திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 27 -ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பழநி படிப்பாதையில் உள்ள உபதெய்வ கோயில்கள், மலைக்கோயில் ராஜகோபுரம், தங்க கோபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் புனரமைக்கப்பட்டன. படிப்பாதைகள் சீரமைத்தல், சுவர்களுக்கு வர்ணம் பூசுதல், சில்வர் கைபிடி கம்பி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்து முடிக்கப்பட்டு கோயில் புதுப்பொலிவு பெற்றது.
பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் முடி காணிக்கை நேர்த்திக்கடனை சண்முகா நதியோரத்தில் செய்துவிட்டு, நதியில் நீராடிவிட்டு பழநி மலைக்கோயிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். `பழநி அருகே பச்சையாறு, பாலாறு, பொருநையாறு உள்ளிட்ட 5 ஆறுகள் சங்கமித்து உருவாகும் சண்முகா நதி கரையோரத்தில் பக்தர்களின் வசதிக்காக சில்வர் கம்பி கைபிடிகள் மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். நதியை தூய்மையாக வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்பது பக்தர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கும்பாபிஷேகத்துக்கு முன், ஜனவரி 24 -ம் தேதி சண்முகா நதி கரையில், `பழநி மெய்த்தவ பொற்சபை அமைப்பு’ சார்பில் 24 அடி உயர வெண்கல வேல் நிறுவப்பட்டது. தைப்பூச விழா தொடங்கியுள்ள நிலையில் பாதயாத்திரையாக வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்த சண்முகா நதி வந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் 24 அடி உயர வேலை வணங்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் உரிய அனுமதியின்றி வேல் நிறுவப்பட்டதாகக் கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் வேல்-ஐ அகற்றினர். இதற்கு அங்கிருந்த பக்தர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
அப்போது, `2020 -ம் ஆண்டே இந்த வேலை தயார் செய்துவிட்டோம். கொரோனா காரணமாக நிறுவமுடியாமல் போனது. தற்போது உரிய பூஜை செய்து நிறுவினோம். மேலும் வேல் நிறுவினால் இப்பகுதி தூய்மையாக பராமரிக்கப்படும்’ என்றனர். அதற்கு அதிகாரிகள் இதற்குரிய அனுமதி பெற வேண்டும். அதுவரை வேல் நிறுவக் கூடாது எனக் கூறி அங்கிருந்தவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
source https://www.vikatan.com/government-and-politics/governance/24-feet-high-vel-statue-removed-from-palani-shanmuga-river
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக