பிபிசி டெல்லி, மும்பை அலுவலங்களில் மத்திய வருமான வரித்துறையினர் மூன்று நாள்கள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், முக்கிய ஆதாரங்கள் சிலவற்றை கைப்பற்றியிருப்பதாக வருமான வரித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இந்தச் சோதனை பிபிசி நிறுவனம், மோடி தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்டதால், பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது என எதிர்க்கட்சிகள் தரப்பிலும், ஊடக நிறுவனங்கள் தரப்பிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
மூன்று நாள்கள் நடந்த இந்தச் சோதனை தொடர்பாக பிபிசி நிறுவனம் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தது. அதில், ``வருமான வரி அதிகாரிகள் சோதனையை முடித்து வெளியேறியிருக்கிறார்கள். எங்களால் இயன்றவரை ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறோம். இது விரைவில் சரிசெய்யப்படும். சில பத்திரிகையாளர்களிடம் நீண்ட கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்கள் நடு இரவு வரையிலும் விசாரணையில் தொடர வேண்டியதாக இருந்தது. எனவே அவர்களின் நலனில் அக்கறை கொள்வது அவசியம். தற்போது எங்கள் இயல்பு பணிக்கு திரும்பியிருக்கிறோம். இந்திய மக்களுக்கு எங்கள் சேவை தொடரும். பிபிசி ஒரு நம்பிக்கையான, சுதந்திரமாக இயங்கும் ஊடக நிறுவனம். எனவே எந்த அச்சமும், சார்பும் இல்லாமல் செய்தி வழங்கும் எங்கள் பணி தொடரும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிபிசி நிறுவனத்தின்மீதான சோதனை குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், எந்த விதக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். அதே நேரத்தில் ரிஷி சுனக்கின் கட்சியைச் சேர்ந்த எம்.பி பாப் பிளாக்மேன் இந்த விவகாரத்தில், பிபிசி நிறுவனத்தை மிகக் கடுமையாகச் சாடியிருக்கிறார். அதனால், ரிஷி சுனக்கின் மௌனம் சர்வதேச அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.
என் இந்த மௌனம்?
மூன்று பிரதமர்கள் மாறிய பின்பும், கொரொனா காலகட்டத்தில் வீழ்ந்த இங்கிலாந்தின் பொருளாதாரம் தற்போதுவரை மீளவில்லை. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற ரிஷி சுனக்கின் செயல்பாடுகள் எந்த பலனையும் தரவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசியல் அரங்கில் முன்வைக்கப்படுகிறது. ரிஷி சுனக்மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதை உறுதிப்படுத்த தவறிவிட்டார் என்றும், இங்கிலாந்தின் 85% மக்கள் ரிஷி சுனக் நாட்டின் பிரதமராக இருக்க தகுதியுடையவர்தானா... என்னும் கேள்வியை முன்வைக்கிறார்கள். இந்த நிலையில், அவர் எப்படி பிபிசி-க்கு ஆதரவாகவும், இந்தியாவை எதிர்த்தும் பேசுவார் என்னும் கருத்து மேலோங்கி வருகிறது. எனவே அதை பற்றி பேசுவதில் ரிஷி சுனக் கூடுதல் கவனத்துடன் இருக்கிறார்.
காரணம், பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயலும் சுனக் அரசுக்கு இந்தியா-இங்கிலாந்து இடையே கையெழுத்தாகும் ''இலவச வர்த்தக ஒப்பந்தம்'' (Free Trade Agreement) முக்கியமான முன்னெடுப்பாகும். இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான வரிகள் தளர்த்தப்படும். தொழில்நுட்ப பரிமாறுதல், அரசாங்கத்தின் வர்த்தக செலவு குறையும். எனவே, இது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்பது கான்செர்வேட்டிவ் கட்சியின் எண்ணமாக இருக்கிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவது என்பது இங்கிலாந்து நாட்டின் நலன் என்பதைத் தாண்டி, இது சுனக்கின் அரசியல் பயணத்தையும் தீர்மானிக்கும் முக்கிய நகர்வு என்கிறார்கள். இதை மனதில் வைத்துக்கொண்டுதான் அவர், இந்தியாவின் பிபிசி வருமான வரி சோதனை பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறார் என்கிறார்கள் சர்வதேச அரசியலை உற்றுநோக்குபவர்கள்.
பிபிசி-யும் கன்சர்வேட்டிவ் கட்சியும்!
அதே போல் சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் பிபிசி-க்கும் முன்பு ஏற்பட்ட சிக்கல்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம், பிபிசி நிறுவனத்துக்கு ஒதுக்கும் நிதியைக் குறைப்பதாகப் பேச்சுகள் எழுந்தன. இது பிபிசி செய்தி நிறுவனம் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கட்சியை விமர்சித்ததால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிரிக்கட்சியான தொழிலாளர் கட்சி குற்றம்சாட்டியது. இதை உறுதி செய்யும் வகையில் கன்சர்வேட்டிவ் கட்சி வழக்கறிஞர் ஒருவர், ``பிபிசி ஜான்சனுக்கு எதிராக வழங்கிய செய்திகள் அனைத்தும், அரசை கவிழ்க்கும் முயற்சி" எனச் சாடியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி பாப் பிளாக்மென், ``பிபிசி-யின் செயல் அவமானமானது. பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டிருக்கக் கூடாது. அது உண்மைக்குப் புறம்பானது" எனக் கூறியிருக்கிறார். அதேபோல், பா.ஜ.க-வும் கன்சர்வேட்டிவும் நட்பு கட்சிகள் எனச் சொல்லியிருப்பதன் வாயிலாக இவர்கள் பிபிசி-க்கு ஆதரவாகப் பேசும் மனப்பான்மையில் இல்லை என்பதைத் தெளிவாக காட்டுகிறது. அதேபோல், பாப் பிளாக்மென் தன் ட்விட்டர் பக்கத்தில், `வரும் ஆண்டுக்குள் இலவச வணிக ஒப்பந்தம் கையெழுத்தாகும்' என்னும் தகவலைப் பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``இந்தியாவில் இருப்பது போல், நாடாளுமன்றத்தில் கேட்கும் கேள்விகளை விலகிச் செல்ல முடியாது. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் பிபிசி சோதனை பற்றி நிச்சயம் கேள்வி எழுப்புவார்கள். சுனக் அதற்குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அப்படி கேள்விகளுக்குப் பதில் சொல்லாதபட்சத்தில் பதவியில் அவர் இருக்க முடியாது. தவிர, இந்தியாவில் பிபிசி வருமான வரி சோதனை குறித்து இங்கிலாந்து பேசாமல் இருக்கிறது. இது முதன் முறை அல்ல. பாலத்தீனில் பிபிசி பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் இங்கிலாந்து அரசு எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. அப்போதும் சில பத்திரிகையாளர் அமைப்புகள் இதற்கு எதிராக தங்கள் கண்டனத்தை பதிவுசெய்தனர்.
இங்கிலாந்து அரசு பெரிதாக குரல் எழுப்பாமல் இருப்பதற்கு இங்கிலாந்து-இந்தியா இலவச வர்த்தக ஒப்பந்தமும் காரணமாக இருக்கலாம். சுனக், தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எனவே, பெரும் விஷயங்களை செய்தாக வேண்டும் என்பதால் ஒப்பந்தத்தை மனதில் வைத்து, பிபிசி குறித்துப் பேசாமல் இருக்கிறார். இது பற்றி பெரிதாகப் பேச வேண்டாம் என்பதே இவர்கள் முடிவாக இருக்கிறது. ஆனால், நாடாளுமன்றம் கூடும்போது இது பற்றி நிச்சயம் கேள்வி எழுப்பப்படும். அப்போது, இந்தப் பிரச்னைக்கு பதில் கிடைக்கும்" என்றார்.
source https://www.vikatan.com/oddities/international/why-rishi-sunak-is-silent-on-the-bbc-income-tax-survey-in-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக