18-12-21 மார்கழி மூன்றாம் நாள்:
"முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதி ரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன்பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!"
"முத்து போன்ற ஒளியுடைய புன்னகையை வீசும் பெண்ணே, நாங்கள் வந்து எழுப்பும் முன்னரே நீயே தயாராகி எங்களை வரவேற்பாய், ஈசனே என் தலைவன், அவனே ஆனந்தம் அளிக்கும் இறைவன், அமுதம் போன்ற நித்தியத் தன்மை கொண்டவன் என்றெல்லாம் பெருமை பேசி தித்திக்க தித்திக்க ஈசன் புகழ் பேசுவாய். ஆனால் இன்று உனக்கு என்ன ஆனது. இத்தனை நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற பெண்ணே! நாங்கள் காத்திருக்கலாம், நமக்காக நம் தேவன் காத்திருக்கலாமா! என்கிறார்கள் தோழியர்.
"ஈசனின் மேல் மாறாத பற்று கொண்ட பழைமையான அடியார்களே, உங்களைப் போல் எனக்கு இந்த மார்கழி நோன்பில் அனுபவமில்லை. சிறியவளான என் தவறைப் பொறுத்து வழி காட்டுவீர்' என்று வருந்திச் சொல்கிறாள். உடனே தோழியரும் "கவலை வேண்டாம், நம் ஈசன் மீது நீ வைத்துள்ள தூய அன்பே போதும். தூய மனம் படைத்தவர்களாலேயே ஈசனைப் பாட முடியும் என்பது தெரியும். அன்புக்குரியவளே, நம் சித்தமெல்லாம் பரவி இருக்கும் பெருமானை காலம் தாழ்த்தாது, உடனே பாட வேண்டும். எழுந்து வா பெண்ணே!' என்றனர்."
எல்லோரிலும் உறைந்து நிற்கும் சிவம், அன்பொன்றையே நம்மிடம் எதிர்பார்க்கிறது. பேசும் பேச்சு, செய்யும் செயல் இதில் எல்லாம் சிவத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. நம் நோக்கம் என்ன, நம் சிந்தையில் எதை சிந்திக்கிறோம் என்பதிலேயே சிவம் அக்கறை கொள்கிறது. பெறுதற்கரிய இந்த மானிடப் பிறப்பில், பாசத்தை விலக்கி பசுவானது, பதியை அடைவது எளிதானது. பதியை அடைந்த பசு பிறப்பு-இறப்பை இருக்கிறது. சொல்ல முடியாத பேரின்பத்தில் ஈசனின் திருவடியில் வாழ பதி என்னும் சிவமே உதவும். சித்தத்தில் உறைந்திருக்கும் சிவத்தை உணர்ந்து கொள்ள, வெறும் சடங்குகளோ சம்பிரதாயங்களோ மட்டும் உதவாது. எதை நினைக்கிறோம். சிவத்தை எப்படி உணர்கிறோம் என்பதே முக்கியம்.
பட்டை பட்டையாக விபூதி அணிந்து கொள்வது, ருத்ராட்ச மணிகளை அணிந்து கொள்வது, ஊர் வியக்க பதிகம் பாடுவது எல்லாம் மட்டும் சிவ அடியார்களின் இலக்கணம் இல்லை. அன்றாடம் கோயிலுக்கு போவது, ஈசனை விழுந்து விழுந்து வணங்குவது, விழாக்களில் கலந்து கொள்வது மட்டுமே சிவனை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி விடாது. தேவைக்காக வணங்குவது, தேவை முடிந்தால் மறப்பது சிவபக்தி ஆகாது. சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, சிந்தையில் நின்ற சிவத்தைப் பற்றிக்கொண்டு ஈசனோடு கலந்தவர் சாக்கிய நாயனார். மற்றவர் வெறுத்து ஒதுக்கும் வகையில் சிவபூஜை செய்தவரைக்கூட ஈசன் தம்மில் சேர்த்துக் கொண்டது அவருடைய உயரிய நோக்கத்துக்காகவே.
Also Read: திருவெம்பாவை - 2: வைராக்கிய பக்தி கொண்டு ஈசனுக்கே நேசம் ஆவோம், எழுந்து வா தோழி!
திருச்சங்கமங்கையில் தோன்றி, காஞ்சியில் பௌத்தர்களால் ஆட்கொள்ளப்பட்ட சாக்கியர் (பௌத்தர்) இவர். பௌத்த சமயத்தில் பெரும் பாண்டித்யம் பெற்ற இவர், ஒரு ஆன்மா தனது இறுதியான நிலையை அடைய என்ன வழி என்று யோசித்தார். அல்லும் பகலும் யோசித்தும் இவருக்கு பௌத்தத்தில் அதற்கான விடை கிடைக்கவில்லை. சைவ சமய நூல்களை ஆய்வு செய்கையில் அதற்கான எளிய விடை கிடைத்தது. ஆம், ஈசனாம் தலைவனைப் பற்றிக்கொண்டால், அவன் திருவடிகளைப் பிடித்துக் கொண்டால் பிறப்பற்ற முக்தி நிலை கிட்டும் என்று உணர்ந்தார். ஆனால் அன்றைய காலச்சூழலில் அவர் பௌத்த மதம் விட்டு விலக முடியவில்லை. பௌத்தராக வெளித்தோற்றம் இருப்பினும் ஈசனின் மீது அவர் மனம் சென்றது. கருணையே வடிவமான ஈசனும் அவர் மீது அன்பு கொண்டு அவரை ஆட்கொள்ள முடிவெடுத்தார்.
அன்றாடம் ஈசனை தரிசிக்காமல் உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்தார் சாக்கியர். அதன்படி உச்சி வேளையில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு மனத்தால் தொழுது, பிறர் பார்க்க ஒரு கல்லை எடுத்து சிவலிங்கத்தின் மீது எறிவார். அக்காலத்தில் காஞ்சியில் அதிகம் பேர் பௌத்தர்கள் என்பதால் இந்த செயல் பௌத்தர்களுக்கு உற்சாகமும் சைவர்களுக்கு மனவருத்தமும் உண்டானது. சாக்கியர் மனம் வருந்தினாலும், தூய பக்தியோடு தாம் எறியும் கல்லை மலராக எண்ணி வீசி வணங்குவார். ஈசனும் கல்லை வில்வமாகக் கருதி ஏற்றுக் கொள்வார். மனம் முழுக்க சிவமே நிறைந்து இருக்க சாக்கியர் பேச்சும் தோற்றமும் பொலிவானது.
உண்மையான சைவ நெறிகளை நெஞ்சில் ஏற்றுக் கொண்ட அந்த அடியார், ஒருமுறை சிவலிங்க தரிசனம் மேற்கொள்ளாமல் சாப்பிட அமர்ந்தார். திடீர் என ஈசன் ஞாபகதுக்கு வர, விரைந்து ஓடி ஒரு சிவலிங்கத்தின் மீது கல்லை ஓங்கி எறிந்து வழிபட்டார். மனம் நிம்மதி கொண்டார். அதேவேளையில் சாக்கியர் வந்து கல்லை எறியவில்லையே, அவருக்கு என்னானதோ என்று அப்போது சிவனாரும் ஏங்கிக் கொண்டு இருந்தாராம். சாக்கியர் கல்லை எறிந்து விட்டு கலங்கிய கண்களோடுத் தொழுது 'எத்தனை நாள்களுக்கு இந்த நாடகம் ஐயா, என்னை எல்லோரும் பார்க்கும் வண்ணம் ஏற்றுக் கொள்ள மாட்டாயா! என்று வேண்டினார். அடியவர் மனம் கலங்க ஈசன் விடுவானா? உமையவள் புடை சூழ ரிஷப வாகனத்தில் தோன்றிய ஈசன், சகலரும் காணும் வண்ணம் சாக்கியரைத் தன்னுள் ஏற்றுக் கொண்டுவிட்டார்.
உலகோருக்கு சாக்கியர் கல்லெறிந்து ஈசனைக் காயப்படுத்தியதாகத் தெரிய வரலாம். ஆனால் உள்ளுக்குள் உருகி ஈசனை வணங்கிய சாக்கியரின் சிந்தனையே ஈசனைக் கவர்ந்தது. அதனாலேயே அவர் கல் எறிய வராத வேளையில், அவர் வருகைக்காக ஏங்கியும் நின்றது. அன்பையும் கருணையும் மட்டுமே எதிர்பார்த்து நிற்கும் ஈசனை இந்த மார்கழியில் கொண்டாடுவோம். சித்தமெல்லாம் பரவி நிற்கும் சிவத்தைப் பாட ஒன்று கூடுவோம். சீக்கிரம் எழுந்து வா தோழி! எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் சிவம் நம்மை காக்கும்.
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று, பிறந்த பிறப்பறுக்கும் நம் பெருமானைப் பாடுவது அல்லால் வேறென்ன வேலை இந்த மார்கழியில்!
source https://www.vikatan.com/spiritual/gods/margazhi-utsavam-day-3-thiruvempavai-songs-to-worship-lord-siva
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக