ஈரோடு இடைத்தேர்தல், தமிழ்நாடு அரசின்மீதான விமர்சனம், வேங்கைவாசல் விவகாரம், கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் உயிரிழந்தது தொடர்பான சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.
“கூட்டணிக் கட்சி என்பதால் தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்யத் தயங்குகிறீர்களா?”
“இந்த அரசாங்கம் பல்வேறு பணிகளில் அவுட் சோர்சிங் முறையைக் கொண்டு வந்தது. அதைக் கடுமையாக நாங்கள் எதிர்த்தோம். பல இடங்களில் போராட்டங்களும் நடத்தினோம். மின்சாரக் கட்டணம், சொத்துவரி உயர்த்தியபோதும் கடுமையாக விமர்சனம் முன்வைத்து எதிர்த்தோம். அதனாலேயே எங்களைக் கடுமையாக விமர்சித்து முரசொலியில் கட்டுரை எழுதினார்கள். எனவே அரசு செய்யும் நல்ல விஷயங்களை வரவேற்பதும், அதே நேரத்தில் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கும்போது சுட்டிக்காட்டுகிறோம், கண்டிக்கிறோம், மாற்றிக்கொள்ளச் சொல்லி வழியுறுத்துகிறோம். எங்களின் வலியுறுத்தலை ஏற்றுக்கொண்டு இந்த அரசும் பல விஷயங்களில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறது.”
“காஞ்சிபுரம் மாணவி விவகாரம், கூர்நோக்கு இல்ல மரணம் உள்ளிட்ட விவகாரங்களில் கடிதம் எழுதும் வரை சென்றீர்களே?”
“காஞ்சிபுரம் மாணவி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்து ரிமாண்ட் செய்துவிட்டார்கள். கூர்நோக்கு இல்ல விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்யச் சொல்லவேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். உடனடியாக அந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டார்கள். நடக்கும் அனைத்துப் பிரச்னைகளிலும் அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கிறது. நிகழ்ந்துவிட்ட சம்பவத்தில் அதிகப்படியான நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்துகிறோம். அதுவும் நடந்துவிடுகிறது. விமர்சனம் செய்ய வேண்டுமே என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு பேசக் கூடாது இல்லையா?”
“கூட்டணிக் கட்சிகள் தவிர்த்த ஆளுநரின் தேநீர் விருந்துக்கு முதலமைச்சர் மட்டும் சென்று வந்திருக்கிறாரே?”
“தி.மு.க என்ற தனிக்கட்சியாகவும், ஆளும் அரசாகவும் ஆளுநரை வற்புறுத்துகிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், அதே சமயத்தில் ஆளுங்கட்சியாக இருப்பதால் மத்திய அரசுடன் மோதிக்கொண்டே இருக்கவும் முடியாது. அரசுரீதியிலான நடவடிக்கையில் முதலமைச்சராகக் கலந்துகொண்டுதானே ஆக வேண்டும். சட்டப்பேரவையில் ஆளுநர் எல்லையைத் தாண்டும்போது முகத்தில் அடித்தது போல தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பிறகு ஆளுநர் தன் படிநிலையில் இறங்கி வரும்போது நாமும் இறங்கி வரவேண்டும் என நினைக்கிறார். மத்திய அரசு, ஆளுநரால் பிரச்னை வரும்போது அதைத் தட்டிக்கேட்பதும். அது சரியான பிறகு ஆளுங்கட்சி என்கிற முறையில் சுமுகமாகச் செல்வதும் தேவையான ஒன்றுதான். அதைக் குறை சொல்ல முடியாது.”
“பி.பி.சி ஆவணப்படம் வெளியிட்டதில் எதிர்க்கட்சிகளின் அரசியலும் அடங்கியிருக்கிறது என்கிறார்களே?”
“எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய என்ன இருக்கிறது. கோத்ரா சம்பவம் நடந்த அன்றைக்கு பி.பி.சி நிறுவனம் அதை ஆவணப்படுத்தி வைத்திருந்தது. அதைத் தற்போது பிரிட்டிஷ் மக்களுக்காக வெளியிட்டிருக்கிறது. இன்றைக்கு இருக்கும் இணைய வளர்ச்சியால் உலகம் முழுவதும் அது பரவிவிட்டது. அதைப் பார்த்து மக்கள் கொதிக்கிறார்கள். அதில் இருப்பது உண்மையா பொய்யா என்பதைச் சொல்வதைவிட்டு அரசியல் செய்கிறார்கள் எனச் சொல்வது எந்த வகையில் நியாயம்?”
“இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்குத்தான் சாதகம் என்ற அடிப்படையில்தான், உங்கள் கூட்டணிக் கட்சியான தி.மு.க இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறதா?”
“எதிர்க்கட்சிகளும் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறும் இருக்கிறது. இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் பா.ஜ.க, அ.தி.மு.க-வுக்குள் இருக்கும் பூசல், பா.ம.க வெளியில் வந்தது உள்ளிட்ட விவகாரங்களால் எதிர்க்கட்சியினர் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். இடைத்தேர்தலிலேயே இப்படிக் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்றால் இவர்கள் நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற சந்தேகம் மக்களிடம் இருக்கிறது. எனவே, ஆளுங்கட்சி என்பதாலேயே வெற்றி பெற்றுவிடுவோம் என்ற கூற்றில் எனக்கு உடன்பாடில்லை.”
“தமிழ்நாடு அரசை அதிகாரிகள்தான் வழிநடத்துகிறார்கள் என்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“அரசின் கொள்கைத் திட்டத்தைத்தான் அதிகாரிகள் செயல்படுத்துவார்கள். அவர்களாகப் புதிதாக எதையும் செயல்படுத்திவிட முடியாது. ஒருசில நடவடிக்கைகளில் அதிகாரிகள் அவர்கள் இஷ்டத்துக்கு முடிவெடுத்திருக்கலாம். அது அப்போதைய சம்பவத்தையொட்டி எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம். அரசின் செயல்பாட்டை ஒட்டித்தான் அதிகாரிகள் நடந்துகொள்கிறார்கள். இந்த அரசு கட்டுப்பாட்டோடுதான் இயங்கிக் கொண்டிருக்கிறது.”
“தலித்துகள்மீது நடக்கும் வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராடாமல் எய்ம்ஸ்-க்காகப் போராட்டம் நடத்தியிருக்கிறீர்களே?
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் தமிழ்நாட்டில் இருக்கும் மற்றெந்தக் கட்சியைவிடவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் கட்சி. கள்ளக்குறிச்சியிலுள்ள மூங்கில் துறைப்பாடியில் ஒரு பிரச்னை என்றாலும், அதற்கும் நாங்கள்தான் குரல் கொடுக்கிறோம். விரைவில் விழுப்புரத்தில் பட்டியலின மக்களுக்காக ஒரு போராட்டம் நடத்தவிருக்கிறோம். இந்த பட்ஜெட்டிலாவது தமிழ்நாட்டு எய்ம்ஸ்-க்கான நிதியை ஒதுக்குவீர்களா என்ற கேள்வியை முன்வைத்துதான் போராட்டம் நடத்தினோமே தவிர வன்கொடுமைக்கு எதிராகப் போராடுவதைவிட எய்ம்ஸ் விவகாரம் பெரிது என்பதற்காக அல்ல.”
“வேங்கைவாசல் விவகாரத்தில் மாற்றுச் சாதியினரின் வாக்கு வங்கிக்காகத்தான் அரசு இந்தத் தாமதம் செய்கிறது என எதிர்க்கட்சியினர் விமர்சனம் முன்வைக்கிறார்களே?”
“என்றைக்கிருந்தாலும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துதானே ஆக வேண்டும். இப்படி ஒரு சம்பவத்தை செய்தவர்கள்தான் குற்றவாளிகளே தவிர, அவர்களின் சாதி அப்படியல்ல... எனவே, இதைப் பயன்படுத்தி சாதியப் பதற்றத்தை ஏற்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை.”
source https://www.vikatan.com/government-and-politics/politics/marxist-communist-state-president-k-balakrishnan-shares-his-views-on-current-political-happenings
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக