அதானி விவகாரம் குறித்துத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தால் நாடாளுமன்ற அவைகளே முடங்கின. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கிடையே உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, அதானி விவகாரம் குறித்து வாய்திறக்காதது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
இதற்கிடையே, ``தற்போதைய வெளியுறவுக் கொள்கை அதானியின் வணிக மேம்பாட்டுத் துறையாகவே இருக்கிறது. அதானியுடன் எத்தனை முறை ஒன்றாகப் பயணம் செய்திருக்கிறீர்கள்?" என மோடியை நோக்கி கேள்விகளைத் தொடுத்தார் ராகுல். கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க-வுக்கு அதானி எவ்வளவு நிதி வழங்கியிருக்கிறார் எனக் கேள்வியெழுப்பிய ராகுல், பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அதானிக்கு அதிக கடன் வழங்கப்பட்டதாகவும், அதனால்தான் அதானி குழுமத்தின் வர்த்தகம் முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் சாடினார்.
`` `இலங்கை காற்றாலை மின்சாரத் திட்டத்தை அதானிக்கு வழங்க வேண்டும்' என இலங்கை முன்னாள் பிரதமர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக இலங்கை மின்சார வாரிய தலைவர் நாடாளுமன்ற விசாரணைக் குழுவில் தெரிவித்திருக்கிறார்" என்பதை நாடாளுமன்றத்தில் காட்டமாகத் தெரிவித்தார் எம்.பி ராகுல் காந்தி.
அதேபோல, ``ஒன்றிய அரசு அதானிக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாக இருப்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது. அதானி குறித்துப் பேசினால் தேசத்துக்கு எதிரானவர்களாகச் சித்திரிக்கப்படுகிறோம். அதானியை எதிர்த்துப் பேசுவது எப்படி இந்தியாவை எதிர்த்துப் பேசுவதாக ஆகும்?" என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார் எம்.பி கனிமொழி. எம்.பி-க்கள் ராகுல் காந்தி, கனிமொழியைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, திருச்சி சிவா, காங்கிரஸ் எம்.பி-க்கள் சிலரும் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
நாடாளுமன்ற அவையில் பா.ஜ.க அரசு செய்தவற்றையும், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் பற்றிய விமர்சனத்தை மட்டுமே முன்வைத்துப் பேசினார் பிரதமர் மோடி. அதானி குறித்த எந்த ஒரு கருத்தையும் அவர் பேசவில்லை. இது தொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எம்.பி ராகுல் காந்தி, அதானி விவகாரங்களைப் பற்றி பேசாததைக் குறிப்பிட்டு பிரதமர் மோடியை விமர்சித்தார்.
”நான் எந்த கடினமான கேள்வியையும் கேட்கவில்லை. அதானி உங்களுடன் எத்தனை முறை பயணித்தார்... எத்தனை முறை நீங்கள் அவரை சந்தித்திருக்கிறீர்கள்... அதானி உங்கள் நண்பர் இல்லையெனில், அதானிமீது விசாரணை நடத்தப்படும் என நீங்கள் கூறியிருக்க வேண்டும். ஆனால், அதானி குறித்து நீங்கள் பேசவில்லை. இதன் மூலம் அதானி உங்கள் நண்பர் என்பது தெளிவாகிறது” என்றார் ராகுல் காந்தி.
இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், “அதானி செய்திருக்கும் மோசடிகள் குறித்து 12 மணி நேரம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசியிருக்கின்றன. ஆனால், பிரதமர் மோடி அது குறித்து வாய்திறக்காமல் எதிர்க்கட்சிகளை விமர்சித்திருக்கிறார். பிரதமர் மோடியால் அதானி விவகாரம் குறித்து பதில் சொல்லவே முடியாது. இந்த அரசாங்கத்தின் வேலையே கார்ப்பரேட் நிறுனவங்களைப் பாதுகாப்பதும், அவர்கள் நலன் சார்ந்து இயங்குவதும்தானே. உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி பத்து ஆண்டுகளுக்கு முன்பு 609-வது இடத்திலிருந்தவர், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பட்டியலில் அதன் உச்சிக்கு எப்படி வர முடிந்தது... லெட்டர் பேடு நிறுவனங்களை வைத்து மோசடி செய்த அதானியின் வளர்ச்சிக்கு மோடி அரசினுடைய ஆதரவு, உதவி மற்றும் பிரதமரின் தனிப்பட்ட உதவிகளின்றி இந்த நிலைக்கு அதானியால் வரமுடியாது. ஆகவேதான் பிரதமர் மோடி அதானி விவகாரம் குறித்துப் பேசாமலிருக்கிறார்" என்றார்.
தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி நம்மிடம் பேசுகையில், ``கம்யூனிஸ்ட்டுகள் இந்த நாட்டை பிடித்த கொடிய நோய். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதானி விவகாரத்தில் நாட்டுக்கு எந்த இழப்பும் இல்லை. இது இரு தனியார் நிறுவனங்களுக்கிடையேயான பிரச்னை. அதற்கு அவர்கள் பதில் தந்துவிட்டார்கள். நாடாளுமன்றத்தில் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் நாட்டின் பாதுகாப்புகள் குறித்தும் பேசுவதை விட்டுவிட்டு, தனியார் நிறுவனங்களின் மூலம் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் பேசுகிற இடைத்தரகர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
`அதானியை பா.ஜ.க அரசு பாதுகாக்கிறது' என்ற கனிமொழி எம்.பி-யின் விமர்சனம் குறித்துக் கேட்டோம். அதற்கு பதிலளித்தவர், ``அதானியை பா.ஜ.க காப்பாற்றுகிறது என்றால், இங்கே தொலைக்காட்சி ஒன்றையும், சினிமா ப்ரொடக்ஷன் நிறுவனம் ஒன்றையும் பாதுகாப்பது யார்?" என்றார் காட்டமாக.
source https://www.vikatan.com/government-and-politics/politics/allegations-of-opposition-parties-and-silence-of-central-bjp-government-on-adani-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக