Doctor Vikatan:எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் தினமும் இரவு உணவுக்கு சூப் மட்டும் எடுத்துக்கொள்ளலாமா? கடைகளில் கிடைக்கும் சூப் மற்றும் ரெடிமேட் சூப் குடிக்கலாமா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் சூப், பாக்கெட் சூப் வகைகளை அவசியம் தவிர்த்துவிடவும். அவற்றில் சோடியம் அளவு மிக அதிகமாக இருக்கும். நிறமியும் ப்ரிசர்வேட்டிவ்களும் சேர்க்கப்பட்டிருக்கும். அவையும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. அதிக அளவு சோடியம் எடுத்துக் கொள்ளும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள், இரவு உணவுக்கு பதில் சூப் குடிக்கலாம். ஆனால் அதை எப்படிக் குடிக்க வேண்டும் என ஒரு முறை இருக்கிறது. இரவு 7-7.30 மணி அளவில் கெட்டியான சூப் எடுத்துக்கொள்ளலாம். புரொக்கோலி, கேரட், பீட்ரூட் என காய்கறிகள் சேர்த்த கெட்டியான சூப் எடுத்துக்கொள்ளலாம். சூப் கெட்டியாவதற்கு கார்ன்ஃப்ளார் சேர்க்கக்கூடாது. கடைகளில் விற்கப்படும் சூப்புகளில் கார்ன்ஃப்ளார் சேர்க்கப்படுவதால் அதையும் தவிர்த்துவிடவும். சூப்பை கெட்டியாக்க சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து மசித்துச் சேர்த்துக் கொள்ளலாம்.
சூப்பில் காய்கறிகளின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். ரொம்பவும் நீர்க்க இருக்கும்படியான சூப் குடித்தால் மீண்டும் 9 மணிக்கெல்லாம் பசியெடுக்கும். எனவே கால்கிலோ அளவுக்கு காய்கறிகள், விருப்பப்பட்டால் அத்துடன் வாரத்தில் 2-3 நாள்களுக்கு சிறிது பருப்பு, சன்னா போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். சூப்பில் உள்ள காய்கறிகளை நன்கு மென்று விழுங்க வேண்டும். இப்படி சூப் தயாரித்துக் குடிக்கும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். எடைக்குறைப்பு முயற்சியும் பலன் தரும்.
உங்களுக்கு பி.எம்.ஐ அளவு 30-க்கு மேல் இருக்கும்போது நீங்கள் இரவுக்கு சாப்பாடு தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. 350 முதல் 400 மில்லி அளவுக்கு மேற்குறிப்பிட்டபடியான சூப் குடிக்கலாம். சிட்டிகை அளவு மட்டுமே உப்பு சேர்க்க வேண்டும். விருப்பப்பட்டால் மிளகுத்தூளும் ஒரிகானோ போன்ற மூலிகைகளும் சேர்த்துக் கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/doctor-vikatan-does-having-soup-for-dinner-help-in-weight-loss
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக