சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஐடி பிரிவுத் தலைவர், தமிழக பா.ஜ.க
``வாய்க்கு வந்ததைப் பேசியிருக்கிறார். எங்கள் அமைப்பு இதுவரை எந்த வன்முறையிலும் ஈடுபட்டதாக ஒரு வரலாறும் கிடையாது. ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு காரியத்தைச் சாதித்த செயலை பா.ஜ.க ஒருபோதும் செய்ததில்லை. ஆனால், இந்திரா காந்தி படுகொலையின்போது, சீக்கியர்களின் மீது நடத்தப்பட்ட வன்முறையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்... அதற்கு இதுவரை குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பையாவது கேட்டிருக்கிறதா காங்கிரஸ்... குஜராத் கலவரத்தில், தவறு செய்த அனைவருக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்தது அன்றைய குஜராத் முதல்வர் மோடிதான். அது அங்கிருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் குஜராத்தில் இன்றுவரை பா.ஜ.க ஆட்சி தொடர்ந்துகொண்டிருக்கிறது. குஜராத் சம்பவம் நடந்த சமயத்தில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது. ஆனால், இன்றுவரை ஒரு குற்றச்சாட்டைக்கூட அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. காரணம், அதில் பா.ஜ.க எந்தத் தவறும் செய்யவில்லை. அனைத்துமே ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். அரசியலுக்காக இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் ராகுல் காந்தியால் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும், அதன் தலைவர்களும் வன்முறை செய்திருக்கிறார்கள் அல்லது ஆதரித்திருக்கிறார்கள் என்று நிரூபிக்க முடியுமா?’’
இனியன் ராபர்ட், மாநில செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்
``உண்மையைச் சொல்லியிருக்கிறார். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஆர்.எஸ்.எஸ்-ஸைச் சேர்ந்த நாதுராம் கோட்சே என்பதை யாருமே மறுக்க முடியாது. முன்பு காங்கிரஸ் சில தவறுகள் செய்திருக்கிறது. அதற்கு ராகுல் காந்தி வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஆனால், பாபர் மசூதி இடிப்பு தொடங்கி, எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து செய்துவருவது ஆர்.எஸ்.எஸ்-தான். இந்தியாவில் வன்முறை, பிரிவினை ஏற்படுத்துவதற்கென்றே ஓர் இயக்கம் இயங்குகிறது என்றால் அது ஆர்.எஸ்.எஸ் -தான். பா.ஜ.க அவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கும் இடம். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. ‘1991-ம் ஆண்டு ஒடிசாவில் கிரஹாம் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை அவரின் குழந்தைகளுடன் ஜீப்பில் வைத்து உயிருடன் எரித்த குற்றவாளி’ எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பைச் சேர்ந்த தாரா சிங், தற்போது பா.ஜ.க எம்.பி-யாக இருக்கிறார். இதேபோல, மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் உள்ளிட்ட பலரை ஆர்.எஸ்.எஸ் வன்முறைக் கூடாரத்தின் உதாரணங்களாகச் சொல்லலாம். தேசத் தந்தை மகாத்மா காந்தியையே கொல்லத் துணிந்தவர்கள், வன்முறை செய்யத் துணிய மாட்டார்களா என்ன?’’
source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-rahul-gandhi-comments-on-modi-amit-shah-rss
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக