Doctor Vikatan: என் வயது 45. மீடியா தொடர்பான வேலையில் இருக்கிறேன். சரும அழகைத் தக்கவைத்துக்கொள்ள கொலாஜென் சப்ளிமென்ட் எடுக்கலாமா? அது ஆன்டி ஏஜிங் பலனைத் தருமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
சமீப காலமாக சரும அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் கொலாஜென் சப்ளிமென்ட் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. அது குறித்து நிறைய பேசப்படுகிறது.
கொலாஜென் என்பதுதான் நம் சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கக்கூடிய புரதம். அது போதுமான அளவில் இருந்தால்தான் நம் சருமம் தொய்வடையாமல், முதுமைத்தோற்றம் அடையாமல், டைட்டாக இருக்கும்.
அனைத்துவகையான ஆன்டி ஏஜிங் சிகிச்சைகளும் கொலாஜெனை அடிப்படையாகக் கொண்டவையாகவே இருக்கின்றன. மைக்ரோ நீடிலிங் சிகிச்சை, லேசர் சிகிச்சை என எல்லாவற்றிலும், கொலாஜெனை புதுப்பித்து, சரும ஆரோக்கியம் மீட்கப்படும்.
ஏற்கெனவே குறிப்பிட்டபடி கொலாஜென் என்பது ஒருவகையான புரதம். உணவின் மூலம் போதுமான புரதச்சத்து கிடைக்கும்படி பார்த்துக் கொண்டாலே, அதன் மூலம் நமக்குத் தேவையான கொலாஜெனும் கிடைத்துவிடும். எலும்பு சூப், எலும்புச் சாறு இரண்டும் குடிப்பதன் மூலம் கொலாஜென் அளவை அதிகரிக்கலாம்.
எலும்பை சிறுதீயில், கிட்டத்தட்ட ஆறு, ஏழு மணி நேரம் வேகவைத்துக் குடிப்பதன் மூலம் கொலாஜென் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். கடல் உணவுகளிலும் கொலாஜென் இருக்கிறது. உணவின் மூலம் போதுமான புரதச்சத்து எடுத்துக்கொள்ள முடியாதவர்கள், சப்ளிமென்ட்டாகவும் எடுத்துக்கொள்ளலாம். அதை மருத்துவர் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
கொலாஜென் சப்ளிமென்ட் எடுப்பது மட்டுமே ஆன்டி ஏஜிங் பலனைக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. மைக்ரோ நீடிலிங், ரெட்டினால் சிகிச்சைகளும் உங்களுக்கு உதவலாம். மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு நாளைக்கு 3 கிராம் அளவு கொலாஜென் சப்ளிமென்ட் எடுப்பது பலன் தரும். மருத்துவர் பரிந்துரைக்கும் காலத்துக்கு மட்டுமே எடுக்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/doctor-vikatan-can-collagen-supplements-delay-the-appearance-of-aging
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக