டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய மழை ஏற்படுத்திய பாதிப்பில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் துயரத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது விவசாயிகள் கண்ணீரை துடைக்கப்போவதில்லை எனக் கூறும் விவசாயிகள் கூடுதல் நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் கடந்த வாரம் தொடர் மழை பெய்தது. பருவம் தவறிய இந்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன. வயலில் தேங்கியிருந்த மழை நீரில் சாய்ந்து கிடந்ததால் நெற்பயிர்கள் அழுகின. நெல் கொள்முதல் நிலையங்கள் முன்பு கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் நனைந்து பாதிப்புக்குள்ளாகின.
மழையால் ஏற்பட்ட பாதிப்பால் விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி அரசு விவசாயிகளை காக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. பாதிப்பின் தன்மையை உணர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நேற்று தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் குறிப்பாக 22 சதவிகிதம் ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும் என அமைச்சர்களிடம் வலியுறுத்தினர்.
பாதிப்பை ஆய்வு செய்த பின்னர், அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, ``முதற்கட்டமாக, டெல்டா மாவட்டங்களில், சுமார் 2.15 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள், உளுந்து, கடலை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்வதைத் தொடர்கின்றனர். பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கையை முதலமைச்சரிடம் வழங்குவோம்.
முதலமைச்சர் இழப்பீடு தொகையை அறிவிப்பதுடன், பயிர் காப்பீட்டுத் தொகை முழுமையாகக் கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பார்'' என்றார்.
இதே போல் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறுகையில், நாகை, மயிலாடுதுறையில் 1.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 மற்றும் மானாவாரி பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.3,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின், பயிர் பாதிப்புகளை பார்வையிட வரவில்லை, வருவாய்த்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். அத்துடன் முதலமைச்சர் அறிவித்த நிவாரணம் போதாது என விவசாயிகள் போராட்டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சி.பி.ஐ கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் என்பவரிடம் பேசினோம்,
``டெல்டா மாவட்டத்தில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாரான நிலையில் அறுவடைப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர்.
திடீரென பெய்த தொடர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேர்ப்பகுதி அழுகி பாதிப்பு ஏற்பட்டது. டெல்டாவில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. விவசாயிகளை கண்ணீர் துயரத்தில் ஆழ்த்திய மழை பாதிப்பை ஆய்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் குழுவை அனுப்பியது பாராட்டுக்குறியது.
ஆய்வு செய்த அமைச்சர்களிடம் ஏக்கருக்கு ரூ.40,000, மானாவாரி பயிர்களுக்கு 30,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். குறிப்பாக, மழையில் நெற்பயிர்கள் மூழ்கியதால் 22 சதவிகிதம் ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும் என்றோம். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
தற்போது டெல்டாவில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் ஈரப்பதத்துடன் காற்று வீசுகிறது. இதில் ஏற்கெனவே மழையில் நனைந்த நெற்பயிர் காற்றில் நிலவும் ஈரப்பதத்தால் மேலும் நெல் ஈரப்பதம் ஏற்படக்கூடிய நிலை உண்டாகியிருக்கிறது. எனவே, 22 சதவிகிதம் உள்ள நெல் மணிகளைக் கொள்முதல் செய்ய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதோடு இருந்து விடாமல் தொடர்ந்து வலியுறுத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைச் செய்தால் மட்டுமே விவசாயிகள் காக்கப்படுவார்கள்.
முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரணம் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 அறிவித்திருக்கிறார். அதன்படி பார்த்தால் ஒரு ஏக்கருக்கு ரூ.7,998 தான் விவசாயிகளுக்கு கிடைக்கும். பெரும் பாதிப்பிலிருக்கும் விவசாயிகளுக்கு, டெல்டா மண்ணில் பிறந்த முதலமைச்சரான ஸ்டாலின் முறையான நிவாரணத் தொகை அறிவிப்பார் எனக் காத்திருந்தோம். ஆனால், பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. நிச்சயம் அரசு அறிவித்துள்ள நிவாரணம் விவசாயிகள் துயரை தீர்க்கப்போவதில்லை. இதைக் கண்டித்து டெல்டா முழுவதும் போராட்டம் நடத்த இருக்கிறோம்'' என்றார்.
source https://www.vikatan.com/agriculture/rain-damage-relief-announced-by-the-chief-minister-farmers-suffering
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக