"ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்."
ஒளி சிதறும் புன்னகையைக் கொண்ட பெண்ணே! சிந்தையில் சிவத்தைக் கொண்ட அடியார் எல்லோருக்கும் விடிந்துவிட, இன்னுமா உனக்கு விடியவில்லை! என்றார்கள் தோழியர். அவளும் உறக்கம் விலகி, 'பச்சைக் கிளிகள் போல் பரவசமாகி பரமனையே வியந்து பேசும் எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா! என்றாள். தோழியரோ 'இங்கு வந்திருக்கும் பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும். அதனால் காலத்தை வீணாக்காமல் விண்ணுலகின் மருந்தாகவும், வேதங்களின் அரும்பொருளாகவும் விளங்கும் கண்ணுக்கு இனியவனாம் ஈசனைப்பாடி பணியும் வேளை இது. எனவே தாமதியாமல் விரைந்து எழுந்து வா! நீயே எழுந்து வந்து இங்கிருப்பவர் எத்தனை பேர் என்று எண்ணிப் பார். ஒருவேளை நீ எண்ணிய அளவுக்கு பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கலாம் பெண்ணே என்று கேலி பேசினர்.
பூமேல் அயனோடு மாலும் புகலரிதென்று ஏமாறி நிற்க, எம்மைக் காத்திடவென்று எதிர்பார்த்து நிற்கும் ஈசனை காக்க வைக்கலாமோ! காப்பது ஈசனின் கடமை என்றாலும் நம் வருகைக்காக ஈசனைக் காக்க வைப்பது சரியோ பெண்ணே! காலகாலமாக நம் ஆன்மா ஈசனுக்காகவேக் காத்திருக்கிறது. எண்ணற்றப் பிறப்பெடுத்தபோதும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சத்சங்கத்தின் வழியாக, சிவத்தின் விருப்பத்தின் பேரில் ஆன்மா ஈசனைக் கண்டு கொள்கிறது. தாம் யார், எங்கிருந்து வந்தோம், எதற்காக வந்தோம் என்பதை அது உணர்ந்த தருணத்தில் சிவத்தோடு லயிக்கத் தொடங்கி விடுகிறது. தம்மை ஆட்கொள்ள சிவத்தின் வருகையை எண்ணி ஏங்கி நிற்கிறது. சிவத்தின் வருகையை பொறுமையாக எதிர்பார்க்கிறது. சிவம் தம்மை ஆட்கொள்ள வரும்போது எதிர்கொள்ளும் எல்லாவிதமான துன்பங்களும் அந்த ஆன்மா விருப்பத்தோடு ஏற்றுக் கொள்கிறது.
எல்லாம் சிவம் எனும்போது துன்பத்திலும் அது சிவத்தையே தஞ்சம் கொள்கிறது. அப்படி பொறுமையோடு சிவத்தை எதிர்கொண்டு அவரிடம் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் அதிபத்த நாயனார். பொறுமையால் உலகாண்ட உயர்ந்த அடியார் அவர். பொறுக்க முடியாத வறுமைச் சூழலிலும் சிவத்தை வியந்து போற்றிய பெருமகன் அவர். அதிபத்தரைப் போன்ற பக்குவம் இருந்தால் எவரையும் அந்த சிவமே தேடி வந்து ஏற்றுக் கொள்ளும் என்பதே அதிபத்தரின் வாழ்க்கை சொல்லும் பாடம். இறைவனை அறிந்து கொள்வதில் ஆவலும் வேகமும் கொள்ளலாம். அவன் வருகைக்கு பொறுமையே அவசியம்.
சிவன் படவர் எனும் திருக்குலத்தில் (செம்படவர் = சிவன் படவர்) நாகையில் தோன்றியவர் அதிபத்தர். மீன் பிடித்தல் தொழில் என்றாலும் ஒரு சிறந்த அடியாராக விளங்கியவர் இவர். கண் அலை வீசி ஆன்மாக்களைப் பிடிக்கும் ஈசன், வலை வீசி மீன் பிடித்த திருவிளையாடலையும் நிகழ்த்தியவன் அன்றோ, அதே வழக்கத்தில் தன் அருள் வலையை வீசி அதிபத்தரையும் பிடித்துக் கொண்டு விட்டார். அத்தனிடம் சேர்ந்து கொண்ட ஆன்மா, மனித சுகங்களை வேண்டுமா என்ன! அதிபத்தர் முழுவதும் மாறினார். பஞ்சாட்சர மந்திரமே அவருக்கு உயிர் மூச்சானது. ஈசனின் பெருமையே அவருக்குப் பேச்சானது. திரை சூழ்ந்த கடலில் பயணித்தாலும் பிறவி எனும் பெருங்கடலை நீந்தவே அவர் பெரிதும் விரும்பினார். அதற்கு நாகப்பட்டினம் காயாரோகண ஈசனைப் பற்றிக் கொண்டார்.
Also Read: திருவெம்பாவை - 3: சித்தமெல்லாம் பரவி நிற்கும் சிவத்தைப் பாட சீக்கிரம் எழுந்து வா தோழி!
எவர் எவரோ என்னென்னவோ தொண்டு செய்ய, தான் என்ன செய்வது என்று குழம்பினார் அதிபத்தர். இறுதியில் தன்னால் இயன்றது என்று தான் பிடிக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை ஈசனுக்கு அர்ப்பணம் நீரிலேயே விட்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தொண்டினும் சிறந்த தொண்டு இது அல்லவா! அதிபத்தரின் புகழை அகிலம் அறிய விருப்பம் கொண்டது சிவம். ஒரே ஒரு மீன் மட்டுமே தொடர்ந்து கிடைக்குமாறுச் செய்தது. அப்போதும் தான் பிடித்த மீனை கடலிலேயே விட்டுவிட்டு வந்துவிடுவார் அதிபத்தர். சிவத்தைப் பற்றிக்கொண்டவருக்கு பந்தமேது, பாசமேது. குடும்ப சூழலும் வறுமையின் கொடுமையும் ஆட்டிப் படைத்தபோதும் கொண்ட கொள்கையில் மாறவில்லை. தங்கத்தால் உருவாகி ரத்தினங்கள் பதிக்கப்பட்ட விலை உயர்ந்த பொன் மீன் கிடைத்தபோதும் அதையும் சிவார்ப்பணம் என்று கூறி கடலில் விட்டார் அதிபத்தர். மீனை மட்டுமில்லை, அத்தோடு தனது கர்மங்களையும் விட்டுவிட்டதால் ஈசனின் கருணைக்கு ஆளானார் அதிபத்தர். அப்போதே ரிஷப வாகனத்தில் வந்த ஈசனோடு கலந்துவிட்டார் தியாக வடிவான அதிபத்தர். இதுதான் செயற்கரிய செயல், எது உயிர் வாழ அவசியமோ அதைக்கூட ஈசனுக்காக தத்தம் செய்யும் தியாகமே தியாகம். இந்த தியாகத்தை அதிபத்தரின் பொறுமை கொடுத்தது. பொறுத்திருந்து சிவத்தையே வரவழைத்த அதிபத்தரின் வாழ்க்கை உயர்வானது. இந்த மார்கழி நன்னாளில் நினைவு கூறப்பட வேண்டிய அவசியமான பாடம் இது.
சகல ஜீவன்களுக்கும் பதியான ஈசன் எல்லோரையும் காக்கட்டும்! மங்கலங்கள் நிறைந்த இந்த மார்கழி நாள்களில் அவன் புகழ் பாடி அவனோடு இன்புற்று இருக்க வேண்டுவோம்! கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன், காண்பதற்கு இனியன், அவன் பூங்கழல்களைப் பற்றிக்கொண்டு கரை சேர்வோம் தோழி!
source https://www.vikatan.com/spiritual/gods/margazhi-worship-day-4-thiruvempavai-song-4-by-manickavasagar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக