநிலத்துக்குச் சென்றார் ராகுல் காந்தி. தனது தொகுதியான வயநாட்டுக்குச் சென்ற ராகுல் காந்தி எம்.பி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். கடந்த மாதம் புலி தாக்கியதால் மரணமடைந்த விவசாயி தாமஸ் குடும்பத்தையும், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிலர் சேர்ந்து தாக்கியதைத் தொடர்ந்து தூக்கில் தொங்கி இறந்த ஆதிவாசி இளைஞரான விஸ்வநாத் குடும்பத்தினரையும் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். பின்னர் நேற்று இரவு வயநாட்டில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பேசுகையில், "அதானி, மோடி குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசியது அனைத்தும் உண்மை. நான் நாடாளுமன்றத்தில் மரியாதையான வார்த்தைகளால்தான் பேசினேன், யாரையும் அவமானப்படுத்தவில்லை. ஆனால் என்னுடைய பேச்சை அவர்கள் நாடாளுமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டனர்.
பிரதமர் என்னை தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தினார். பதில் சொல்வதற்கு பதிலாக, தனிப்பட்ட முறையில் என்னை விமர்சித்தார். ஆனால் அந்தப் பேச்சை நாடாளுமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கவில்லை. எங்கள் இருவரின் உடல்மொழியைப் பார்த்தே உண்மை பேசியது யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். ஒருநாள் அவர் உண்மையை நேருக்கு நேர் சந்தித்துதான் ஆகவேண்டும். தன்னைக் கண்டு அனைவரும் பயப்படுவதாக பிரமர் மோடி நினைத்துக்கொண்டிருக்கிறார். எனக்கு அவரைக் கண்டு பயம் இல்லை.
அதானிக்காக விதிகள் மீறப்படுகின்றன. மோடியின் அனைத்து வெளிநாட்டு பயணங்களின்போதும் அதானியும் உடன் செல்கிறார். பிரதமர் பயணத்தின்போது அதானி உடன் செல்வது எப்படி... நாட்டில் உள்ள விமான நிலையங்களை எல்லாம் அதானி வாங்குவது எப்படி... பிரதமருடனான பந்தம்தான் அனைத்துக்கும் காரணம். கேரளாவில் வன விலங்குகள் தாக்குதலிலிருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/rahul-gandhi-slams-pm-modi-in-vayanad-of-kerala
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக