மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பதில் அளிக்கும்போது, அவரது வெளிர் நீல நிற `பந்த் காலா' ஜாக்கெட் அணிந்து வந்த படங்கள் ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி நேற்று நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட வெளிர் நீல நிற ஜாக்கெட் அணிந்து வந்துள்ளார்.
இந்த ஜாக்கெட் பெங்களூருவில் நடைபெற்ற இந்திய எரிசக்தி வார விழாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) பிரதமர் மோடிக்கு வழங்கியது. இந்தியன் ஆயில், அதன் ஊழியர்களுக்கும் ஆயுதப்படைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடைகள் உருவாக்க 10 டன் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆடையை பிரதமருக்கு வழங்கியுள்ளது.
``மோடி அணிந்திருக்கும் ஜாக்கெட் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களால் ஆனது” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகள்
ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருந்தன. ஆனால், இன்று அவை ஆடை உற்பத்திக்கு சாதகமான முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
பிஈடி (PET) பாட்டில்களிலிருந்து தயாரிக்கப்படும் ஆடைகள் வேகமாக ஒரு நாகரிகமாக மாறி வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களால் செய்யப்பட்ட இந்தப் பச்சை நிற ஆடைகளை பலரும் அணிவதைக் காணலாம். பச்சை நிற ஆடைகளை அணிவது நாம் நம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற் கான பொறுப்பாகவும் விவேகமாகவும் இருப்பதன் அடையாளமாக மாறிவிட்டது.
பிப்ரவரி 6-ம் தேதி இந்திய எரிசக்தி வாரத்தின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஐ.ஓ.சி-யின் சீருடையான `அன்பாட்டில்ட்' அறிமுகப்படுத்தினார்.
நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அதன் பெட்ரோல் பம்புகள் மற்றும் எல்பிஜி விநியோகஸ்தர்களுக்கும், நிர்வகிக்கும் ஊழியர்களுக்கும் சுற்றுச்சூழல் நட்பு சீருடைகளை உருவாக்க ஆண்டுதோறும் 100 மில்லியன் கைவிடப்பட்ட மினரல் வாட்டர், குளிர்பானம் மற்றும் பிற PET பாட்டில்களை மறுசுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரதமர் மோடிக்கு இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட ஜாக்கெட்டை வழங்கியுள்ளது.
மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து தயாரிக்கப்படும் பச்சை ஆடைகள் மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதில் தேவையற்ற பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, பாலிஸ்டர் இழைகளை பிரித்தெடுத்து, பின்னர் அவை நூலாக சுழற்றப்பட்டு துணியாக உருவாக்கப் பயன்படுகின்றன.
இந்த வகை ஆடைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், இது குப்பைத் தொட்டிகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை திசை திருப்புகிறது. கூடுதலாக, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம், பச்சை ஆடைகளின் உற்பத்தியானது வழக்கமான ஆடைகளின் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது குறைந்த கார்பன் தடயத்தைக் கொண்டிருக்கும்.
மறுசுழற்சி செய்த ஆடை ஆபத்தானதா?
``மறுசுழற்சி செய்த ஒரே ஆடையை உடல் மீது படும்படி அப்படியே நீண்ட காலம் அணிவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்புள்ளது. அதனால் நம் உடலைப் பற்றி நன்கு அறிந்த பின் இது போன்ற ஆடைகளை அணிய வேண்டும். விழிப்புணர்வுக்காக அணிவது வேறு. தினம்தோறும் அணிவது என்பது வேறு” என்கிறார் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ஜெயஶ்ரீ.
source https://www.vikatan.com/news/prime-minister-narendra-modis-blue-is-plastic-jacket-dangerous
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக