Ad

சனி, 4 பிப்ரவரி, 2023

`ஒவ்வொரு குழந்தை பிறப்புக்கும் 100 மரக்கன்றுகள் நடவேண்டும்' - சிக்கிம் மாநில அரசின் புதிய திட்டம்!

`மரம் நடுதல்’ குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, சிக்கிம் அரசு `மரம் ஒன்றை நடுங்கள், பாரம்பர்யம் ஒன்றை விட்டுச் செல்லுங்கள்’ என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின்படி, ஹிமாலயா பகுதியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Birth

இந்த திட்டத்தை தொடங்கி வைத்த சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் டமாங் கூறுகையில், ``இந்த திட்டத்தின் மூலம் ஒரு  குழந்தை பிறக்கையில், பூமி தாய்க்கு 100 மரங்களை நாம் திரும்ப கொடுக்கிறோம். 

ஒரு குழந்தை இவ்வுலகிற்கு வந்ததை நினைவு கூறும் விதமாக, இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார். அதோடு புதிதாக பெற்றோரான சில தம்பதியினருக்கு மரக்கன்றுகளை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், `வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு வாழ்த்துக்கள். இந்த முயற்சியில் தீவிரமாக பங்கேற்று சிக்கிமை இந்தியாவின் பசுமையான மாநிலமாக மாற்றுவதற்கு பங்களிப்பார்கள் என நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். 

மரம்!

இப்புதிய திட்டம் குறித்து வனத்துறை அதிகாரி பிரதீப் குமார் கூறுகையில், ``இந்த திட்டம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, குழந்தைகள், பெற்றோர் மற்றும் இயற்கைக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும்’’ என்று தெரிவித்துள்ளார்.

சிக்கிமின் இந்த புதிய முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் ஒவ்வொரு குழந்தை பிறப்புக்கும் 100 மரக்கன்றுகளை நடுவது சாத்தியமா என்ற கேள்வியும் மக்களிடையே நிலவி வருகிறது. எப்படியிருந்தாலும் இத்திட்டம் வரவேற்புகுரியது என்று சிலர் பேசி வருகின்றனர்.



source https://www.vikatan.com/agriculture/government/sikkim-government-started-a-new-scheme-to-plant-100-trees-when-the-child-was-born

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக