பொதுவாக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டங்களில், சட்டமன்ற, உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ கலந்துகொள்வதில்லை. அத்திப்பூத்தாற் போல், ஒரு சில மாவட்டங்களில், எப்போதாவது கலந்துகொண்டாலுமேகூட, ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை உச்சி முகர்ந்து பாரட்டிவிட்டு, வீரநடைப் போட்டு வெளியில் கிளம்பிவிடுகிறார்கள். இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டங்களில் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் முக்கிய பிரச்னைகளுக்காக குறள் கொடுத்திருப்பது விவசாயிகள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.
Also Read: ``தீபாவளிக்கு முன்னரே இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்!'' - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டங்கள் என்று சொன்னாலே விவசாயிகளும் அதிகாரிகளும் கலந்து கொள்வதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. இக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் விவசாயிகள், தங்களது முக்கிய பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை இங்கு பதிவு செய்தால் தீர்வு கிடைக்கும் எனவும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறார்கள். ஆனால் இவற்றில் பெரும்பாலானவைகாற்றில் பறக்கவிடப்படுகின்றன. அதேசமயம் மக்கள் பிரதிநிகள் இதுபோன்ற கூட்டங்களில் கலந்து கொண்டு, விவசாயிகளின் பிரச்னைகளைப் பேசினால், கூடுதல் கவனம் பெறுவதோடு, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். எம்.எல்.ஏ, எம்.பி கலந்து கொள்கிறார்கள் என்பதாலேயே வேளாண்மை தொடர்பான அனைத்து துறைகளின் அதிகாரிகளும் தவறாமல் கலந்து கொள்ளக்கூடும்.
இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, பூண்டி கலைவாணன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மரியாதை நிமித்தமாக இவர்கள் மேடையில் அமர வைக்கப்பட்டபோதிலும் விவசாயிகளாகவே குரல் கொடுத்தது பாராட்டுக்குரியது.
இக்கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ மாரிமுத்து, ``திருவாரூர் மாவட்டத்தில் விடுபட்டு போன அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகையை பெற்று தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது இன்ஷூரன்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட பிரச்னைதானே என நினைத்து மாவட்ட நிர்வாகம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கக்கூடாது. கடந்த 2021-ம் ஆண்டு சம்பா, தாளடி பட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிர்களில் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு, பயிர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற்றுத் தருவது, வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் கடமையாகும்.
பயிர் இன்ஷூரன்ஸ் திட்டத்தை தனியார் நிறுவனத்திடம் வழங்கக் கூடாது. அரசே ஏற்று நடத்தினால் விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு கிடைக்கும். தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் திண்டாடுகிறார்கள். தற்போது ஒருபோக சம்பா மற்றும் தாளடி பட்டத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி மேற்கொண்டுள்ளார்கள். இளம் பயிர்களாக இருக்கும் போதே, முறையாக உரங்கள் கொடுத்தால், நெற்பயிர்கள் சீராக வளர்ச்சி அடைந்து நிறைவான மகசூலை கொடுக்கும். எனவே உடனடியாக யூரியா, டிஏபி, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களை எல்லா பகுதிகளிலும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
Also Read: `பயிர் இழப்பீடு விவரங்களை இணையத்தில் வெளியிடவேண்டும்!' - விவசாய ஆர்வலரின் கோரிக்கை
நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் பேசும்போது, ``விவசாயிகள், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, தங்களுக்கு உள்ள பல முக்கிய பிரச்னைகளையும் கோரிக்கைகளையும் தெரியப்படுத்த, மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தியதோடு, பயிர் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் உள்ள பல குறைபாடுகள் குறித்தும் பதிவு செய்தார். விவசாயிகளுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல மக்கள் பிரநிதிகள் ஒதுங்கி இருக்கக் கூடாது. இவர்களுக்காக குரல் கொடுப்பதும், இவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதும் இவர்களது முக்கிய கடமை. மற்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரநிதிநிகளும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
source https://www.vikatan.com/news/agriculture/dmk-mla-and-cpi-mla-mp-comes-in-support-of-farmers-in-crop-insurance-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக