Ad

சனி, 4 டிசம்பர், 2021

``ஆளுநர் ஏன் அப்படிப் பேசினார் என்று தெரியவில்லை!'' - ஆர்.எஸ்.பாரதி அதிர்ச்சி

உள்கட்சி பிரச்னைகளையே சமாளிக்கமுடியாமல் அ.தி.மு.க திணறிவரும் இந்த வேளையில், 'தி.மு.க தலைமையிலான தமிழக அரசுக்கு எதிராக ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக செயல்படுவது நாங்கள்தான்' என்று கெத்து காட்டிவருகின்றனர் தமிழக பா.ஜ.க-வினர்.

இந்தநிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினேன்....

''தி.மு.க மீது தொடர்ந்து வாரிசு அரசியல் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் வைத்து வருகின்றனவே?''

''கருணாநிதி என்றைக்கு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாரோ அன்றிலிருந்தே, எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து பலரும் இதே குற்றச்சாட்டை தி.மு.க மீது வைத்துவருகின்றனர். ஆனாலும்கூட அதன்பிறகு தி.மு.க 4 முறை ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டது.

எம்.ஜி.ஆர் - கருணாநிதி

ஆந்திராவில், ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிதான் முதல் அமைச்சர். கர்நாடகாவில் தேவகவுடா மகன் குமாரசாமி முதல்வரானார். ஒடிசாவில் பிஜூ பட்நாயக் மகன் நவீன் பட்நாயக் முதல்வர். காஷ்மீரில் பரூக் அப்துல்லா மகன் உமர் அப்துல்லாவை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அதேபோல், தமிழ்நாட்டில் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலினை மக்கள்தான் விரும்பி வாக்களித்து தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

எங்கள் மீது ஆக்கபூர்வமான குற்றச்சாட்டை வைக்க முடியாததினால், இதுபோன்று பேசிவருகிறார்கள். அவர்களுக்கு வாரிசு இல்லையென்றால், வாரிசு இருப்பவர்களை எல்லாம் குறை சொல்லக்கூடாது. நாடாளுமன்றத்திலேயே 45 வாரிசு எம்.பி-க்கள் இருக்கின்றனர்.''

''அண்ணா பிறந்தநாளில், இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய தி.மு.க அரசு தயங்குகிறது என்கிறார்களே?''

''சிறையில் பல வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்வதென்பது தமிழக அரசு தன்னிச்சையாக எடுக்கக்கூடிய முடிவு அல்ல. இதற்கென தனியே குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு நன்னடத்தையின் அடிப்படையில் சிபாரிசு செய்யக்கூடிய நபர்களை மட்டும்தான் தமிழக அரசு விடுதலை செய்யும்.''

அறிஞர் அண்ணா

''இஸ்லாமிய கைதிகளை விடுவிக்கக்கூடாது என்று பா.ஜ.க தரப்பிலிருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக சொல்கிறார்களே?''

''பா.ஜ.க அழுத்தம் கொடுக்கிறது என்பதெல்லாம் வெறும் வதந்தி. அப்படி அவர்கள் அழுத்தம் கொடுத்தாலும்கூட அதற்கெல்லாம் பயப்படுகிறவர்களா நாங்கள்? நாடாளுமன்றத்திலேயே மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக நேருக்கு நேர் பகிரங்கமாக குரல் கொடுத்து வருகிற கட்சிதான் தி.மு.க. எனவே, யாருக்கும் பயந்து எங்களுக்குப் பழக்கமில்லை!''

''அப்படியென்றால், இந்த வருடம் இஸ்லாமிய கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்பலாமா?''

''அது எனக்குத் தெரியாது. அதைக் குழுதான் முடிவு செய்யும்.''

'' 'புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவேண்டும்' என துணைவேந்தர்கள் கூட்டத்தில் ஆளுநர் பேசியதற்கு எதிராக தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே?''

''எதன் அடிப்படையில் ஆளுநர் அப்படிப் பேசினார் என்று தெரியவில்லை. பல்கலைக் கழக வேந்தரே ஆளுநர்தான். அந்தவகையில், தனக்குக் கீழ் பணிபுரியும் துணைவேந்தர்களுக்கு தன்னுடைய தனிப்பட்ட கருத்தை அறிவுரையாகக் கொடுத்திருக்கலாம். அவரது தனிப்பட்ட கருத்து தமிழக அரசின் கருத்து ஆகாது. எனவே, கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது தமிழக அரசின் கொள்கை முடிவு என்னவோ அதைத்தான் நடைமுறைப்படுத்துவார்கள். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.''

அண்ணாமலை

''ஸ்ரீரங்கம் கோவிலில், பிரதமர் மோடியின் உரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வது சரியல்ல. தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும் தமிழக அரசு என அண்ணாமலை சவால் விடுத்துள்ளாரே?''

''பொறுத்திருந்து பாருங்கள்...!''

''நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த துரைமுருகனை உடனடியாக கைது செய்த தி.மு.க அரசு, 'நடிகர் சூர்யாவை தாக்குபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு' என்று அறிவித்த பா.ம.க. மாவட்டச் செயலாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே... ஏன்?''

''இதுபோன்ற விஷயங்களில், சோமோட்டாவாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது. இதுகுறித்து காவல்துறையில் யாரேனும் புகார் அளித்திருந்தால், நிச்சயமாக புகார் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.''

வைகோ - மு.க.ஸ்டாலின்

'' 'மு.க.ஸ்டாலினிடம் சொல்லி உன் அரசியல் வாழ்க்கையையே அழித்துவிடுவேன்' என எம்.எல்.ஏ ராஜாவை வைகோ மிரட்டியதாக செய்திகள் வெளியானதே... என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?''

''அது லோக்கல் பிரச்னை. இதுவிஷயமாக மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளரிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார். இப்போது மழை வெள்ளம் பிரச்னை வந்துவிட்டதால், இதில்தான் முதல்வரது கவனம் இருக்கிறது. இதற்குப் பிறகு இந்தப் பிரச்னையில் தீர விசாரித்து, நல்ல முடிவு எட்டப்படும்.''

Also Read: நள்ளிரவில் டீசல் போட்டுவிட்டு ஜீப்பில் எஸ்கேப்! -சினிமா பாணியில் வாலிபரை மடக்கிப் பிடித்த போலீஸ்

''மழை வெள்ளத்தில், தமிழ்நாடே மூழ்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், 'அ.தி.மு.க அரசுதான் இதற்கெல்லாம் காரணம்' என தி.மு.க சொல்லிவருவது பழிவாங்கும் அரசியல்தானே?''

''அப்படியல்ல... குடிநீர், மின்சாரம், தெரு விளக்கு, சாலை வசதி என மக்களுடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொடுப்பதுதான் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம். சென்னையில் தி.நகர் பாண்டிபஜாரை மட்டும் உதாரணம் எடுத்துக்கொண்டாலே போதும். கடந்த ஆட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எந்தளவு மோசமாக நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள் என்று.

எனக்கு 75 வயது ஆகிறது. படிக்கிற காலத்திலிருந்தே தி.நகரில்தான் இருந்துவருகிறேன். இந்த மழை வெள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது போன்று எந்தக் காலத்திலும் நான் பார்த்ததில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக, இடிக்கப்பட்ட கட்டடக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல், மழை நீர் வடிகால் பாதைகளிலேயே போட்டு நிரப்பிவிட்டதுதான். ஆனால், கட்டடக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டதாகக்கூறி அதற்கான நிதியை மட்டும் அப்படியே சுருட்டிவிட்டார்கள்.''

எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

''அ.தி.மு.க-வினர் கடந்தகாலத்தில், தூர் வாரியதாக வெறுமனே கணக்கு மட்டும் காட்டி ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதையே தி.மு.க அரசு, இந்தப் பெருமழை வெள்ளத்தின்போதுதான் தி.மு.க அரசு கண்டுபிடித்ததா என்று எதிர்க் கேள்வி கேட்கிறார்களே?''

''இவ்வளவு ரூபாய் செலவழித்து, தூர் வாரிவிட்டோம் என்றெல்லாம் கடந்த அ.தி.மு.க ஆட்சியாளர்கள் சொன்னார்கள். ஒரு திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் துறை சார்ந்த அதிகாரிகளும் கண்காணித்திருப்பார்கள். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, நாங்களும் அவர்கள் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பிவிட்டோம். ஆனால், தூரும் வாரப்படவில்லை; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையும் சரிவர செய்துமுடிக்கவில்லை. திட்டங்களின் பெயரில் வெறுமனே ஊழல் மட்டும் செய்திருக்கிறார்கள் என்பதெல்லாம் இப்போதுதான் தெரியவருகிறது.

எனவே, எங்களுக்கு இது ஒரு பாடம். எங்கெல்லாம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டதோ, அங்கெல்லாம் அதுகுறித்து முறையாக விசாரித்து அறிக்கை தயார் செய்வதற்கு விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும். அப்படிச் செய்தால்தான், கடந்த அ.தி.மு.க ஆட்சியாளர் என்னென்ன செய்தார்கள் என்பதெல்லாம் மக்களுக்கும் தெரியவரும்.''

Also Read: பிக்பாஸ் ஜூலி கொடுத்த மோசடி புகார்... பைக், தங்கச் செயினை திரும்ப கொடுத்த அழகு நிலைய மேலாளர்!

''இந்து அறநிலையத் துறை சார்பிலான கல்லூரிகளின் பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டும்தான் விண்ணப்பிக்கவேண்டும் என்று தமிழக அரசு விளம்பரம் கொடுத்திருப்பது அரசமைப்புச் சட்ட நடைமுறைக்கு விரோதமானது என்று தி.க தலைவர் கி.வீரமணி சொல்கிறாரே?''

கி.வீரமணி

''இந்து சமய அறநிலையத்துறை சட்டம் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிப் பணிக்கான நபர்களைத் தேர்வு செய்வதிலும்கூட நீதிமன்ற விதிகளே பின்பற்றப்பட்டிருக்கின்றன. அதேசமயம் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்திருக்கும் கருத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. எல்லாவற்றையும் ஆய்வு செய்து, ஆசிரியர் சொல்வது போன்று, திருத்தங்கள் கொண்டுவர முடியுமானால் அதையும் நிச்சயமாக செயல்படுத்துவோம்.''



source https://www.vikatan.com/government-and-politics/politics/i-do-not-know-why-the-governor-spoke-like-that-rs-bharathi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக