வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
மரம் என்று சொன்னதும் 60 ஸ் கிட்ஸ்களுக்கு அசோக சக்கரவர்த்திதான் நினைவுக்கு வரும். சாலைகள் தோறும் மரங்களை நட்டது அவர்தான்.
இயற்கை நமக்கு அளித்த வரங்களில் மிகச் சிறந்தது மரம்தான். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கச் சொல்லி வலியுறுத்தி வருகிறது அரசாங்கம்.
மரம் என்றால் சும்மா அப்படியே நிற்பது அல்ல. அதுவும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
"நீ காற்று.. நான் மரம்...
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்..."
இந்த பாடல் அதற்கு ஒரு சிறிய சாட்சி.தானாகவே வளரும் மரங்கள் நாம் வைத்து வளர்க்கும் மரங்கள். இரண்டுமே நல்ல பயன்பாடை நமக்குத் தருகின்றன.
"மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை..."
மரம் பற்றி ஔவையார் தனது 'நல்வழி' நீதி நூலில் பாடியுள்ளார். பழுத்த மரத்தை யாரும் அழைக்காமலே வௌவால்கள் வந்து சேரும் என்று பொருள். கேட்காமலே பறவைகளுக்கும், அணில்களுக்கும், மனிதர்களுக்கும் பழங்களை வாரித் தரும் கொடையுள்ளம் கொண்டது மரம்.
அரசமரம்
அரசமரம் மிக உயரமாக வளரும் மரம். சுமார் 30 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலை கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இந்து, பௌத்த மதங்களில் முக்கிய இடம் பெற்றது. போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றாரே...அந்த போதி மரம் அரச மரம்தான். திருவாவடுதுறை, திருநல்லம் ஆகிய சிவன் கோயில்களில் அரசமரம் தல விருட்சம். மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான 'பாரத ரத்னா' விருது அரச இலை வடிவத்தில்தான் அமைந்துள்ளது.
ஆனைமுகத்தான் பிள்ளையாரின் ஆஸ்தான இல்லம் அரச மரம்தான். ஆற்றங்கரை, குளக்கரை ஓரங்களில் இருக்கும் அரசமரத்தின் அடியில் அவர் வீற்றிருப்பார். குளித்து முடித்ததும் இறைவனை வழிபட வேண்டும் என்பதாலே அக்காலத்தில் அங்கு பிள்ளையார் சிலையை நம் முன்னோர்கள் ஸ்தாபனம் செய்தார்கள்.
சிந்து சமவெளி முத்திரையில் பல மரங்கள் இருந்தாலும் அரசமரம் தான் அதிகம் காணப்படுவதாக திரு.லண்டன் சுவாமிநாதன் அவர்கள் தனது கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நம் முன்னோர்கள் அரச மரத்தை தெய்வமாக வழிபட்டு வந்தார்கள். மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன் என்று கீதையில் கண்ணன் சொல்லி இருக்கிறார். அனைத்து ஹோமங்களுக்கும் அரச மர குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.
"மூலதோ பிரம்ம ரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத சிவ ரூபாய
விருட்ச ராஜயதே நமஹ......"
அரசமரத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் இந்த ஸ்லோகத்தை சொல்லியபடி அரச மரத்தை வலம் வருவது மரபாக உள்ளது.
அதன் பொருள் : வேர்ப்பகுதியில் பிரம்மா, மத்தியப் பகுதியில் விஷ்ணு, மேற்பகுதியில் சிவ பெருமானும் எழுந்தருளி இருக்கும் அரசமரத்தை வணங்குகிறேன். அரச மரத்தை வடமொழியில் விருட்ச ராஜன், அஸ்வத்தா, பிப்பலா என்று அழைப்பார்கள்.
மணமான பெண்கள் அரச மரத்தை வலம் வந்து வழிபட்டால் அம்மரத்தின் காற்று மூலம் கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் அது நிவர்த்தி ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. 'அரச மரத்தை சுற்றி வந்து அடி வயிற்றை தொட்டுப்பார்த்தாள்' என்ற பழமொழி இதிலிருந்துதான் உருவானது.
அரச மரத்திற்கு மேலும் பெருமை சேர்த்தவர் திரு.வ.வே.சு.ஐயர் என்கிற வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர். மகாத்மாவை சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்த பிறகு அகிம்ஸாவாதியாக மாறி சுதந்திரத்துக்காக போராடினார். இவர் எழுதிய 'குளத்தங்கரை அரசமரம்' சிறுகதை - தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை. 'விவேக போதினி' என்ற மாத இதழில் 1915 ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் இதழ்களில் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியானது.
குளத்தங்கரையில் இருக்கும் அரச மரம் ஒன்று ருக்மிணி என்ற பெண்ணின் கதையை நமக்கு சொல்வது போல படைத்திருப்பார்.
நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருக்கும் அரச மரம், அது கடந்து வந்த நாட்களில் ஏராளமான மனிதர்களை பார்த்திருக்கும் அதில் குறிப்பிட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி அதுவே சொன்னால் எப்படி இருக்கும்.
வித்தியாசமான சிந்தனையால் அரச மரத்தின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக படைத்துள்ளார். தனது படைப்புகளால் நவீன சிறுகதையின் தந்தை என்று அவர் போற்றப்படுகிறார். நம் முன்னோர்கள் அரச மர இலையை மருந்தாக பயன்படுத்தினர்.
மிகச் சிறந்த ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளிட்ட பல வகை நோய்களுக்கு மருந்தாக அரச இலை மற்றும் அதன் காய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆலமரம்
==========
ஆலமரம் அத்தி குடும்பத்தை சேர்ந்தது. 20 முதல் 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அடிமரம் நன்றாக பருத்து இருக்கும். கிராமப்புறங்களின் பாரம்பரிய அடையாளங்களில் ஆலமரமும் ஒன்று. நம் நாட்டின் தேசிய மரம் இதுதான்.
இதன் விழுதுகள் தூண் போன்று காட்சியளிக்கும். கிளைகளை விழுதுகள் தாங்கி நிற்கும். "தெள்ளிய ஆலின் சிறு பழத்தொருவிதை..." அதிவீரராம பாண்டியன் இயற்றிய 'வெற்றிவேற்கை' நூலில் இப்படி தொடங்கும் பாடலில் ஆலமரத்தின் பெருமைகளைப் பற்றி கீழ்க்கண்டவாறு சொல்லி இருப்பார்.
"சிறிய மீனின் முட்டையை விட சிறியதான ஆலமர விதையானது
நாற்பெரும் படையோடு வரும் மன்னரும் தங்க நிழல் தரும். ."
பாவேந்தர் பாரதிதாசன் தனது 'அழகின் சிரிப்பு' நூலில் ஆலமரத்தைப் பற்றி பாடியுள்ளார்.
ஆயிரம் கிளைகள் கொண்ட
அடிமரம் பெரிய யானை
போயின மிலார்கள் வானில்
பொலிந்தன பவளக் காய்கள்
காயினை நிழலாற் காக்கும்
இலையெலாம் உள்ளங் கைகள்
ஆயஊர் அடங்கும் நீழல்
ஆலிடை காண லாகும்
சங்க காலத்தில் சிவபெருமானை 'ஆலமர் செல்வன்' என்று பல நூல்களில் குறிப்பிட்டுள்ளன. அதன் பொருள் ஆலமரத்தின் கண் அமர்ந்த சிவன் என்பதாகும்.
"ஆலமர் செல்வன் அணி சால் பெறு விறல்" -கலித்தொகை
"ஆலமர் செல்வன் புதல்வன்" -சிலப்பதிகாரம்
பட்டுக்கோட்டை அருகே பரக்கலக்கோட்டை என்ற ஒரு ஊரில் பிரசித்தி பெற்ற பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இங்கு சிவன் வெள்ளால மர வடிவில் காட்சி தருகிறார். தல விருட்சம் ஆலமரம். ஆலமரத்தை சுற்றி கருவறை சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
ஆலமரமே சிவபெருமானாக விளங்குகிறது. மரமே மூர்த்தியாக இருப்பது இக்கோவிலின் சிறப்பு அம்சமாகும் .
"ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்..." - என்று
திருப்பாவை பாடல் 26 ல் திருப்பாற்கடலில் ஆலிலை மேல் பெருமாள் துயில்வது போல போற்றி பாடப்பட்டுள்ளது. இறைவனோடு நெருங்கிய தொடர்புடையது ஆலமரம் என்பதற்கான சான்றுகள் இவையே.
"ஆத்தோரத்திலே ஆலமரம்...ஆலமரம்...அலமரத்தில் தூளி
கட்டி ஆட வரும் ஸ்வர்ணக்குயிலே...
"ஆலமர வேரு எங்க பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம் இங்கே நிலைத்திருக்கும் பாரு..."
"ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தாய் அதில் நான்
வீழ்ந்து விடாதிருந்தேன்..."
"ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நானிருப்பேனே"
இவை அனைத்தும் ஆலமரம் தொடர்பான பிரபல திரையிசைப் பாடல்கள். ஆல மரத்தின் பால், இலை, பட்டை , வேர், விழுதுகள் இவை அனைத்தும் மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.
மூங்கில் மரம்
=============
மூங்கில் என்றதுமே நம் காதுகளில் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்..' பாடல் ஒலிக்க ஆரம்பித்து விடும். கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.வி.
இசையமைத்து டி,எம்.எஸ். அவர்கள் அற்புதமாக பாடிய பாடல் அது. ரேடியோ மட்டும் இருந்த காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் காலை 6.00 மணிக்கு மேல் நிச்சயம் இந்த பாடலை கேட்கலாம்.இசைக்கு மூங்கில் தந்த பங்களிப்பை கவிஞர் உயர்த்தி காட்டியுள்ளார். மரத்துக்கும் உயிருள்ளது. அதன் உள்ளேயும் நாதம் உள்ளது என்பது நமக்கு புரிகிறது.
மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இவ்வகையில் மிகவும் பெரிதாக சுமார் 40 மீட்டர் உயரம் வளரக்கூடியது மூங்கில்தான்.
கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரமுள்ள பிரதேசங்களில் மூங்கில் நன்றாக வளரும். மலைச் சரிவுகளும் வறண்ட பிரதேசங்களும் மூங்கில் நன்றாக வளர ஏற்ற இடங்கள்.
சீனா, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாநேபாளம், வங்காள தேசம், கென்யா ஆகிய நாடுகள் மூங்கில் உற்பத்தியில் முன்னணி நாடுகளாக இருக்கின்றன.
கிராமப்புறங்களில் அழகான மூங்கில் தோப்புகளைப் பார்க்கலாம். மூங்கிலை பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம் , மக்களின் நண்பன் என்றும் அழைப்பார்கள். சுற்றுச்சூழலை பாதுகாக்கும். கார்பன் டை ஆக்ஸைடை உட்கொண்டு ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. வேரிலிருந்து நுனி வரை மருத்துவ குணம் கொண்டது. காகிதச் தொழிற்சாலைகளுக்கு பெருமளவு பயன்படுகிறது.
கோயில் திருவிழாக்களில் சுவாமி பல்லக்கில் வீதி உலா வருவதை பார்த்திருக்கிறோம். அதற்கான மூங்கில் தனியாக எங்கேயும் விளையாது. மூங்கில் வளரும் காலத்தில் பல்லக்கு செய்வதற்காக அதை வளைத்து வளரவிடுவார்கள். இத்தகவலை திரு.லண்டன் சுவாமிநாதன் அவர்கள் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மரம் பற்றிய பல அரிய தகவல்களையும் தனது கட்டுரைகளில் அவர் விளக்கமாக தந்துள்ளார். புதுச்சேரியில் உள்ள ஆரோவில் என்ற இடத்தில் மூங்கில் ஆராய்ச்சி மையம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18 ந் தேதி உலக மூங்கில் தினம் இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. மூங்கில் வளர்ப்பு பற்றிய பயிற்சி இம்மையம் நடத்தி வருகிறது.
மூங்கில்கள் தங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான் பூக்கும். அப்படி பூக்கும் போது அது 60 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது என்று அர்த்தம். பூத்த சில நாட்களிலேயே அந்த மரம் தனது வாழ்நாளை நிறைவு செய்து விடும். பூக்களில் இருந்து கொத்து கொத்தாக காய்ந்த விதைகள் கீழே விழுந்து மீண்டும் மறு ஜென்மம் எடுக்கும் அந்த மூங்கில். கீழே விழும் அந்த விதைகளை தான் மூங்கில் அரிசி என்று சொல்வார்கள். பறவைகள், விலங்குகள் அதை உணவாக தின்று வாழும். பழங்குடி மக்கள் இதை சேகரித்து சமைத்து சாப்பிடுவார்கள். சர்க்கரை வியாதிக்கும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் இந்த அரிசி பயன்படுகிறது.
பனை மரம்
==========
தமிழர்களின் அடையாளங்களில் பனை மரமும் ஒன்று. தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டங்களில் அதிக அளவில் பனை மரங்கள் வளர்கின்றன. இந்தியாவிலுள்ள பனை மரங்களில் 80 சதவீதம் தமிழகத்தில் தான் வளர்கின்றன.
பனை மரத்தின் பெருமைகளை எடுத்துரைக்க எழுதப்பட்ட நூல் 'தாலவிலாசம்' ஆகும். யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரைச் சேர்ந்த சோமசுந்தரப் புலவர் என்பவர் இயற்றினார்.
நம் முன்னோர்கள் வாழையை விட இன்னும் கூடுதலாக பயன்படுத்தியது பனை மரத்தை தான். 1980 க்கு முன்பு வரையில் டூரிங் திரையரங்கம் அமைய பனை மரங்கள் தான் அதிகம் பயன்பட்டன. பனை மூலம் தயாரிக்கப்பட்ட துடைப்பங்களை பயன்படுத்தினர். கோடைக்காலங்களில் பனை விசிறிகள் அதிகமாக பயன்பாட்டில் இருக்கும். தற்சமயம் எங்கோ சில இடங்களில் சிலர் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
பனை வெல்லம், பனங்கற்கண்டு, பதநீர், பனை நுங்கு,பனங்கிழங்கு இவையெல்லாம் இன்றும் மக்கள் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.
பனங்கற்கண்டு இருமலுக்கும், சளிக்கும் சிறந்த மருந்தாகும். நாகரீகம் வளர வளர பழங்கால மனிதர்கள் இயற்கை சீற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பரந்து விரிந்து இருக்கும் பனை ஓலைகள் உதவியுடன் குடிசை அமைத்துக் கொண்டு வாழ ஆரம்பித்தார்கள். தமிழக வரலாற்றின் தொடக்கத்தில் இருந்தே பனை மரங்கள் முக்கியஇடத்தை பிடித்துள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது.
"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்..."
பழந்தமிழ் இலக்கியத்தில் 'நாரை விடு தூது' என்ற நூலில் அதன்
ஆசிரியரான சத்தி முத்தப் புலவர் தனது நிலை குறித்து மனைவிக்கு சொல்ல நாரையை தூது போகச் சொல்லி பாடுகிறார். அப்போது அதன் வாயான அலகை பிளந்த பனங்கிழங்கு போல இருப்பதாக சொல்கிறார்.
வேப்பமரம்
==========
கிராமப்புறங்களின் ஆகச் சிறந்த அடையாளங்களில் வேப்பமரம் பிரதான இடத்தை பிடித்துள்ளது. வீட்டுக்கு அருகில் ஒரு வேப்பமரம் இருந்தால் நமது ஆரோக்கியம் எப்போதும் மேம்பட்ட நிலையில் இருக்கும்.
இது ஒரு மூலிகை மரம் என்றும் சொல்லலாம். இதன் இலைகள் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. ஈஷா யோகா மையத்தில் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தினமும் சுண்டைக்காய் அளவு வேப்பிலை மற்றும் மஞ்சள் உருண்டைகளை உட்கொள்ள தருகிறார்கள். உடல் ஆரோக்கியம் என்றும் ஒரே சீராக இருக்க அவைகள் உதவுகின்றன.
வேப்ப மரத்தின் பூ, காய், பட்டை என்று அனைத்துமே மருத்துவ
குணங்கள் கொண்டவை. வேப்பம் பூ ரசம் உடலுக்கு நல்லது.
தோல் வியாதி, அரிப்பு போன்ற வியாதிகளுக்கு வேப்பம் பூ
சிறந்த மருந்து.
"THE NEEM TREE" என்ற பெயரில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த
பெண் கவிஞர் எல்சா காஸி (ELSA KAZI) என்பவர் வேப்பமரம் பற்றி
ஆங்கிலத்தில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
MY LOVELY NEEM
THAT INTERCEPTS SUN'S SCORCHING BEEM
YET BEARS THE HEAT ALL THE DAY...
இந்த ஆங்கிலப் பாடலின் மையக்கருத்து வேப்பமரத்தின் தியாகத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ வேண்டும் என்பதை கவிஞர் வலியுறுத்துகிறார். வெயிலின் உக்கிரத்தை தாங்கி நின்று மற்றவர்களுக்கு நிழல் தருகிறது வேப்பமரம். அதன் குறிக்கோள் மற்றவர்களுக்கு உதவிட வேண்டும் என்பதை தவிர வேறு எதுவுமில்லை. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் இதைத்தான் வேப்ப மரம் நமக்கு கற்றுத் தருகிறது.
வேப்ப மரத்தின் சிறப்பை இவ்வாறு போற்றி பாடியுள்ளார். எழுதுவதற்கு இன்னும் ஏராளமான மரங்கள் ஏராளமான தகவல்களோடு இருக்கின்றன. அவைகளைப் பற்றி விரிவாக வேறொரு கட்டுரையில் எழுதுவேன்.
"மரம் சிருஷ்டியில் ஒரு சித்திரம்
பூமியின் ஆச்சரியக்குறி
நினைக்க நினைக்க நெஞ்சூரும் அனுபவம்
விண்மீனுக்கு தூண்டில் போடும் கிளைகள்
வெட்டி நட்டால் கிளை மரமாகுமே
வெட்டி நட்டால் கரம் உடம்பாகுமா.......
உண்ண கனி
ஒதுங்க நிழல்
உடலுக்கு மருந்து
உணர்வுக்கு விருந்து
அடைய குடில்
அடைக்க கதவு
மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்
மனிதா மனிதனாக வேண்டுமா மரத்திடம் வா
ஒவ்வொரு மரமும் போதி மரம்....
மரம் பற்றி வைரமுத்து எழுதிய ஒரு அற்புதமான கவிதையோடு தற்காலிக முற்றுப்புள்ளி .இந்த கட்டுரைக்கு வைக்கிறேன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
source https://www.vikatan.com/oddities/my-vikatan-article-about-trees
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக