Ad

வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

தோற்றத்தைக் கெடுக்கும் பல் வரிசை... தீர்வு தரும் நவீன சிகிச்சைகள்! |வாய் சுகாதாரம்- 7

வாய் சுகாதாரம் குறித்து அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக நமக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காண்பதே இத்தொடரின் நோக்கம். பல் மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, தனியார் பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியர் பா.நிவேதிதா, விகடன் வாசகர்களுக்காக இத்தொடரை எழுதி வருகிறார். இந்த வாரம் பற்களின் அமைப்பு, அதில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்யும் முறைகள் குறித்து விளக்குகிறார்.

அழகான பல் வரிசை, வசீகரமான முக அமைப்பு மற்றும் இனிமையான புன்சிரிப்பு - இவைதான் அனைவரின் விருப்பமும். இதற்கென்று பல் மருத்துவத்தில் தாடை, பல் சீரமைப்புத் துறை மற்றும் தாடை, பல் அறுவை சிகிச்சைத் துறைகள் இருக்கின்றன.

பா.நிவேதிதா | பல் மருத்துவத்துறை இணை பேராசிரியர்

சிலருக்கு, தாடையில் பற்கள் முன்னும் பின்னுமாக இருக்கும். வேறு சிலருக்கு தாடை எலும்போடு சேர்ந்து பற்களும் முன்னோக்கி நகர்ந்திருக்கும். இன்னும் சிலருக்கோ மேல்தாடையில் பற்கள் மட்டும் முன்னோக்கி இருக்கும். மேலும் சிலருக்கு அப்படியே நேரெதிராக கீழ்த்தாடையின் பற்கள் மற்றும் எலும்புகள் முன்னோக்கி இருக்கும். பற்களுக்கு இடையே இடைவெளி இருக்கும் அல்லது ஒன்றோடொன்று இடித்துக் கொண்டு இருக்கும். இவை அனைத்தும் சிறிய குறைபாடுகள் தான். சரிசெய்து விடலாம்.

பல் அமைப்பில் உள்ள குறைபாடு

பொதுவாக பல் அமைப்பில் குறைபாடு என்பது சிறிய வயதில் விரல் சூப்புவதாலோ, நாக்கைத் துருத்திக்கொள்வதாலோ, நகம் கடிப்பதாலோ ஏற்படலாம் அல்லது மரபு வழியாகவும் கடத்தப்படலாம். இப்படி மரபு வழியாக குறைபாடு உண்டாகும்பட்சத்தில், தாடை எலும்போடு பற்களும் சேர்ந்து முன்னோக்கி நகர்ந்திருக்கும். இது தவிர ஹார்மோன் கோளாறுகள், சிலவகை ரத்தசோகை (anemia) மற்றும் ஏதாவது விபத்து ( trauma) போன்ற காரணங்களாலும் பல் அமைப்பில் குறைபாடுகள் இருக்கலாம். இவை அனைத்தையுமே க்ளிப் (clip) மூலமாகவோ, அறுவை சிகிச்சை மூலமாகவோ சரி செய்து விடலாம்.

பற்களுக்கு நடுவில் இடைவெளி

பெரும்பாலானோருக்கு ஏற்படும் கேள்வி, பல்வரிசை சீரமைப்பிற்கான சிகிச்சையை எந்த வயதில் தொடங்க வேண்டும் என்பதுதான். குறைபாட்டின் தீவிரத்தைப் பொறுத்து அது நபருக்கு நபர் வேறுபடும். சில நேரங்களில் தாடை எலும்பில் குறைபாடு இருப்பின் 8 வயதில் இருந்து 11 வயது வரை முன்னேற்பாடாக வாயில் சில கருவிகளை மருத்துவர் பொருத்துவர். இதை myofunctional appliance என்று கூறுவர். அதன் பிறகு வாயிலேயே கழற்றமுடியாதபடி ஒரு க்ளிப் பொருத்துவர்.

க்ளிப் வகைகளும் தேவையும்

பொதுவாக பல்வரிசை சீரமைப்பில், கழற்றிமாட்டும் படியான க்ளிப் மற்றும் வாயிலேயே இருக்கும் நிரந்தர வகையிலான க்ளிப் என இரு வகை உண்டு. கழற்றி மாற்றும் க்ளிப் என்பது, பல் அமைப்பின் குறைபாடு சிறியதாக இருப்பின் பரிந்துரைக்கப்படும். குறைபாடுகள் பெரியளவில் இருப்பின் நிரந்தர வகை க்ளிப் பரிந்துரைக்கப்படும். இதைத் தவிர சில நேரங்களில் அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படும். முக அமைப்பில் தீவிர மாற்றம் வேண்டுவோருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

கழற்றி மாட்டும் க்ளிப்

சில சமயங்களில் நிரந்தர வகையான க்ளிப் சிகிச்சையின் போது, சிகிச்சையின் ஒருபகுதியாக, தாடையின் இடப் பற்றாக்குறையை போக்க ஒன்றிரண்டு பற்களை அகற்ற வேண்டியிருக்கும். இதனால் பல் அமைப்பில் எந்த பாதிப்பும் இருக்காது. எனவே தயங்க வேண்டாம். அதைப்போல கழற்றி மாட்டும் பற்களுக்கான சிகிச்சை கால அளவு 6 மாதங்களில் இருந்து ஒரு வருடம் ஆகலாம். நிரந்தர வகையான க்ளிப் சிகிச்சைக்கு ஒன்று முதல் ஒன்றரை வருடம் வரை ஆகலாம். இது குறைபாட்டின் தீவிரத்திற்கேற்ப இருக்கும்.

சிகிச்சையின் போது வாய் மற்றும் பல் சுகாதாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் பிரத்யேக பிரஷ் (orthodontic tooth brush) கொண்டே பற்களைத் தேய்க்க வேண்டும். சாப்பிடும்போது பற்களுக்கு இடையில் உணவு மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல ஈறுகளின் ஆரோக்கியத்திலும் கவனம் வேண்டும். வாய் சுகாதாரத்தில் கவனம் செலுத்தாவிட்டால், சிகிச்சையின் முடிவில் பல் வரிசை அழகானாலும் ஈறுகள் பலவீனமாகவும் பற்கள் சொத்தையோடும் காணப்படும். நிரந்தர வகை க்ளிப் சிகிச்சையின் தொடக்கத்தில் பற்களிலும், ஈறுகளிலும் சிறிய அளவிலான அசௌகர்யமும், வலியும் இருக்கலாம். இது 4- 5 நாள்களில் சரியாகிவிடும். அதோடு சிலவகை கடினமான உணவு சாப்பிடுவதில் கட்டுப்பாடுகள் இருக்கும். அதை சகித்துக் கொள்ள வேண்டும்.

நிரந்தரமாக மாட்டும் க்ளிப்

பல் வரிசையை சீர்படுத்தும் சிகிச்சையை எந்த வயதிலும் தொடங்கலாம். அதாவது 30 வயதிலும் தொடங்கலாம். ஈறுகளும், எலும்புகளும் ஆரோக்கியமாக இருந்தால் போதும். இதை எக்ஸ் ரே மூலம் மருத்துவர் உறுதிப்படுத்துவர். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், செராமிக், அக்ரிலிக் என பல விதங்களில் பற்களில் க்ளிப் பொருத்திக்கொள்ளலாம். நம் தனிப்பட்ட தேவைகளையும் , விருப்பத்தையும் பொறுத்தது அது. செராமிக் வகை கண்ணுக்குத் தெரியாமல் வாயில் பொருந்தி இருக்கும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வகை என்றால் கண்ணுக்குத் தெரியும் விதத்தில் இருக்கும்.

சமீப காலத்தில்'இன்விசிபிள் அலைனர்ஸ்' (invisible aligners) என்றொரு புது வகை சிகிச்சை முறை நடைமுறையில் இருக்கிறது. இதை அணிந்திருப்பதே கண்ணுக்குத் தெரியாது.

invisible clip

ஞானப்பல்லைப் பிடுங்கலாமா?

வாய், பல் மற்றும் தாடை அறுவை சிகிச்சைத்துறையில், தாடை எலும்பு முறிவுக்கான சிகிச்சை, பற்களைப் பிடுங்குதல், புற்றுநோய் கட்டி நீக்கும் அறுவை சிகிச்சை என்று மிக முக்கியத்துவம் வாய்ந்த பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஞானப்பல் (Wisdom teeth), 18 – 24 வயது வரை தாடையில் முளைக்கும். தாடையில் இடம் இல்லையென்றால் அது சரியானபடி முளைக்காமல் சாய்வாக இருக்கும். அந்த நேரத்தில் பல் முளைக்கும் இடத்தைச் சுற்றி உள்ள ஈறுகளில் வலி மற்றும் வீக்கம் இருக்கும், வாயைத் திறக்க முடியாது.

மருத்துவரின் அறிவுரையின் பேரில் எக்ஸ் ரே எடுத்துப் பார்த்துவிட்டு அது நிச்சயமாக சரியான விதத்தில் தாடையில் முளைக்காது என்பது உறுதியானால், அதை சீக்கிரமே பிடுங்கி விடுவதே நல்லது. வயது ஆக ஆக அதனால் பிரச்னைகள்தான் உண்டாகும்.

நிறைவாக, இந்த வாரத்தின் Take home message... ஐந்து வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு விரல் சூப்பும், நாக்கு துருத்தும் பழக்கம் இருந்தால் அதை அறிவியல் முறையில் நிறுத்த குழந்தைகளுக்கு உதவ வேண்டும். பல் வரிசை முன்னும் பின்னும் இருந்தால் தொடக்கத்திலேயே மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். சிகிச்சை தொடங்கிய பின்னர் வாய், பல் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பற்களும் தாடை அமைப்பும்

அழகான முக அமைப்பையும் பல் வரிசையையும் பெற நோயாளியின் ஒத்துழைப்பு மிக அவசியம். ஒவ்வொரு மாதமும் சிகிச்சைக்கு வர வேண்டும்.

முடிவாக, Health is a state of complete physical, mental and social well being. அதாவது நலம் என்பது முழுமையான உடல், உள, சமூக நன்னிலை ஆகும். நம் புறத்தோற்றமும் மன அழகும் இணைந்ததே உடல் நலம். அதனைப் புரிந்து கொண்டு வாழப் பழகுவோம்.



source https://www.vikatan.com/health/defect-in-dental-structure

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக