ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்போ, சின்னம் கிடைக்காவிட்டாலும் சுயேட்சையாக போட்டி என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால் ஓ.பி.எஸ் தரப்போ, பாஜக போட்டியிட விரும்பினால் எங்கள் வேட்பாளரை திரும்ப பெற்றுக் கொள்வோம் என்று அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இது ஒருபுறமிருக்க, ஈரோட்டில் நடந்த தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி’ என்று பேனர் வைக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே, தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க-வின், ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்ற பெயரையே அ.தி.மு.க பயன்படுத்திவந்தது. அதாவது என்.டி.ஏ (NDA). ஆனால், இப்போது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ’தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி’ என்ற பெயரில் எடப்பாடி தரப்பு வேட்பாளரைக் களம் இறக்கியிருப்பதால் அ.தி.மு.க உடனான கூட்டணியை பா.ஜ.க முறித்துவிட்டதோ என்று கேள்வி எழுந்திருக்கிறது.
மேலும், இடம்பெற்றிருந்த பேனரில் பா.ஜ.க தலைவர்களான ஜே.பி.நட்டா, அமித் ஷா ஆகியோரின் படங்களையோ, பெயரையோ எடப்பாடி தரப்பு புறக்கணித்திருக்கிறது. மேலும், பாஜக-வின் நிலைப்பாட்டைதான் ஆதரிப்போம் என்று சொன்ன ஜான்பாண்டியன், ஏ.சி சண்முகம் ஆகியோரின் புகைப்படங்களும் தவிர்க்கப்பட்டது. இதுவும் பாஜக தரப்புக்கு அதிர்ச்சியை கிளப்பியது. இதற்கு பிறகு சிறிது நேரத்தில், "தேசிய ஜனநாயக கூட்டணி" என்று மாற்றம் செய்யப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கட்சியின் மூத்த தலைவர்கள், தன்னிடம் PRINTING MISTAKE ஏற்பட்டதாக தெரிவித்தனர் என்று கூறினார். மேலும் பாஜக உடனான கூட்டணி குறித்து அதிமுக-விடம்தான் கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.
பிப்ரவரி 1-ம் தேதி நள்ளிரவு மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதில், "எம்.ஜிஆர், ஜெயலலிதா அருளாசியுடன், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நல்லாசி பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றி வேட்பாளர் தென்னரசு" என்று குறிப்பிட்டிருந்தது... இதன் மூலம் பாஜக-வை எதிர்க்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகி விட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். ஆனாலும், ஒரே நாளில் எதற்காக 3 முறை இந்த பெயர் மாற்றம் என்பதுதான் தொண்டர்களுக்கே புரியாத புதிராக இருந்து வருகிறது.
இதற்கு முன்பு நடந்த ஒரு இடைத்தேர்தலிலும் இப்படிப்பட்ட குழப்பங்களும், சலசலப்புகளும், ஏற்பட்டிருக்காது.. இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியானது, அனைத்து கட்சிகளையும் தாண்டி, டெல்லி வரை கவனிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது..
தொடக்கத்தில், அதிமுக-வுக்கு ஆதரவு கேட்டு, முக்கிய நிர்வாகிகளை கமலாலயத்துக்கு அனுப்பி வைத்தாரே தவிர, நேரடியாக சென்று, எடப்பாடி பழனிசாமி பாஜக-விடம் ஆதரவு கேட்கவில்லை.
``கடந்த 2019 எம்.பி தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில், பாஜக-வுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காததே தோல்விக்கு காரணம்” என்று சி.வி சண்முகம், கே.பி முனுசாமி போன்றோர் அவ்வப்போது வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். மேலும், பல சீனியர்களும் பாஜக-வுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமியிடம் வெளிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இரட்டை இலை கிடைக்காவிட்டால், பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என பாஜக தரப்பு சொல்லியதற்கும், எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லையாம். இந்த தொடர் குழப்பங்கள் குறித்து எடப்பாடி, பாஜக என இரு தரப்பினருமே மௌனம் சாதித்து வருகின்றனர்.
பாஜக தரப்பில் அண்ணாமலை இரு தலைவர்களையும் சந்தித்தும் இணைப்புக்கு சாத்தியமில்லை என்பதில் எடப்பாடி தரப்பு தீவிரமாக இருக்கிறது. மேலும் அதிமுக ஐடி விங் செயலாளர், சிங்கை ராமச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல சி.டி.ரவி யார்? நீங்கள் ஒரு தேசியக் கட்சியில் இருந்து வருவதால் நீங்கள் எதையும் கட்டளையிட முடியும் என்று அர்த்தமா? கர்நாடகா பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னால் சி.டி.ரவி ஏற்பாரா?
திமுகவை எதிர்த்து தனியே எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறாத நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறலாமா? தயவுசெய்து உங்கள் வரம்புகளை அறிந்து கொள்ளுங்கள்!” என காட்டமாக பதிவிட்டிருந்தார். அண்ணாமலை, சிடி ரவி எடப்பாடி, பன்னீர் தரப்பை சந்தித்தப் பின் இந்த பதிவு போடப்பட்டது கவனிக்கத்தக்கது,.
இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம், ``2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நாளில் இருந்தே அதிமுக-வின் செயல்பாடுகள் பாஜக தேவையில்லை என்பதை நோக்கியே அமைந்துள்ளன. 2001-ல் கருணாநிதி, 2006-ல் ஜெயலலிதா மற்றும் 2021 இல் தான் தோல்வியடைந்ததற்கு பாஜக-வுடனான கூட்டணியே காரணம் என எடப்பாடி பழனிசாமி திடமாக நம்புகிறார். இதை தனது தீவிர ஆதரவாளரான சி.வி.சண்முகம் மூலம் வெளிப்படுத்தியும் வந்துள்ளார். பாஜக-வுடனான கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுக-விடமிருந்து பறிக்கப்படுவதாக அவர் உணர்வதன் வெளிப்பாடே, பாஜக-வை கைகழுவுவதற்கான சமிக்ஞைகள்" என்றார்.
"ஒரு புறம் பாஜக தலைமை ஓ.பி.எஸ், இபிஎஸ் இணைவை விரும்பினாலும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை எடப்பாடி தொடங்கிவிட்டார், அதற்கான முன்னோட்டமே பாஜக தேவை இல்லை. சுயேட்சை சின்னம் கிடைத்தாலும் போட்டி என்ற முடிவு" என்றார் ரவீந்திரன் துரைசாமி.
source https://www.vikatan.com/government-and-politics/politics/is-edappadi-palaniswami-dethroning-bjp-in-erode-east
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக