Doctor Vikatan: ஜிம்முக்கு சென்று வொர்க் அவுட் செய்கிறவர்களுக்கு சப்ளிமென்ட்டுகளும் புரோட்டீன் பவுடரும் அவசியமா? உடற்பயிற்சி செய்யாமல் சப்ளிமென்ட் மூலம் எடையைக் குறைப்பது சரியானதா?
பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய்
ஜிம்மில் பயிற்சியாளர்களாக இருக்கும் எல்லோரும் முறைப்படி அதற்காகப் படித்து, தகுதிபெற்றவர்களா என்பது சந்தேகம். பல இடங்களிலும் அப்படித் தகுதியில்லாதவர்கள்தான் பயிற்சி கொடுக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் உணவியல் மற்றும் ஊட்டச்சத்து பற்றியெல்லாம் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.
வொர்க் அவுட் செய்கிறார்கள் என்ற காரணத்துக்காகவே பலருக்கும் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைக்கும் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். மாத்திரைகளாகவோ, பவுடர் வடிவிலோ சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புரோட்டீன் பவுடர்களை எடுத்துக்கொள்ளச் சொல்வோரும் உண்டு. அப்படிப்பட்ட பொருள்களில் இயற்கையான தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டிருக்கும்.
அவை எந்த மாதிரியான தாவரங்கள் என்பது அந்தப் பயிற்சியாளருக்கும் தெரியாது, சாப்பிடுவோருக்கும் தெரியாது. உடல் தசைகள் திரண்டு தெரியவும், சீக்கிரமே பலனை உணரவும் பலரும் இப்படிப்பட்ட சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட தயாரிப்புகள் பலவற்றிலும் ஸ்டீராய்டு கலந்திருக்கும். அந்த ஸ்டீராய்டுகள் சீக்கிரமே தசைகளை உருண்டு, திரளச் செய்யும். இது பயங்கரமான பக்க விளைவுகளைக் கொடுக்கும். இந்த அளவு ஸ்டீராய்டை உடலால் ஏற்றுக்கொள்ள முடியாது. கல்லீரலும் சிறுநீரகங்களும் பாதிக்கப்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிலருக்கு மனநிலையில் பயங்கரமான மாற்றங்கள் ஏற்படும்.
புரதம் என்ற பெயரில் பரிந்துரைக்கப்படும் பவுடர்களும் இந்த ரகம்தான். பல வருடங்களாக இவற்றை எடுத்துக்கொள்ளும்போது உடலின் பிரதான உறுப்புகள் பாதிக்கப்படும். குழந்தையின்மை பிரச்னை வரலாம்.
எனவே வொர்க் அவுட் செய்வோர், சரிவிகித உணவு உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். 30 சதவிகிதம் புரதம், 30 சதவிகிதம் கார்போஹைட்ரேட் மற்றும் மீதமுள்ள சதவிகிதம் கொழுப்பு என எடுத்துக்கொள்வதுதான் சரியானது.
இன்னும் சிலர், குறிப்பாக பெண்கள், உடலை வருத்தாமல், உடற்பயிற்சி செய்யாமல் எடையைக் குறைக்க பவுடர், திரவ உணவுகளை எடுத்துக்கொள்வதுண்டு. அத்தகைய திரவங்களில் சேர்க்கப்படும் பொருள்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்பதை ஆராய மாட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல சீக்கிரமே எடை குறையும், அதே வேகத்தில் இதயநலனும் பாதிக்கப்படும். தூக்கமின்மை வரும்.
எடைக்குறைப்புக்கு சரியான உடற்பயிற்சி, உணவுப்பழக்கம் இரண்டும்தான் உதவும். குறுக்குவழிகள் சீக்கிரம் பலன் தருவது போலத் தெரிந்தாலும் அவை ஏற்படுத்தும் பின்விளைவுகள் காலத்துக்கும் உங்களை பாதிப்பதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-is-it-right-to-lose-weight-with-supplements-without-exercise
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக