எந்த கார், பைக் கம்பெனியானாலும் அவர்களின் கவனம் இப்போது மின்சார வாகனங்களின் மீதுதான். இதற்கான ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில்தான் அந்நிறுவனங்கள் தீவிரமான கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், கடந்த மாதம் அறிமுகமான ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார வாகனமான அயனிக் 5, கார் ஆர்வலர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. காரணம் - மின்சார வாகனங்களுக்கான குறிப்பிடத்தக்க உச்சமாக அது அமைந்தது. 631 கிமீ ரேஞ்ச் என்பதும், 10-80% சார்ஜ் செய்ய 18 நிமிடங்கள் போதும் என்பதும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மினிமலிஸ்டிக் டிசைன், விதவிதமான அம்சங்கள் ஆகியவை இன்னொருபுறம் பரசவத்தை ஏற்படுத்தின.
அயனிக் 5 ஆச்சரியம் அடங்குவதற்குள், முதல் முறையாக நம் நாட்டில் நடந்த மின்சார கார்களுக்கான Formula E பந்தயம் இந்தப் பரவசத்தை மேலும் பரவலாக்கியது. இது ஃபார்முலா 1 நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அகில உலக ரேஸ் என்பது முக்கியக் காரணம். இந்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதியன்று மெக்சிகோ நகரில் துவங்கிய ஃபார்முலா E பந்தயத்தின் நான்காவது சுற்று ஹைதராபாத் நகரின் உசேன் சாகர் ஏரியைச் சுற்றியிருக்கும் சாலையில் ஸ்ட்ரீட் ரேஸாக பிப்ரவரி 11-ம் தேதி நடந்தபோது, கரகோஷமிட்டு பந்தயத்தை ரசித்த ரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் இந்தப் பரவசத்தைப் பார்க்க முடிந்தது.
பந்தயத்தில் யார் முதலில் வருகிறார்கள் என்பது மட்டும் முக்கியமல்ல; ரேஸின் முடிவில் போட்டியாளர்களின் கார் பேட்டரிகளில் எவ்வளவு சார்ஜ் எஞ்சியிருக்கிறது என்பதும் கணக்கில் கொள்ளப்பட்ட பந்தயம் இது. போட்டியின் கடைசி லேப்பில், ஒரே ஒரு சதவிகித பேட்டரி சார்ஜோடு சீறிப் பாய்ந்த கார்கள் கொடுத்த த்ரில் வேற லெவல். இந்தியக் கம்பெனியான டிசிஎஸ் ஸ்பான்சர் செய்த ஜாகுவார் அணியின் இரண்டு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது ரசிகர்களின் உற்சாகத்தைச் சற்றே குறைத்தது. அதேபோல இந்தப் பந்தயத்தில் பங்கு பெற்ற மஹிந்திரா அணியின் ஆலிவர் ரோலாண்டின் கார் விபத்துக்குள்ளான போதும் ஆறாவது இடம் பிடித்தது. இப்படி இந்த மின்சார கார் பந்தயத்தில் பல `திக் திக்’ நிமிடங்கள்.
இதில் கலந்துகொண்ட 11 அணிகளைச் சேர்ந்த 22 டிரைவர்களும் ஓட்டிய 22 கார்களுமே 350Kw பேட்டரி கொண்ட கார்கள். இதில் அடங்கியிருக்கும் இன்னொரு பொறியியல் ஆச்சரியம் என்னவென்றால், கார்களை ஓட்டும்போது உற்பத்தியாகும் ரீஜெனரேட்டிவ் பவர் என்பது ஏறக்குறைய 250Kw. இந்தக் கார்களின் டாப் ஸ்பீடும் 320 கிமீ!
`கார்களுக்கான பரிசோதனைச் சாலைகள்' என்று ரேஸ் ட்ராக்கைக் குறிப்பிடுவார்கள். இது எத்தனை பொருள் புதைந்த வாக்கியம் என்பதை, ஃபார்முலா E பந்தயம் மேலும் ஒரு முறை நினைவுபடுத்தியது.
நன்றி!
- ஆசிரியர்
source https://www.vikatan.com/editorial/editor-page-15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக