Ad

வெள்ளி, 3 டிசம்பர், 2021

பாகிஸ்தான்: உலகை உலுக்கிய கோர சம்பவம்... இலங்கையை சேர்ந்தவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம்!

இலங்கையைச் சேர்ந்தவர் பிரியாந்த குமரா, வயது 40. இவர் பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட் நகரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று (Dec 3), சியால்கோட்டின் வசிராபாத் ரோட்டில் தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பலர் பிரியாந்த குமராவை சரமாரியாக தாக்கி, அவரை மிகக்கொடூரமாக உயிரோடு எரித்துக் கொலை செய்தனர். இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் இயங்கி வரும் அரசியல் கட்சியான தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான். தீவிரமான வலதுசாரி சித்தாந்தத்தை பின்பற்றுகிறவர்கள் இக்கட்சியினர். இப்படி இருக்கும் சூழ்நிலையில், பிரியாந்த குமார இந்தக் கட்சியின் ஒரு சுவரொட்டியை கிழித்ததாக கூறப்படுகிறது. குரானின் வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்த அந்த அரசியல் கட்சியின் சுவரொட்டியை பிரியாந்த குமாரா கிழித்து குப்பையில் எறிந்ததாக சொல்லப்படுகிறது. இதை அங்கே இருந்த சிலர் பார்த்துவிட்டு , மற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளனராம். தகவலரிந்து கூடிய கூட்டத்தினர் ஆவேசமடைந்து குமாராவை சரமாரியாக அடித்து, பின் எரித்துக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து பலரின் முன்னிலையில் கொலை செய்துள்ளனர்.

Also Read: `பின் லேடனை தியாகி எனப் புகழ்ந்த இம்ரான் கான்!' - வாய்தவறிக் கூறிவிட்டதாக பாகிஸ்தான் விளக்கம்

இந்த சம்பவம் நடக்கும்போது கூடியிருந்த பலர் ஆரவாரமிட்டும் ,கோஷங்கள் எழுப்பியும், வீடியோ எடுத்துக்கொண்டும் குமாரா கொல்லப்படுவதை கொண்டாடியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாகிஸ்தானின் பஞ்சாப் மாகண போலீஸார் 50 பேரை தீவிரவாத சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இன்னும் பலரைத் தேடி வருகின்றனர்.

பாகிஸ்தான்

இந்நிலையில் இதைப்பற்றி கருத்து தெரிவித்திருக்கும் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான், " சியால்கோட்டில் கொடூரமான முறையில் இலங்கயைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் எரித்து கொல்லப்பட்டிருக்கும் இந்த நாள் பாகிஸ்தானுக்கு ஒரு அவமானகரமான நாள். நான் விசாரணைகளை மேற்பார்வையிட்டு வருகிறேன். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் படி தண்டிக்கப்படுவார்கள்" என்று பதிவு செய்திருக்கிறார்.

பாகிஸ்தானை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியிருக்கிறது இந்த கோர சம்பவம்!



source https://www.vikatan.com/news/international/pakistani-mob-tortures-sri-lankan-man-to-death

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக