மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசார், சட்டத்திற்குப் புறம்பாக ரூ.6,840 கோடி ரூபாய் அளவிற்கு டப்பா டிரேடிங் செய்த நான்கு நபர்களை கைது செய்துள்ளனர்.
இந்த மோசடி பற்றிய புகார், மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) சார்பாக கிரைம் பிராஞ்ச் போலீஸிடம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிரடியாக நடவடிக்கை எடுத்த மும்பை போலீசார், ராஜேஷ் பட்டேல் (ரூ.4,900 கோடி ரூபாய்க்கு மோசடி டிரேடிங்), சைலேஷ் நந்தா (ரூ.1,300 கோடி ரூபாய்க்கு மோசடி டிரேடிங்), தினேஷ் பன்சாலி மற்றும் மகேஷ் கட்டாரியா ஆகிய நான்கு நபர்களைக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மொபைல் போன், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க் போன்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
டப்பா டிரேடிங் என்றால் என்ன?
நாம் ஒரு திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வோம்? தியேட்டருக்கு சென்று டிக்கெட் எடுத்து படம் பார்ப்போம். அவ்வாறு செய்யும் பொழுது சினிமா துறை சார்ந்த அனைவருக்கும் லாபம் கிடைக்கும். அரசுக்கும் வரி கிடைக்கும். அதே படத்தை நாம் பைரசி வழியாக, சட்டவிரோதமாக இணையதளத்தில் பார்த்தால் அந்த வருவாய், தியேட்டர்காரர்கள், அரசுக்கு கிடைக்காது.
அதுபோல நிறுவனப் பங்குகளை டீமேட் கணக்கு தொடங்கி முறைப்படி வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கும் பொழுது அரசுக்கு பலவித வரி வருவாய் கிடைக்கும். இந்தப் பங்குகளை வாங்குவதற்கு கறுப்பு பணத்தையும் பயன்படுத்த முடியாது.
இதே பங்கினை எந்த நெறிமுறையும் பின்பற்றாமல், பங்குச் சந்தைக்கு வெளியே வாங்கி, விற்று லாபம் சம்பாதித்தால் அதுதான் டப்பா டிரேடிங்.
டப்பா டிரேடிங் செய்வதற்கு என்று பிரத்யேக புரோக்கர்கள் இருப்பார்கள். அவர்களிடம் சென்று குறிப்பிட்ட பங்கை அதன் தற்போதைய விலையில் டப்பா டிரேடிங்கில் வாங்கிக் கொள்ளலாம். அந்த புரோக்கர் உங்கள் பெயரில் அந்த நிறுவனப் பங்கினை எக்ஸெல் சீட்டில் விலை குறிப்பிட்டு உங்களுக்கு ஒதுக்கீடு செய்ததாக தெரிவிப்பார்.
Also Read: பங்குச்சந்தை முதலீடு உங்களுக்கு சரிப்பட்டு வருமா? இதைப் படிச்சிட்டு முடிவெடுங்க! - 20
உதாரணத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு 10 நீங்கள் வாங்கினால் அதன் தற்போதைய விலையான சுமார் 25,000 ரூபாய் பணத்தை புரோக்கரிடம் தந்துவிட வேண்டும். உங்கள் பெயரில் அந்தப் பங்கை வாங்கி விட்டதாக குறித்து வைத்துக் கொள்வார். இந்த பங்கினை தகுதி வாய்ந்த மற்றவரிடம் அவர் விற்பனை செய்து விடுவார். சில நாட்கள் கழித்து அந்த பங்கினை நீங்கள் விற்க சொன்னால் அந்த தேதியில் உள்ள விலையில் விற்று பணத்தை உங்களுக்கு தந்து விடுவார். இந்த வகை பரிவர்த்தனைகளில் பெரும்பாலும் கறுப்பு பணமே புழங்கும். இந்த பரிவர்த்தனைகளுக்கு எந்த வரியும் கட்ட தேவையில்லை. இதில் வரும் லாபத்திற்கும் வருமான வரி செலுத்தவும் தேவையில்லை.
``கேட்பதற்கு சூப்பராக இருக்கிறது. பணமும் மிச்சமாகிறது." என்று நீங்கள் நினைக்கலாம்.
ஒரு பங்கினை பலர் வாங்கி புரோக்கர் அதனை யாரிடமும் விற்காமல் இருந்தால் லாபத்தை அவரால் கொடுக்க முடியாது.
இது முறைப்படுத்தப்படாத வர்த்தகம். ஆதலால் இதில் தவறு நடந்தால் கேட்க முடியாது. மேலும் பங்குச் சந்தை ஆணையமான செபியின் அறிவுறுத்தலின் கீழ் வராது. அவ்வாறு நாம் வாங்கிய பங்கிற்கு உரிமையும் கோர முடியாது. பணத்தை வாங்கிக்கொண்டு புரோக்கர் கம்பி நீட்டி விட்டால் பணத்தைத் திரும்பவும் வாங்க முடியாது.
Also Read: பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்... உங்களுக்கு ஏற்றவை எவை?
இவ்வளவு சிக்கல்கள் உள்ள வர்த்தகத்தில் பிறகு ஏன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? கறுப்பு பண உலகம் பெரும்பாலும் நம்பிக்கையில்தான் சுழல்கிறது. இதன் பின்னணியில் மிகப் பெரிய நிழல் உலகம் இருக்கும். இதில் வர்த்தகம் செய்வதற்கு பலர் இருக்கிறார்கள் என்பதை மும்பையில் நடந்த ரூ.6,840 கோடி டப்பா வர்த்தகம் காட்டுகிறது. மாட்டிக்கொண்ட புரோக்கர்கள் மூலம் நடைபெற்ற வர்த்தகம் மட்டுமே மேலே சொன்ன தொகை. நாம் இதுபோன்ற புரோக்கர்களிடம் விழிப்புணர்வுடன் இருப்பதே இது போன்ற மோசடிகளில் மாட்டிக்கொள்ளாமல் நம்மை காக்கும்.
source https://www.vikatan.com/business/share-market/what-is-dabba-trading-and-why-it-is-illegal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக