Ad

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

சேமிப்புக்கு வேட்டுவைக்கும் புதிய வருமான வரி!

நிதி ஆண்டு 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்வாக பல விஷயங்கள் வந்திருக்கின்றன. பாசிட்டிவ்வாக வந்த விஷயங் களில் முக்கியமாக எடுத்துச் சொல்லப்பட வேண்டியது, மூலதனச் செலவு கடந்த ஆண்டைவிட 33% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்கிறார்கள் தொழில் துறையினர்.

ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவுப் பொருள்களை வழங்க ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, மருத்துவத்துக்கும் கல்விக்கும் கடந்த ஆண்டைவிட குறிப்பிடத்தகுந்த அளவு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கு கடந்த ஆண்டைவிட அதிக நிதி ஒதுக்கியுள்ளது, பெண்களுக்கென சிறப்பு சேமிப்புத் திட்டத்தைக் கொண்டுவந்தது, அஞ்சலக சேமிப்பில் முதியோர்களுக்கான சேமிப்பு வரம்பை உயர்த்தியது, ரயில்வே துறைக்கு இதுவரை ஒதுக்கப்படாத அளவுக்கு ரூ.2.4 லட்சம் கோடியை ஒதுக்கியது எனப் பல பாசிட்டிவ்வான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வந்திருப்பதை நிச்சயம் வரவேற்கலாம்!

அதே சமயம், இந்த பட்ஜெட்டில் வந்திருக்கும் முக்கியமான நெகட்டிவ் அம்சம், தனிநபர்களுக்கான வருமான வரி வரம்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களே. நம் நாட்டில் உள்ள மொத்த வரிதாரர்களில் சுமார் 40% வரிதாரர்கள் மட்டுமே புதிய வரி முறையைத் தேர்வு செய்துள்ளனர். இன்னும் அதிகமான வரிதாரர்களைப் புதிய வரி முறையில் கொண்டு வர, அதற்குப் பல சலுகைகளை அறிவித்த நிதியமைச்சர், பழைய வரி முறையைப் பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. இப்படிச் செய்ததன் மூலம், அடுத்த சில ஆண்டுகளில் பழைய வரி முறையையே ஒழித்துக்கட்டி விடுவதுதான் மத்திய அரசின் நோக்கம் என்று தெளிவாகத் தெரிகிறது.

இது மிகத் தவறான அணுகுமுறை என்றே சொல்ல வேண்டும். காரணம், வீட்டுக் கடனோ, காப்பீட்டுத் திட்டமோ எதுவாக இருந்தாலும், அதை நம் மக்கள் தேர்வு செய்ய முக்கியமான காரணங்களுள் ஒன்று, அதற்கு அளிக்கப்படும் வரிச் சலுகைதான். எல்.ஐ.சி-யில் பல லட்சம் கோடி ரூபாயை மக்கள் கட்டிவருவதற்கும், பல லட்சம் கோடியை வீட்டுக் கடனாக மக்கள் பெற்றதற்கும் காரணம், வரிச் சலுகைதான்.

இனிவரும் காலத்தில் எதற்கும் வரிச் சலுகை இல்லை எனில், மக்கள் காப்பீடு எடுக்காமல், வீட்டுக் கடன் வாங்காமல், எல்லாப் பணத்தையும் செலவு செய்வார்கள். இதனால் பொருள்களின் விற்பனை அதிகரித்து, சில பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்னும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறும். ஆனால் மக்களோ, சேமிப்பு எதுவும் இல்லாமல், கடன் வலையில் சிக்கி, சீரழிந்துபோவார்கள். இப்படியொரு நிலை உருவாவதைத்தான் மத்திய அரசு உருவாக்க விரும்புகிறதா?

வரிச் சலுகைகள் தனிமனிதர்களின் வாழ்நிலையை உயர்த்தக்கூடியவை. அந்த ‘தேன்கூட்டில்’ கைவைத்து கலைக்க நினைத்தால், அதற்கான விளைவை மத்திய அரசு நிச்சயம் சந்திக்க வேண்டியிருக்கும்!

- ஆசிரியர்



source https://www.vikatan.com/editorial/new-income-tax-regime-talk-to-budget

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக