Ad

சனி, 4 பிப்ரவரி, 2023

சுற்றுலா பயணியால் தான்சானியா காட்டுக்குள் நெஞ்சை பதறவைத்த சம்பவம்! | சமவெளி -6

ஒரு காடோடியாகக் கடந்த 18 ஆண்டுகளாகக் காடுகளில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன், அதில் என் மனதை விட்டு அகலாத ஒரு துயர நிகழ்வை உங்களிடம் சொல்லிவிட்டு சிவிங்கிப் புலிகளை அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்…

WILDEBEEST MIGRATION

ஆப்பிரிக்க காடுகளில் காட்டு மாடுகள் பயணத்தின் ஆரம்ப புள்ளியான  நுடுத்து ( NDUTHU) பகுதி, இங்குதான் காட்டு மாடுகள் ஒவ்வொன்றும் குட்டிகளைப் பிரசவிக்கும், லட்சக்கணக்கில் குட்டிகள் பிறப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதைப் பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும் இங்கு அதிகம் வருகை தருகின்றனர்.

ஒரு சில பிரசவங்கள் நடைபெறும் மருத்துவமனைகளில் குழந்தைகளை மாற்றிவிட்டார்கள் எனப் பேரறிவு கொண்ட (தானே சொல்லிக் கொள்ளும்) அறிவு ஜீவியான மனிதர்களால் உருவாக்கப்படும் பிரச்சனைகளை அடிக்கடி செய்திகளாகப்  பார்த்திருப்போம்… ஆனால் லட்சக்கணக்கான காட்டு மாடுகள் பிரசவித்து தனது குட்டிகளுடன் ஊர்வலம் போகும் இந்த “மெகா பேரணி”யில் எப்படி தாயைக் குட்டிகளும் குட்டிகளைத் தாயும் அடையாளம் கண்டு கொள்ளும்….?

குட்டிகள்  பிறந்ததும் குட்டிகளைத் தாய் முகர்ந்து பார்க்கும். அந்த நுகர்வு தான், இது தன் குட்டி என தாய்க்கு உணர்த்தும், குட்டிகளும் இது தனது தாய் என அடையாளம் கண்டு கொள்ளும். குட்டிகள் வளர்ந்து தாயிடமிருந்து பிரிந்து தனியே செல்லும் வரை இந்த “நுகர்வு” தான் தாயையும் குட்டியையும் இணைக்கும் இணைப்பு சங்கிலி, இது இயற்கை அந்த விலங்குகளுக்குக்  கொடுத்த வரம்.

ஒருமுறை நானும் எனது வன விலங்கு ஆர்வலர்கள் குழுவும் வாகனத்தில் அமர்ந்து ஆங்காங்கு பிரசவிக்கும் காட்டு மாடுகளைப் பார்த்து, புகைப்படம் எடுத்துக்கொண்டுருந்தோம்.

தான்சானியா காடு

எங்களுடைய வண்டி டிரைவர் நல்ல வழிகாட்டி. அவர் ``பிரசவிக்கும் காட்டு மாடுகளுக்கு நாம் அருகில் செல்ல வேண்டாம், ஏனெனில் பிரசவிக்கும் போது நாம் அருகில் சென்றால் தாய் மாடு பயந்து, குட்டி பாதி வெளிவந்த நிலையில் ஓட ஆரம்பிக்கும், இது தாய்க்கும் குட்டிக்கும் ஆபத்தை விளைவிக்கும், மேலும் குட்டி வெளியில் வந்ததும் தாய் அதை நுகராமல் ஓடிவிட்டால்  குட்டி அனாதையாகி விடும். எனவே 100 மீட்டர் தூரத்தில் இருந்தே  அதைப் பார்த்து  புகைப்படம் எடுங்கள்” என சொல்லி இருந்தார். அதன்படி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது இன்னொரு வாகனம்  வெளிநாட்டினரை  ஏற்றிக்கொண்டு   எங்களுக்கு அருகிலே வந்து   நின்றது.

அதில் வந்த சுற்றுலா பயணி தாய் மாட்டிற்கு மிக அருகில் போய் படம் எடுக்கணும் என சொல்லவும், அந்த டிரைவரும் எங்கள் டிரைவர் போல் அதற்கு  விளக்கம் அளித்தார். இருப்பினும் தொடர்ச்சியாக அவர் வற்புறுத்தி, கத்த ஆரம்பிக்கவும், வேறு வழி தெரியாமல்  பிரசவிக்கும் ஒரு மாட்டுக்கு மிக அருகில் சென்று விட்டார்.

பிரசவித்து முடிந்ததும் தன் குட்டியை நுகர்ந்து கூட பார்க்காமல் பயத்தில் ஓடிவிட்டது தாய்மாடு. பிரசவித்த கன்றுக்குட்டி மெது, மெதுவாக தன்னை சுத்தம் செய்து கொண்டு எட்டிப் பார்த்து தன் தாயைத் தேடியது. ஆனால்  தாயும் தன் கன்றை நுகர்ந்து பார்க்கவில்லை. கன்றும் தன் தாயை நுகர்ந்து பார்க்கவில்லை. எனவே  தாயை அடையாளம் தெரியாமல்  கத்திக் கொண்டே இருந்தது அந்தப் பிரசவித்த கன்றுக்குட்டி. இது காலையில் 10 மணிக்கு நடந்த சம்பவம்..

காட்டு மாடுகளின் (WILDEBEEST ) நீண்ட பேரணி

நெடுநேரம் நாங்களும் தாய் வருமா ? என காத்துக் கொண்டிருந்தோம்,வரவில்லை. மதியம் 2 மணி அளவில் மீண்டும் அங்குச் சென்று பார்த்தோம். அப்போதும் அந்தக் குட்டி கத்தி கொண்டே இருந்தது. மாலை 5 மணிக்கு சென்று பார்த்தோம். அப்போதும் தன் சக்தியை இழந்து மெதுவாக கத்திக் கொண்டிருந்தது அந்தக் குட்டி. இனி அந்தக் குட்டி பிழைக்க வாய்ப்பு இல்லை. ஏதாவது ஒரு வேட்டை விலங்கு இன்று  இரவு  அதை கொன்று விடும். பாவம்.. இதன் ஆயுள் ஒரு நாள் மட்டும் தான் போல… என எங்களது வழிகாட்டி சொல்ல  புகைப்பட பேராசையால் வாழ்வை இழந்த அந்த ஒரு நாள் குட்டியை எண்ணி மன அழுத்தத்துடன் அங்கிருந்து கிளம்பினோம்.

மனிதன் காட்டுயிர் புகைப்படம் எடுக்கலாம் தவறில்லை, ஆனால் எந்த நிலையிலும் அதற்கு தொந்தரவு தரக்கூடாது.. அப்போது என் நினைவில் வந்து போன வாசகம் எழுத்தாளர் ஜி நாகராஜன் எழுதிய “மனிதன் மகத்தான சல்லிப்பயல்”  இதில் எல்லா நாட்டுக்காரரும் ஒரே மாதிரி தான் போல...

தான்சானியா காடு

இது நடந்து சில வருடங்கள் கழித்து ஒருமுறை தமிழக காடுகளில் பயணம் சென்றிருந்தபோது என் உடன் வந்த புதிய இளம் காடோடிக்கு இந்தக் கதையை சொல்லிக் கொண்டிருந்தேன்.

அப்போது அவர்,  நீங்கள் அந்தக் குட்டியை உங்கள் வழிகாட்டி உதவியுடன் அதற்கானக் காட்டிலாக அதிகாரியிடம் சொல்லி காப்பாற்றி இருக்கலாமே? நீங்கள் புகைப்படம் மட்டும்தான் எடுப்பீர்களா?  என யோசிக்காமல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தார். அனைத்தையும் கேட்டுவிட்டு அவருக்கு நான் சொன்ன  பதிலை உங்களுக்கும் தருகிறேன்...

காட்டுயிர்கள் பல்வேறு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, 1948 -ல் உலகளாவிய IUCN [The International Union for Conservation of Nature] என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு அதன்படி காட்டுயிர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  • Extinct (EX) – அழிந்துவிட்ட இனம்

  • Extinct in the wild (EW) – மிருகக்காட்சி சாலையில் அல்லது வளர்ப்பு மிருகங்களாக மட்டுமே உள்ளவை.

  • Critically endangered (CR) – அழிவின் விளிம்பில், காட்டில் ஓரிரண்டு எஞ்சியிருக்கும்  விலங்குகள்

  • Endangered (EN) – அழியும் ஆபத்தில் உள்ள காட்டுயிர்கள்.

  • Vulnerable (VU) – எதிர்கால ஆபத்தில் உள்ள காட்டுயிர்கள் .

  • Near threatened (NT) – தற்போது நல்ல நிலையில் இருக்கிறது,  எதிர்காலத்தில்  ஆபத்துக்கு செல்லலாம்.

  • Least concern (LC) –  நிறைய உள்ளது, ஆபத்து இல்லா காட்டுயிர்கள்.

தான்சானியா காடு

இதன்படி நமது காட்டில் வாழ்ந்த சிவிங்கிப் புலிகள் அழிந்துவிட்ட இனம், நமது தேசிய விலங்கான புலி அழியும் ஆபத்தில் உள்ள விலங்கு.

இந்த அட்டவணையில் மூன்றாவது, 4வது நிலையில் உள்ள காட்டுயிர்கள் ஆபத்தின் விளிம்பில் காட்டில் காணப்பட்டால், அதை காட்டிலாகா அதிகாரிகள் மூலம் காப்பாற்ற முயற்சிக்கலாம். உதாரணமாக தாயை இழந்த யானைக்குட்டி, புலிக்குட்டியை சொல்லலாம். அதே நேரம் இயற்கையாக ஒரு புலி, அழியும் நிலையில் உள்ள ஒரு விலங்கை வேட்டையாடினால் அது இயற்கையின் நியதி.

இங்கு நான் கண்ட அந்தக் காட்டு மாடு குட்டி அட்டவணையில் கடைசி நிலையில், அதிக எண்ணிக்கையில்  உள்ளவை. ஆபத்தில்லை என்று வரையறுக்கப்பட்டுள்ளது, எனவே அதைக் காப்பாற்ற வேண்டிய தேவை இருக்காது.

மேலும் தான்சானியா காட்டின் வனத்துறை சட்டப்படி, காட்டிற்குள் நம் வாகனத்தை விட்டு இறங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே நேரில் சென்று குட்டியைக் காப்பாற்றி, நமது தமிழ் சினிமா படத்தின் கதாநாயகன் போல் தோளில் தூக்கி போட்டுக் கொண்டு வர இயலாது. எனவேதான் இயற்கையின் போக்குக்கு அந்த குட்டியை விட்டுவிட்டு வந்தோம்.

இதை நான் சொல்லி முடித்ததும் உடன் வந்த அந்த இளம் காடோடி தனித்து விடப்பட்ட அந்தக்  குட்டியைப் படம் எடுத்தீர்களா?  எனக்கு அந்தப் புகைப்படத்தை அனுப்பி வைக்க முடியுமா? எனக் கேட்டார்.

“இல்லை தம்பி அந்தப் புகைப்படத்தை நான் அப்போதே அழித்துவிட்டேன், ஏனெனில் சில புகைப்படங்கள்  விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்பதாலும் மற்றும் எப்போது அந்த படத்தை திரும்ப பார்த்தாலும் மனது வலிக்கும் என்பதால், அழித்துவிட்டேன்” என்றேன்.

 அந்தத் தம்பி சற்று அதிர்ச்சியாகி மிகப்பெரிய விமர்சனங்களுக்கு உள்ளான புகைப்படத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.. அதையும் தெரிந்து கொள்கிறேன், என கேட்கவும் அதையும் அந்தத் தம்பிக்கு கூறினேன்.

தற்போது ``தெற்கு சூடான்” என்று அழைக்கப்படும் சூடான் நாட்டில் 1993-ல் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. உணவு கிடைக்காமல் மக்கள் மாண்டு கொண்டிருந்த காலம் அது.

``கெவின் கார்ட்டர்” (Kevin Carter) என்ற தலைசிறந்த புகைப்படக்காரர் பஞ்சத்தின் அவலங்களைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எடுத்த புகைப்படம் உணவுக்கு வழி இன்றி அமர்ந்திருக்கும் ஒரு குழந்தைக்குப் பின்னால் நிற்கும் ஒரு பாரு கழுகின் புகைப்படம்.

தெற்கு சூடான் பஞ்சம்

எப்போது அந்தக் குழந்தை மடியும் அதை நாம் உணவாக்கிக் கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பைச் சொல்வது போல் இருந்தது அந்தப் புகைப்படம்.

1993 -ம் ஆண்டு மார்ச் மாதம் “நியூயார்க் டைம்ஸ் [The New York Times]” பத்திரிக்கையில் “போராடும் பெண் குழந்தை” [The Struggling Girl] என்ற தலைப்பில் வெளிவந்து உலகத்தை உலுக்கியது அந்தப் புகைப்படம்.

அந்த ஆண்டின் புகைப்படத்திற்கானத் தலைசிறந்த விருதான புலிட்சர் [Pulitzer Prize for Feature Photography]  பரிசையும் தட்டிச்சென்றது. ஆனால் இந்தப் படத்தை எடுத்ததற்குப் பதிலாக அந்த குழந்தையைக் காப்பாற்றி இருக்கலாம் என உலகளாவிய விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்தன.

கெவின் கார்ட்டர்

அந்த விமர்சனங்களைத் தாங்க முடியாத  புகைப்படக்காரர் “கெவின் கார்ட்டர்” பரிசு பெற்ற 4 மாதங்களில் தற்கொலை செய்து கொண்டார் என்பது ஒரு சோக வரலாறு.

ஆனால் தன்னுடைய  புகைப்படம்தான்  சூடான் நாட்டுக்கு உலகளாவிய உதவியை பெற்று தந்தது என்பதை அறிந்து கொள்ள கெவின் கார்ட்டர்  அப்போது உயிரோடு இல்லை என முடித்தேன்.

காட்டு மாடுகளின் பயணத்தில் ஆரம்பப் புள்ளியான நுடுத்து [NDUTHU] பகுதியில் ஏற்பட்ட அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். இந்த காட்டு மாடுகளின் பேரணியில் இது மாதிரியான நிறைய அனுபவங்கள். அதை அடுத்தடுத்த பகுதிகளில் தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்கிறேன்…

அடுத்த வாரம் காட்டு மாடுகளின்“மெகா பேரணி” யில் நாமும் இணைந்து  செரங்கெட்டி தேசிய பூங்கா நோக்கி செல்வோம், அங்கு சிவிங்கிப் புலிகளை சந்திப்போம்…

- டாக்டர் மணிவண்ணன்



source https://www.vikatan.com/environment/what-the-tourist-did-the-shocking-incident-in-the-tanzania-jungle

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக