Doctor Vikatan: என் 6 வயதுக் குழந்தைக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் பாதிப்பு வருகிறது. குழந்தையின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க மருந்துகள் கொடுக்கலாமா? காய்ச்சல் அடிக்கும்போது தயிர்சாதம் கொடுக்கலாமா?
சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள்நல மருத்துவர் பத்மப்ரியா.
குழந்தையின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க மருந்துகள் இருக்கின்றனவா என்ற கேள்வி பல பெற்றோர்களுக்கும் இருக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதில் உணவுகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும்தான் பெரும்பங்கு இருக்கிறது.
எனவே உங்கள் குழந்தைக்கு தினமும் சரிவிகித உணவு கொடுத்துப் பழக்குங்கள். சரிவிகித உணவு என்றால் அதில் காய்கறிகள், பழங்கள், நட்ஸ், அசைவ உணவுக்காரர்கள் என்றால் முட்டை என கொடுத்துப் பழக்குங்கள். குழந்தைகள் விஷயத்தில் அவர்கள் நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதை ஒரேடியாகத் தடை செய்ய முடியாது.
எனவே, என்றோ ஒருநாள் அவர்கள் விரும்பும் நொறுக்குத்தீனிகளைக் கொடுக்கலாம். ஆனால் அந்த உணவுகளைத் தெருவோரக் கடைகளிலும், சுகாதாரமற்ற கடைகளிலும் வாங்கிக் கொடுப்பதை அறவே தவிர்த்துவிடுங்கள்.
அதுபோன்ற கடைகளில் புதிய எண்ணெயைப் பயன்படுத்துவார்களா என்பது சந்தேகமே... பலமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
தவிர அவர்கள் சமைக்கப் பயன்படுத்தும் பொருள்களின் தரம் எப்படிப்பட்டது என்பதும் தெரியாது. சமைக்க உபயோகிக்கும் நீரில் எலியின் சிறுநீர் கலந்திருந்தால் அது லெப்டோஸ்பைலோசிஸ் (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சலைக்கூட ஏற்படுத்தலாம். தவிர டைபாய்டு உள்ளிட்ட பாதிப்புகளும் வரலாம். வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்னைகள் வரலாம்.
எனவே எப்போதும் வீட்டிலேயே ஃப்ரெஷ்ஷாக தயாரிக்கப்பட்ட உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்தாலே நோய் எதிர்ப்புத்திறன் சிறப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். சூப் போன்ற திரவ உணவுகளைக் குடிக்கவும் பழக்குங்கள்.
தயிரிலும் மோரிலும் உள்ள புரோபயாட்டிக் கிருமிகள் குடலுக்கு நன்மை செய்யக்கூடியவை. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடியவை. குழந்தைக்கு காய்ச்சலடிக்கும்போது தயிர், மோர் கொடுக்கலாமா என்று பல பெற்றோர் கேட்கிறார்கள். தாராளமாகக் கொடுக்கலாம். ஃப்ரிட்ஜில் வைக்காத, அறை வெப்பநிலையில் உள்ள தயிர், மோர் கொடுப்பதில் பிரச்னையே இல்லை.
காய்ச்சலின்போது தயிர்சாதம், வாழைப்பழம் எல்லாம் கொடுத்தால் ஜன்னி வந்துவிடும், சளி பிடித்துவிடும் என்றெல்லாம் பயப்படுகிறார்கள். இதெல்லாம் மூட நம்பிக்கையே. அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாதவை. வைட்டமின் சி அதிகமுள்ள கொய்யா, சாத்துக்குடி போன்றவற்றையும், வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ள பப்பாளி, மாம்பழம், கேரட் போன்றவற்றையும், கீரைகளையும் கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்புத்திறனை இயற்கையாகவே மேம்படுத்தலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/doctor-vikatan-can-you-give-curd-rice-to-children-when-they-have-fever
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக