Ad

சனி, 4 பிப்ரவரி, 2023

தெற்கு சூடான்: வன்முறையில் 27 பேர் பலி; போப் ஃபிரான்சிஸ் வருகைக்கு முன்னதாக அசம்பாவிதம்!

சூடானில் 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை, உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டு அமைதிக்கான ஒப்பந்தம் போடப்பட்டதால், மோதல்கள் கணிசமாக குறைந்தன. இருப்பினும், மேய்ச்சல் பகுதிகள், நீர்நிலைகள், சாகுபடி நிலங்கள் மற்றும் பிற வளங்களுக்கான உரிமைகள் குறித்த சர்ச்சைக்குரிய பகுதிகளில் வன்முறைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதோடு சூடானில் சுமார் பத்து ஆண்டுகளாகத் தொடரும் மோதல்களில், ஆயிரக்கணக்கானோர் இதுவரை கொல்லப்பட்டிருக்கின்றனர். இத்தகைய மோதல்களுக்கு சமரச தீர்வுகாணும் பொருட்டு, காங்கோவிலுள்ள டெமோகிரேடிட் ரிப்பப்ளிக்கிலிருந்து போப் ஃபிரான்சிஸ் கடந்த வெள்ளிக்கிழமை (3-1-23) தெற்கு சூடானுக்கு வருவதாக இருந்தது.

போப் ஃபிரான்சிஸ்

அதனால், நாடு முழுவதும் போப் ஃபிரான்சிஸை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தெற்கு சூடானில் கால்நடை மேய்ப்பவர்கள் மற்றும் போராளிகளுக்கு இடையே வெடித்த வன்முறையில் 27 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது குறித்ததான அதிகாரபூர்வ தகவலை, அந்த பிராந்திய அரசு அதிகாரிகள் உறுதி செய்திருக்கின்றனர்.

இது குறித்து கஜோ-கேஜி மாவட்டக் காவல் ஆணையர் ஃபனுவேல் டுமோ பேசுகையில், ``மத்திய ஈக்வடோரியா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை (2-1-23) அன்று ஒரு கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த போராளிகள், கால்நடை மேய்ப்பர்கள் சமூகத்தைச் சேர்ந்த 6 பேரைக் கொன்றிருக்கின்றனர். அதற்கு பதிலடியாக மேய்ப்பர்கள், அந்தப் பகுதியில் ஐந்து குழந்தைகள், கர்ப்பிணி உட்பட 21 பேரைக் கொன்றிருக்கின்றனர். அரசுக்கு எதிராகச் செயல்படும் நேஷனல் சால்வேஷன் ஃப்ரன்ட் (NAS) தான் மேய்ப்பர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கொலைசெய்திருக்கக் கூடும்" என்று தெரிவித்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு NAS மறுப்பு தெரிவித்திருக்கிறது.

போர் சமுதாயத்தைச் சேர்ந்த மந்தை மேய்ப்பர்களின் பொதுச்செயலாளரான மய்யோம் அடேனி வை இந்த விவகாரம் தொடர்பாக, ``21 பொதுமக்களை மேய்ப்பர்கள் கொன்றுவிட்டதாகக் கூறுவது ஏற்புடையதல்ல... இதற்கெல்லாம் NAS-தான் காரணம்" என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் போப் ஃபிரான்சிஸ், திட்டமிட்டபடி தெற்கு சூடான் வந்தடைந்து, மக்களிடையே உரையாற்றினார்.



source https://www.vikatan.com/oddities/international/south-sudan-violence-kills-27-on-eve-of-popes-visit

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக