Ad

புதன், 15 பிப்ரவரி, 2023

பிரபாகரன் விவகாரம்: `சீமான் முதல் அழகிரி வரை!' - அரசியல் தலைவர்களின் கருத்துகள்

தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், தஞ்சாவூரிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கடந்த 13-ம் தேதி 'விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய உண்மை அறிவிப்புகள்' என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், "சர்வதேச சூழலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழ் ஈழ தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியிருக்கின்றன.

இந்தச் சூழலில் தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். விரைவில் அறிவிப்பார, தமிழ் ஈழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் பிரபாகரன் அறிவிக்கவிருக்கிறார். தமிழ் ஈழ மக்களும், உலக தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

பிரபாகரன்

விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம்வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்த காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்பு தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.

சீனா

இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப்பார்த்து, அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம். இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும், தமிழ்நாடு மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனுக்கு துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- "விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி. அவர் வந்தால் நான் சந்திப்பேன்."

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ:- "தமிழ் ஈழ தாயகத்தை மீட்பதற்கு ஈழ விடுதலை போர்க்களத்தில் பிரபாகரனோடு களத்தில் நின்ற போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் பழ.நெடுமாறன் வெளியிட்டிருக்கும் செய்தியை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் கூறியபடி பிரபாகரன் நலமுடன் இருந்தால், அதைவிட உலக தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது."

கே.எஸ்.அழகிரி

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்:- "பிரபாகரன் கொல்லப்பட்டார் என அறிவித்தபோதே, அவர் உயிருடன் இருக்கிறார் என பழ.நெடுமாறன் சொன்னார். அதை 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் சொல்லியிருக்கிறார். ஆனால் புதிதாக எந்த ஆதாரத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை. பிரபாகரன் உயிரோடு இருந்தால் அவரே வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அண்ணன் இருந்தால் வருவார். வந்தால் மகிழ்வோம்."

முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்:- ``விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை எந்தக் கருத்தையும் ஆதாரமில்லாமல் சொல்லமாட்டார். மூத்த அரசியல் தலைவர். அவர் கூறுவதுபோல் பிரபாகரன் உயிரோடு இருந்தால் மிக்க மகிழ்ச்சி."

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:- "என் தம்பி சின்னவன் பாலச்சந்திரனை பலி கொடுத்துவிட்டு, என் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பிப்போயிருப்பார் என்று நினைக்கிறீர்களா... எந்தச் சூழ்நிலையிலும் நான் இந்த மண்ணைவிட்டு செல்ல மாட்டேன் என்று வீரமாக நின்று சண்டை செய்தவர் என் அண்ணன். அவர் தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகிற கோழை என்று நீங்கள் என் அண்ணனை நினைக்கிறீர்களா... போர் முடிந்து பேரழிவினை நாங்கள் சந்தித்தப் பிறகு, பத்திரமாக ஓர் இடத்தில் பதுங்கி இருப்பார். எதுவும் பேசாமல் இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா...

வந்துவிட்டுச் சொல்வார்... சொல்லிவிட்டு வருகிறவர் இல்லை எங்கள் அண்ணன். வந்துவிட்டுச் சொல்வார். அதுதான் அவருக்கு பழக்கம். அவரை அறிந்தவர் நன்கு அறிவார்கள். ஒரு நாள் மக்கள் முன் தோன்றுவார் என்று அவர்கள் சொல்கிறார்கள். தோன்றும்போது பேசுவோம். பெரியாரிடம், கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே, கடவுள் நேரில் வந்தால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டார்கள். `வந்தால் கடவுள் இருக்கிறார் என்று சொல்வேன்' என்றார். பழ.நெடுமாறன் கூறுவதுபோல எங்கள் தலைவர் ஒருநாள் வந்துவிட்டால், வந்ததிலிருந்து பேசுவோம்."



source https://www.vikatan.com/government-and-politics/politics/political-leaders-comments-on-the-pazha-nedumarans-latest-info-about-the-prabhakaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக