Ad

வியாழன், 2 டிசம்பர், 2021

அயோத்தி, வாரணாசி வரிசையில் மதுராவில் மிகப்பெரிய கோயில்... உ.பி-யில் பாஜக வியூகம் வெல்லுமா?!

யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் உத்தரப் பிரதேசத்தில், இன்னும் மூன்று மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இத்தகைய சூழலில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை மிகப்பெரிய சாதனையாக பா.ஜ.க முன்னிறுத்த ஆரம்பித்துள்ளது. இதுபோக, “மதுராவில் மிகப்பெரிய கோயில் கட்டுவதற்கான பணிகள் நடக்கின்றன” என்று உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா தெரிவித்துள்ளார். #Jai Shri Ram, #Jai Shiv Shambhu, #Jai Radhe Krishna என்று ஹேஷ்டேக்குகள் உடன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கருத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6-ம் தேதி ஒவ்வோர் ஆண்டும் கருப்பு நாளாக இஸ்லாமியர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், டிசம்பர் 6-ம் தேதி வருவதற்கு நான்கு நாள்களுக்கு முன்பாக இத்தகைய கருத்தை துணை முதல்வர் தெரிவித்திருப்பது, உ.பி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தி, மதுரா

உ.பி-யில் கோயில்களை மையப்படுத்திய அரசியல் நீண்ட காலமாக நடைபெற்றுவருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், காசியையும் மதுராவையும் மீட்பதற்கான பிரசாரத்தைத் தொடங்குவது என்று அகில இந்திய சாதுக்கள் சபை 2020-ம் ஆண்டு முடிவுசெய்தது. காசியில் அமைந்துள்ள விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டு, அதன் ஒரு பாதியில் கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாகவும், கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் மதுராவில் ஷாயி ஈத்கா மசூதி எழுப்பப்பட்டதாகவும் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து கூறிவருகின்றன.

மேலும், `காசியில் காசி விஸ்வநாதர் கோயில், மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி ஆகிய இடங்களில் மசூதிகள் கட்டப்பட்டிருக்கின்றன' என்றும், `அவற்றை முழுமையாக உரிமை கோருவது தங்களின் அடுத்து பணி' என்றும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி நியாஸ் ஆகியவற்றின் தலைவரான மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூறினார். அவரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றான `பிராஜ்’ என்ற இடத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாட்டத்தின்போது, பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அந்தப் பகுதிகளில் இந்துக்களும் முஸ்லிம்களும் பெருமளவில் வசிக்கிறார்கள்.

யோகி ஆதித்யநாத்

காசி மற்றும் மதுராவை `மீட்டெடுக்க’ ஆதரவு தர வேண்டும் என்று சாதுக்கள் சபையால் கடந்த ஆண்டு வைக்கப்பட்ட கோரிக்கையை ஆர்.எஸ்.எஸ் நிராகரித்தது. பிரிவு 370 நீக்கம், அயோத்தியில் ராமர் கோயில் ஆகியவற்றுக்கு அடுத்து பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் தங்களது மூன்றாவது அஜெண்டா என்று ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அது குறித்து அப்போது நாம் ஆர்.எஸ்.எஸ் வட்டாரத்தில் பேசியபோது, ‘காசியும் மதுராவும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அஜெண்டாவில் இல்லை. அயோத்தியுடன் எங்கள் அஜெண்டா முடிந்துவிட்டது. அதிகாரபூர்வமாக பா.ஜ.க-வுக்கோ, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கோ அந்த அஜெண்டா கிடையாது. அதே நேரத்தில், வேறு சில இந்து இயக்கங்களுக்கு அந்தப் பிரச்னைகளில் ஆர்வம் இருக்கலாம்’ என்று தெரிவித்தனர்.

இப்போது, உத்தரப் பிரதேசத்தின் துணை முதல்வரே இந்த விவகாரத்தைக் கிளப்புகிறார். பிரதமர் மோடி தனது தொகுதியான வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை இந்த மாதம் 13-ம் தேதி திறந்துவைக்கிறார். ரூ.600 கோடி செலவில் காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் அமைக்கும் திட்டம் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. காசி விஸ்வநாதர் கோயிலை கங்கை கரைகளுடன் இணைக்கும் வகையில் 320 மீட்டர் நீளமும் 20 மீட்டர்அகலமும் கொண்ட நடைபாதை, அருங்காட்சியகம், நூலகம், யாத்ரீகர்களுக்கான மையம் போன்ற பல வசதிகளுடன் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இத்திட்டம் வேக வேகமாக முடிக்கப்பட்டு, பிரதமரால் வரும் 13-ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இந்த சூழலில், பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு கருத்தை உ.பி துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

காசி விஸ்வநாதர் கோவில் - கியான்வாபி நில சர்ச்சை தொடர்பான வழக்கு கீழ் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. அதில், கியான்வாபி மசூதி வளாகத்தை விரிவாக சர்வே செய்யுமாறு இந்திய தொல்லியல் துறைக்கு கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில், மதுராவில் உள்ள ஷாஹி மசூதியில் டிசம்பர் 6-ம் தேதி கிருஷ்ணரின் சிலையை வைக்கப்போவதாக அகில பாரத இந்து மகாசபா உள்பட இரண்டு வலதுசாரி குழுக்கள் மிரட்டல் விடுத்தன. அதையடுத்து, மதுராவில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரதமர் மோடி

துணை முதல்வர் மௌரியாவின் ட்வீட்டுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் என்ற அமைப்பின் தலைவர் சௌக்கத் அலி பதிலடி கொடுத்துள்ளார். பெட்ரோல் விலை, டீசல் விலை, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் ஆகியவற்றை பா.ஜ.க-வால் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது, பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்” என்று சௌக்கத் அலி கூறியுள்ளார்.

Also Read: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பாஜக கோட்டையாகிவிட்டதா திரிபுரா..? - ஒரு பார்வை!

இரண்டாவது கொரோனா அலையின்போது பெருந்தொற்றுப் பரவலையும் அதன் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக யோகி அரசு மீது பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பா.ஜ.க-வினரே யோகி அரசை கடுமையாக விமர்சிக்கும் நிலைக்கு யோகி அரசின் நிர்வாகம் இருந்தது. கொரேனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கங்கை ஆற்றில் மிதந்தது, அந்த சடலங்களை இழுத்துச்சென்று நாய்கள் தின்றது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் யோகி அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயரை உண்டாக்கின.

விவசாயிகள் போராட்டம்

அதுபோக, மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு உத்தரப் பிரதேசத்தில் தீவிரமான போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்தனர். அப்போது, யோகி அரசுக்கு எதிராக, வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்வோம் என்று விவசாயிகள் அறிவித்தனர். தற்போது மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டாலும், விவசாயிகளின் மற்ற கோரிக்கைகள் பற்றி மத்திய அரசு எந்த கருத்து தெரிவிக்காமல் இருக்கிறது. இதனால், பா.ஜ.க மீதான விவசாயிகளின் கோபம் தணியவில்லை.

இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை தனது மிகப்பெரிய சாதனையாக பா.ஜ.க முன்னிறுத்துகிறது. அடுத்ததாக, மதுராவையும் கையிலெடுக்கிறது. தங்களை அன்றாடம் வாட்டி வதைக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், கோயில் விவகாரங்களை பெரிதாக முன்னிறுத்தும் பா.ஜ.க-வுக்கு வாக்களித்து மீண்டும் அரியணையில் அமர்த்துவார்களா உ.பி மக்கள்? மூன்று மாதங்களில் விடை தெரிந்துவிடும்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-a-strategy-to-build-temple-in-mathura-bring-gain-to-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக