வீட்டில் நாம் சாப்பிடும் காய்கறிகள், கீரைகளை எல்லாம் பெரும்பான்மையினர் கடைகளில் இருந்தே வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால் தற்போது இயற்கை பொருள்கள் குறித்த விழிப்புணர்வு, தற்சார்பு வாழ்க்கையின் மீதான ஆர்வம் போன்றவை அதிகரித்திருப்பதன் காரணமாக வீட்டில் இயற்கையான முறையில் சிறிய அளவிலான மாடித் தோட்டம் அமைக்கப் பலரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்கான சில வீட்டுத் தோட்ட டிப்ஸ்...
ஆரம்பித்ததும் காய்கறி வேண்டாம்!
முதன்முதலில் மாடித் தோட்டம் வைப்பவர்கள் எடுத்தவுடன் காய்கறிகள் சாகுபடியில் இறங்க வேண்டாம். கத்திரிக்காய், தக்காளி போன்றவற்றில் ரிஸ்க் கொஞ்சம் அதிகம். பூச்சி, நோய்த் தாக்குதல் என இவற்றில் பிரச்னை அதிகம். எனவே ஆரம்பத்தில் இவற்றைப் பயிரிட்டு சோர்வடையாமல் பதிலாக வெண்டை, முள்ளங்கி, கீரை வகைகள், கொத்தவரை மாதிரியான குறுகிய காலத்தில் அறுவடை செய்யக் கூடியவற்றை நடவு செய்யலாம். கீரை வகைகளை 25 நாள்களிலும், மற்றவற்றை 45 நாள்களிலும் முழுவதுமாக அறுவடை செய்துவிடலாம். இவற்றில் பூச்சித் தாக்குதல் இல்லாமல் இருக்கும் என்பதால் ஆரம்பத்தில் இவற்றை பயிரிடும்போது ஆர்வம் அதிகமாக வாய்ப்புள்ளது.
காவலாளி வெங்காயம்!
எந்தச் செடியை வளர்த்தாலும் அந்தத் தொட்டிகளில் கண்டிப்பாக சின்ன வெங்காயச் செடி நடவு செய்ய வேண்டும். வெங்காயம் வளர்ந்து நமக்கு மகசூல் தரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் பயிர்களுக்கு இது காவலாளியாக இருந்து, நோய்த் தாக்குதலைத் தவிர்ப்பதில் நிச்சயம் பெரும் பங்கு வகிக்கும்.
கீரை சாகுபடியின்போது...!
கீரை போன்ற குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்யும்போதே மற்றவற்றை நடவு செய்யலாம். இந்தக் காய்கறி தான் என்று இல்லாமல் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றையும் கூட பயிரிடலாம்.
நிழல் வலை வேண்டுமா?
இந்த காய்கறிதான் என்று இல்லாமல் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றையும்கூட பயிரிடலாம். இந்த மாதிரி பயிர்களை சாகுபடி செய்ய நிழல் வலை அமைக்க வேண்டும் எனக் கூறுவார்கள். ஆனால் அது தேவையில்லாத செலவு. அதன் மூலம் பெரிய மாற்றம் ஏற்படாது. அதிகபட்சமாக 10% மட்டுமே மகசூல் அதிகமாகக் கிடைக்கும். இது இல்லாமலே பலர் நல்ல முறையில் தோட்டம் அமைத்து சாகுபடி மேற்கொள்கின்றனர்.
மாடியில் மரம்!
மாடித் தோட்டத்தில் பப்பாளி, முருங்கை, வாழை, கொய்யா போன்ற மர வகைகளையும் வளர்க்கலாம். இதற்கு அகலம் அதிகமான தொட்டி தேவைப்படும் என்பதால் பழைய இரும்புக் கடையில் இருந்து பழைய டிரம் போன்றவற்றை வாங்கி வந்து வளர்க்கலாம். மாடித் தோட்டத்தில் இயற்கையான முறையில் காய்கள் மட்டுமல்லாமல் கனிகளையும் சுலபமாக சாகுபடி செய்யலாம். பலர் இதை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றனர்.
வரும் முன்..!
இயற்கை விவசாயத்தின் மிக முக்கிய தாரக மந்திரம் வரும் முன் காப்பது' என்பதுதான். பூச்சி, நோய்த்தாக்குதல் வந்த பின் போராடிக் கொண்டிராமல் வருவதற்கு முன்பே அவற்றை தடுத்துவிட வேண்டும். பூச்சித்தாக்குதல் வந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என விடாமல் பாதுகாப்பு மேலாண்மை செய்ய வேண்டும்.
உரம்!
தினமும் நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்கறிகளின் கழிவுகளை ஒரு தொட்டியில் போட்டுக்கொண்டு வர வேண்டும். சில நாள்களில் அது மக்கி அப்படியே உரமாகிவிடும்.
கூடவே அரிசி கழுவும் நீரையும் செடிகளுக்குப் பயன்படுத்தலாம். அப்படியே பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரு லிட்டர் அரிசி கழுவிய நீரில் 50 கிராம் மண்டவெல்லத்தைச் சேர்த்து இரண்டு நாள்கள் வேடுகட்டி வைக்க வேண்டும். இரண்டு நாள்கள் கழித்து அவற்றை செடிகளுக்குப் பயன்படுத்தினால் விளைச்சல் அமோகமாக இருக்கும்.
அதேபோல வீடு கூட்டும் மண்ணை தொட்டிச் செடிகளில் போடலாம். அதில் நுண்ணுயிரிகள் அதிகமாக இருப்பதால் வீரியம் அதிகம்.
மண்புழு உரம் மட்டும் போதுமா?
தோட்டத்தில் மண்புழு உரம் மட்டும் போட்டால் போதும் என நினைப்போம். மண்புழு உரம் அந்தளவுக்கு நன்மை வாய்ந்தது. ஆனால் அது மட்டுமே போதுமா என்றால் இல்லை. வாரத்தில் ஒவ்வொரு ஞாயிறும் செடிகளுக்காகச் செலவிட வேண்டும். மாதத்தில் மூன்று ஞாயிறுகள் பூச்சி மேலாண்மைக்கும், ஒரு ஞாயிறு சத்துக்காகவும் செலவிட வேண்டும்.
முதல் ஞாயிறு மண்புழு உரம் இடம் வேண்டும். இரண்டாவது ஞாயிறு வேப்ப எண்ணெயை காதி சோப் கலந்து செடிகளில் தெளிக்க வேண்டும். வேப்ப எண்ணெய் செடிகளில் ஒட்டாமல் போய்விடக் கூடாது அல்லவா... அற்காகத்தான் காதி சோப்.
மூன்றாவது ஞாயிறு பஞ்சகாவ்யா கொடுக்கலாம். மூலிகை பூச்சி விரட்டி பயன்படுத்தலாம். பயிரில் பூச்சி இல்லை, நோய் இல்லை என்று தவிர்க்கலாம் அதை தொடர்ந்து பயன்படுத்தினால் செடிகள் பாதிப்பில்லாமல் வளரும்.
வேர் கரையான்!
வேர் கரையான் வராமல் இருக்க வேப்பம் புண்ணாக்குத் தூள் செய்து செடிகளின் வேருக்குக் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்.
செடிகளுக்கு காரம், கசப்புத் தன்மை ஏற்படுத்த வேண்டும். அதற்காக அடிக்கடி இஞ்சி, பூண்டு, மிளகாய்க் கரைசலைப் பயன்படுத்த வேண்டும்.
தினமும் 30 நிமிடம், வார இறுதியில் 1 மணி நேரம் மாடித் தோட்ட பராமரிப்புச் செலவு செய்தால் நிச்சயமாக மகசூல் எடுக்க முடியும். குழந்தைகளை கவனிப்பதுபோல பக்குவமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நீங்களும் இயற்கை விவசாயியாக நிச்சயம் மாற முடியும்.
source https://www.vikatan.com/news/agriculture/how-to-set-up-terrace-garden
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக