Ad

திங்கள், 1 நவம்பர், 2021

ரஜினிகாந்திற்கு ஏற்பட்ட மினி ஸ்ட்ரோக்; மற்றவர்களுக்கு சொல்லும் மெசேஜ் இதுதான்!

திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய `தாதா சாகேப் பால்கே' விருதைப் பெற்று, கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினி. தீபாவளிக்கு ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், `சிறுத்தை' சிவா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் `அண்ணாத்தே' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பேரனுடன் `அண்ணாத்தே' படம் பார்த்த மகிழ்ச்சி அனுபவத்தை `ஹூட்' செயலியில் பகிர்ந்திருந்தார் ரஜினி.

இந்நிலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை, காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. பயப்படும்படி ஒன்றுமில்லை, முழு உடல் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும், தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் முதல்கட்ட தகவல்கள் சொன்னாலும், அடுத்த நாள் அந்த மருத்துவமனையின் அதிகாரபூர்வ மருத்துவ அறிக்கை, ரஜினியின் உடல்நலம் குறித்து அப்டேட் செய்தது. அதில் ரஜினிக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அதற்காக அவருக்கு `கரோட்டிடு ஆர்ட்டரி ரீவாஸ்குலரைசேஷன்' (carotid artery revascularization) என்ற அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பிறகு ரஜினி நலமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Brain (Representational Image)

Also Read: ரஜினி உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன?- விளக்கும் நரம்பியல் மருத்துவர்

ரஜினிக்கு ஏற்பட்டிருப்பது பக்கவாதத்தில் ஒருவகையான ட்ரான்சியென்ட் இஸ்கெமிக் அட்டாக் (Transient Ischemic Attack) ஆகும். கைகளில் பலவீனம், தலைவலி மற்றும் தலைச்சுற்றல் அறிகுறிகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு ஏற்பட்டது மினி ஸ்ட்ரோக் என்றும், தாமதிக்காமல் சிகிச்சை தொடங்கப்பட்டதால் அந்தப் பாதிப்பு சரிசெய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள்.

சாதாரண அறிகுறிகளைக்கூட அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவமனைக்கு மக்கள் விரைய வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாக இருக்கட்டும் என்றும் நிபுணர்கள் அலர்ட் செய்கின்றனர்.

ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ட்ரான்சியென்ட் இஸ்கெமிக் அட்டாக் என்பது என்ன..?

``ட்ரான்சியென்ட் இஸ்கெமிக் அட்டாக் (Transient ischemic attack (TIA)) என்பது ஸ்ட்ரோக்கில் ஒரு வகை. ட்ரான்சியென்ட் என்றால் தற்காலிகம் என்று பொருள். இஸ்கெமிக் என்றால் ரத்த ஓட்டம் குறைவது. இதனால் சில நொடிகள் முதல் சில மணி நேரம்வரை பக்கவாதம், மரத்துப்போவது, தலைச்சுற்றல், ஒரு கை அல்லது காலில் உணர்ச்சியே இல்லாதது போன்றவை வந்து, தானாகச் சரியாகிவிடும். இந்த வகை தற்காலிக ஸ்ட்ரோக், அடுத்து ஒருவருக்கு நிரந்தர ஸ்ட்ரோக் வரலாம் என்பதற்கான அறிகுறி. எனவே, இதை அலட்சியமாக நினைக்காமல் முறையான சிகிச்சை அவசியம்.

Human brain (Representational Image)

Also Read: Doctor Vikatan: புனித் ராஜ்குமாருக்கு ஏற்பட்ட மாரடைப்பு; பலருக்கு உடற்பயிற்சியின்போது ஏற்படுவதேன்?

`கொஞ்ச நேரத்துக்கு கைகால் மரத்துப் போச்சு... அப்புறம் சரியாயிடுச்சு' எனப் பலரும் இதைச் சாதாரணமாகக் கடந்து போவார்கள். அப்படி அலட்சியப்படுத்தினால், பின்னாளில் அது நிரந்தர பக்கவாதமாக மாற வாய்ப்புகள் அதிகம். இந்த வகை ஸ்ட்ரோக் வந்தவர்கள், ரயிலிலோ, பஸ்ஸிலோ பயணம் செய்யும்போது, இறங்க வேண்டிய இடம் வந்தும் இறங்க மாட்டார்கள். தற்காலிக பாதிப்பு நிலையில் இருந்ததன் விளைவு இது. சில நிமிடங்களில் அடுத்த ஸ்டேஷன் அல்லது ஸ்டாப் வருவதற்குள் தெளிவாகிவிடுவார்கள். இந்த நிலை, பிற்காலத்தில் வரப்போகிற பெரிய பாதிப்பை உணர்த்தும் அறிகுறி என்பதை அறிய மாட்டார்கள். எனவே தலைவலி, தலைச்சுற்றல், மரத்துப்போவது போன்ற அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டியது மிக அவசியம்'' என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.



source https://www.vikatan.com/health/healthy/what-is-transient-ischemic-attack-a-brain-ailment-diagnosed-in-rajinikanth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக