வளமான விவசாயத்துக்கு, மண் வளமாக இருப்பது மிகவும் முக்கியம். எந்த மண்ணில் என்ன விதைத்தால் நல்ல சாகுபடி கிடைக்கும் என்பதை முடிவு செய்ய அந்த மண்ணின் தரத்தை அறிந்துகொள்ளுதல் அவசியமாக உள்ளது.
ஆனால், மண்ணின் தரத்தைப் பரிசோதனை செய்து அறிதல் என்பது அவ்வளவு எளிதான காரியமாக இதுவரை இல்லை. மாதிரி மண்ணை பரிசோதனை ஆய்வகங்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்து அதன் தரத்தை பரிசோதித்து முடிவுகள் வருவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் ஆகும்.
இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக, இதற்கென அசத்தலான போர்டபிள் சாதனம் ஒன்றை வடிவமைத்துள்ளது ஐ.ஐ.டி கான்பூர்.
இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி வெறும் 90 விநாடிகளில் மண்ணின் தரத்தை பரிசோதனை செய்துவிடலாம். இதற்குத் தேவையெல்லாம் 5 கிராம் மாதிரி மண், இந்த போர்டபிள் சாதனம் மற்றும் மொபைல் ஆகியவைதான்.
அகச்சிவப்பு கதிர் ஸ்பெக்ட்ரோஸ்கோபி தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்தச் சாதனத்தின் மூலம் மண்ணின் தரத்தை நிகர் நேரத்தில் பரிசோதனை செய்து முடிவுகளைப் பெற முடியும். இதற்கான மொபைல் செயலி, கூகுள் பிளே ஸ்டோரில் `Bhu Parikshak' என்ற பெயரில் உள்ளது.
இந்த மொபைல் செயலியின் மூலம் மண்ணின் தரம் குறித்த முடிவுகளை அறியலாம்.
ஐ.ஐ.டி கான்பூரின் இந்த தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு வேளாண் தொழில்நுட்ப நிறுவனமான அக்ரோநெக்ஸ்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்டபிள் வயர்லெஸ் சாதனத்தில் 5 கிராம் மாதிரி மண்ணை வைத்து சோதனை செய்தால், அந்த மண்ணில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கார்பன் உள்ளிட்ட சத்துகள், விட்டமின்கள், கனிமங்கள் என்னென்ன என்பதை மொபைல் பயன்பாட்டில் தெரிந்துகொள்ள முடியும்.
Bhu Parikshak செயலியில், மண்ணின் தர விவரங்கள் அறிக்கையாக வருவதோடு மட்டுமல்லாமல் என்ன வகை பயிருக்கு எவ்வளவு உரம் அந்த மண்ணுக்கு தேவை என்பதையும் பரிந்துரை செய்யும் என்கிறார்கள்.
Also Read: `ஒரே கருவி; 30 பேர் வேலையைச் செய்யும்!' - அசத்தும் மதுரை விவசாயி | Weeding Machine | Pasumai Vikatan
இந்தச் சாதனம் ஒன்றின் மூலம் ஒரு லட்சம் மண் மாதிரிகள் வரை பரிசோதனை செய்ய முடியும் என்று கூறியுள்ள ஐ.ஐ.டி கான்பூர், இதற்கு முந்தைய பரிசோதனை சாதனங்களைவிடவும் அதிக பரிசோதனை திறன் கொண்டதாக இது இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
முக்கியமாக இந்த சாதனத்தை யார் வேண்டுமானாலும் எளிதில் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு படித்தவர்கள்கூட இச்சாதனைத்தைப் பயன்படுத்தி மண் தரத்தைப் பரிசோதனை செய்யலாம் எனக் கூறியுள்ளது.
Also Read: நாட்டு மரங்களே நம் மண்ணை வளப்படுத்தும்! மண்... மரம்... மாற்றம்!
இதுகுறித்து ஐ.ஐ.டி கான்பூர் இயக்குநர் அபய் கரந்திகர் கூறுகையில், ``விவசாயிகள் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கியமானவர்கள். ஆனால், அவர்கள் பல்வேறு கஷ்டங்களைச் சந்திக்கிறார்கள். அவற்றில் ஒன்று மண் பரிசோதனை செய்வதும், அதன் முடிவுக்காக பல நாள்கள் காத்திருப்பதும். அந்தப் பிரச்னை இனி அவர்களுக்கு இல்லை" என்கிறார்.
source https://www.vikatan.com/news/agriculture/iit-kanpur-researchers-developed-a-device-to-test-soil-health-in-90-secs
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக