தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பேயன்விளையைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவர், கோழி இறைச்சிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குறிப்பிட்ட ஒரு தனி மொபைல் செயலி மூலம் ஆண் ஒருவர் தன்பாலின உறவுக்கு அழைத்துள்ளார். ஆறுமுகநேரி - நல்லூர் சாலையில் உள்ள காட்டுப்பகுதிக்கு வரும்படி அந்த ஆண் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சுடலைமுத்து பைக்கில் அந்த இடத்திற்குச் சென்றுள்ளார். அந்த இடத்திற்கு தான் வந்துவிட்ட தகவலையும் அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். அந்த ஆணும் மறைந்திருந்து சுடலைமுத்து வந்துவிட்டதை உறுதி செய்துவிட்டு, ’அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க’ என, எதிர்முனையில் இருந்து பதில் வந்துள்ளது.
இதனல பைக்கில் அமர்ந்தபடி அந்த சாலையின் ஓரத்தில் காத்துக் கொண்டிருந்தார் சுடலைமுத்து. அடுத்த இரண்டு நிமிடங்களில் கருப்பு நிற பைக்கில் வந்த மூன்று பேர் சுடலை முத்துவின் அருகில் பைக்கை நிறுத்தி, அரிவாளால் தாக்கி, அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்க பணம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போன், ரூ.5 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிக்காப்பு ஆகியவற்றைப் பறித்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து சுடலைமுத்து ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் நடந்ததைக்கூறி புகார் மனு அளித்துள்ளார். பைக்கில் வந்த 3 பேரின் உடல் அடையாளங்களைக் போலீஸாரிடம் கூறியுள்ளார். பின்னர், இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீஸார், காயல்பட்டினம் அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி, வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்த சாரதி, திசையும் பாளையத்தை சேர்ந்த யோஸ்வா, காயல்பட்டினத்தைச் சேர்ந்த அமீர் மற்றும் சித்து ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸாரிடம் பேசினோம், ”ஆறுமுகநேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உப்பளங்கள், முட்புதர்கள், பனைமரங்கள், நெல் வயல்கள், வாழைத்தோப்புகள் ஆகியவை உள்ளன. மாலை 6 மணிக்கு மேல் இந்தப் பகுதிகளில் பெரும்பாலும் ஆள் நடமாட்டம் இருக்காது.
இந்தப் பகுதியைத்தான் வழிப்பறிக்கான ஸ்பாட்களாக இந்த கும்பல் ’டார்கெட்’ செய்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட தனி மொபைல் செயலி மூலம் தன்பாலின உறவுக்கு பலரையும் அழைக்கிறார்கள். இவர்களின் ஆசை வலையில் சிக்குபவர்களை ஓர் இடத்திற்கு வரச்சொல்லி அவர்களைத் தாக்கி, அரிவாளைக் காட்டி மிரட்டி பணம், நகையைக் கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதில் பணம், நகையை இழந்தவர்கள் போலீஸில் சொல்ல வெட்கப்பட்டுபோய் போனால் போகட்டும் என விட்டுவிடுகிறார்கள்.
இது இந்த கும்பலுக்கு சாதமாகப் போய் விடுகிறது. விசாரணையில் பலரையும் இதுபோன்று ஆசை காட்டி கொள்ளையடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. பகல் நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்களை மறித்தும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் கிடைக்கும் பணத்தை பங்கிட்டுக் கொண்டு உல்லாச வாழ்கை வாழ்ந்து வந்துள்ளனர்” என்றனர். இந்த அப்பகுதியில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/5-arrested-for-theft-in-thoothukudi-by-police
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக