தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட கடையம் ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் மொத்தம் உள்ள 17 இடங்களில் 11 இடங்களில் தி.மு.க-வும் 5-ல் அ.தி.மு.க-வும் ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றிருந்தது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பாக ஜெயகுமார் என்பவரை யூனியன் சேர்மன் தேர்தலில் போட்டியிட மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன் ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால், ஒன்றிய செயலாளரான குமார் என்பவர் ஆதரவுடன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் செல்லம்மாள் என்பவர் 13 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் அதிருப்தியடைந்தார். இந்த நிலையில், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியதாக தி.மு.க ஒன்றிய செயலாளர் குமார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
மாவட்டச் செயலாளர் அறிவித்த வேட்பாளர் ஜெயகுமார் தோல்வியடைந்த நிலையில், அவர் செலவு செய்த ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாயைத் தருமாறு மாவட்டச் செயலாளர் நிர்ப்பந்தம் செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக செல்லம்மாள் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது. ஒன்றிய சேர்மன் தேர்தலில் இவ்வளவு பெரிய தொகை செலவு செய்யப்பட்ட விவகாரம் மட்டுமல்லாமல் பணத்துக்காக வெற்றி பெற்றவரை ராஜினாமா செய்ய வைத்ததும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்த பெண் யூனியன் சேர்மன் செல்லம்மாளின் மகன் சதன் பிரபாகர் என்பவர் பேசும் வீடியோ வைரலாக பரவுகிறது. அதில், “முதல்வருக்கு வணக்கம். என் தந்தை வி.எஸ்.முருகேசன், கடையம் யூனியின் தி.மு.க-வில் ஆதிதிராவிட நல உறுப்பினராக இருக்கிறார். அவர் இந்தக் கட்சிக்காக 35 வருசமா போஸ்டர் ஒட்டியவர். நான் என் வயதுக்கு 10 வருசமா போஸ்டர் ஒட்டியிருக்கேன்.
எங்கம்மா செல்லம்மாள் கடையம் யூனியனில் 13 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் தான் சேர்மனாக வர வேண்டும் என்று மக்களும் கவுன்சிலர்களும் விரும்பியதால் இந்த வெற்றி கிடைத்தது. ஆனால், மாவட்டச் செயலாளர் எங்களிடம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கேட்டதால் பதவியை ராஜினாமா செஞ்சிருக்கார்.
கட்சிக்காக 35 வருசம் உழைச்ச குடும்பத்துக்கு கிடைச்ச இந்த வாய்ப்பைக் கூட பணம் கேட்டு தட்டிப்பறிச்சுட்டாங்க. எங்களிடம் ஒரு கோடி பத்து லட்சம் கேட்கிறாங்க. எங்களால் ஒரு லட்சம் ரூபாய் கூட புரட்ட முடியாது. அந்த மாதிரியான சூழலில் நாங்க இருக்கோம்.
நாங்க இவ்வளவு வருசமா கலைஞருக்காகவும் முதல்வர் ஸ்டாலினுக்காகவும் கட்சியில் விசுவாசமா இருந்து உழைச்சிருக்கோம். ஆனால் எங்களிடம் வந்து பணம் இருந்தால் தான் அரசியலில் இருக்க முடியும்னு சொல்லுறாங்க. இப்போது நாங்க என்ன செய்யட்டும் முதல்வரே? நீங்க தான் எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கணும்” என்று பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
Also Read: தென்காசி: ரூ.1 கோடி கேட்டாரா திமுக மாவட்டச் செயலாளர்?! - யூனியன் பெண் தலைவர் ராஜினாமா பின்னணி
கடந்த இரு தினங்களுக்கு முன்பு செல்லம்மாள் ராஜினாமா செய்யும் முன்பாக அவர் பேசிய ஆடியோ வெளியானது. அதில் அவர் மாவட்டச் செயலாளர் பணம் கேட்பதாகப் பேசியிருந்தார். அதற்குப் பதிலளித்த மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன், ‘கடையம் ஒன்றிய செயலாளராக இருந்த குமார் என்பவர் செல்லம்மாளுக்கு பின்னணியில் இருந்ததால் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளோம்.
அவர் மீண்டும் கட்சியில் சேர்வதற்காக செல்லம்மாளிடம், ’பணத்தைக் கொடு அல்லது பதவியை ராஜினாமா செய்’ எனச் சொல்லியிருக்கலாம். இது தவிர நான் செல்லம்மாள் என்பவரைப் பார்த்தது கூட கிடையாது. நான் யாரிடமும் பணத்தைக் கேட்கவும் இல்லை” என்று தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் அவர் மீது செல்லம்மாள் மகன் வீடியோ மூலம் புகார் தெரிவித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/video-of-a-dmk-cadre-appealing-to-party-leader-goes-viral
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக