Ad

புதன், 3 நவம்பர், 2021

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய ஆப்பிரிக்கக் காயம் | பகுதி- 7

``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

அநம்பரா மாநிலத்தின் நைஜீரிய நதியோரம், அழகிய கட்டடங்களால் சடைத்திருக்கும் ஒனிட்சா பெருநகரம், ஒருகாலத்தில் ஆட்களைவிட ஆயுதங்களைத்தான் அதிகம் கண்டது. நைஜீரிய அரசுக்கும் பயஃப்ரா போராளிகளுக்குமான யுத்தத்தின் முதல் கைதியாக ஒனிட்சா நகரம் கடுங்காயமடைந்தது.

அப்போதுதான் ஒனிட்சா நகரின் அகுனோ என்ற இளைஞன், திரைமறைவில் நவீன அரசியல் நுட்பங்களை இயற்றிக்கொடுப்பதில் வல்லவனாக உருவெடுத்தான்.

லட்சக்கணக்கான மக்களை உயிர்ப்பலி கொடுத்தும் தமது உரிமைகளுக்காகப் போராடுவதில் சளைக்காத பயஃப்ரா மக்கள், 90-களின் இறுதியில் இரண்டுவிதமான அமைப்புகளை முன்னிறுத்தினர். `பயஃப்ரா புலம்பெயர் அமைப்பு’ என்று ஒன்று. மற்றையது, `பயஃப்ரா நிழல் மந்திரி சபை.’ வெளிநாடுகளில் புலம்பெயர்ந்திருந்த பயஃப்ரா மக்களின் பேராதரவுடன், ஆளும் நைஜீரிய அரசிடமிருந்து பயஃப்ரா நிலத்துக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு பின்னணி வேலைகளை மிகக் கச்சிதமாக செய்துகொண்டிருந்தவன் அகுனா.

ஓனிட்சா நகர பல்கலைக்கழகப் பட்டதாரியும் சிறந்த அரசியல் விஞ்ஞானியுமான அகுனா, இந்தப் புதிய போராட்ட வடிவமைப்பின் பின்னணியில் இயங்கியவர்களில் முக்கியமானவன்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

இரு தரப்புக்குமான அமைதிக்காலம் அமலில் இருந்தபோது, நைஜீரியப் பகுதியிலுள்ள உள்ளுர் விமான நிலையமொன்றில் வைத்து அகுனாவைக் கள்ளமாகப் பிடித்தனர். துறைமுகப் பகுதியிலுள்ள ‘கன்டெய்னர்’ ஒன்றில் அடைத்துவைத்தனர். இரண்டு மூன்று நாள்களுக்கு ஒரு தடவை, ஒட்டுப்படையின் சித்திரவதைக் கும்பல் ‘கன்டெய்னர்’ கதவைத் திறந்துகொண்டு, யாராவது ஒரு பயஃப்ரா கைதியோடு உள்ளே போவார்கள். வெளிநாடுகளில் இயங்கும் பயஃப்ரா முக்கியஸ்தர்களின் விவரத்தைக் கேட்டு, அகுனாவை ஆணி ஆசனமொன்றில் இருத்திவைத்து இரண்டு தோள்களிலும் அடிப்பார்கள். ‘கன்டெய்னர்’ தகரங்கள் அதிருமளவுக்கு அகுனா அலறுவான். ஒவ்வொரு தடவையும் கன்டெய்னருக்குள் வரும்போது தங்களுடன் கூட்டிவரும் பயஃப்ரா கைதியை, அங்கிருந்து போகும் முன்னர், அகுனா முன்னிலையில் காதுக்குள் சுட்டு, அவன் காலடியிலேயே போட்டார்கள். தமக்குரிய தகவல்கள் தெரிய வராவிட்டால், அகுனாவுக்கும் இதேநிலைதான் என்று ஒவ்வொரு தடவையும் கன்டெய்னர் கதவை சாத்திவிட்டுப்போகும்போது, துவக்குப் பிடியால் கடைசி அடியைக் கொடுத்துவிட்டு எச்சரித்துப் போவர்.

தகரச்சுவரில் தலையால் மோதினான். இருட்டில் பிணங்களில் இடறி விழுந்து அலறினான். ஒருநாள் சிரித்தான். முழுதாகப் பைத்தியமானான்.

கடைசி தடவை கன்டெய்னர் கதவு திறந்தபோது, அகுனா செத்த பிணமொன்றின் காலை மடியில்வைத்து, அதன் பெருவிரலைச் சூப்பிக்கொண்டிருந்தான். அதன் நகங்களுக்குள் தனது நாக்கைவிட்டுத் துழாவினான். வந்தவர்களைப் பார்த்து குலுங்கிச் சிரித்தான்.

அன்று இரவே அகுனோவை ஒனிட்சா நகரின் சிகை திருத்தும் கடைக்கு வெளியில் கறுப்பு வாகனமொன்றில் கொண்டுபோய் வெளியில் தள்ளிவிட்டுப்போனார்கள் ஒட்டுக்குழுவினர்.

பயஃப்ரா போராட்டத்தால் நைஜீரிய ராணுவம் கொதித்துப்போயிருந்த காலம் அது. அமைதிவழியில் போராட்டம் ஆரம்பித்திருப்பதாக அறிவித்த பயஃப்ரா பாதுகாப்பு இயக்கம், புலம்பெயர்ந்த பயஃப்ரா அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க, பயஃப்ரா தேசத்துக்கான கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியிருந்தது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

இந்த அறிவிப்பு நைஜீரிய அரசுக்கு நகக்கண்ணில் ஊசியேற்றியதுபோலிருந்தது.

வீதி வீதியாக பயஃப்ரா பாதுகாப்பு இயக்கத்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். மக்கள் வெளியில் கடைக்கு போவதாக இருந்தால்கூட, வீதியில் எரிந்துகொண்டிருக்கும் இரண்டு மூன்று சடலங்களைத் தாண்டித்தான் போய் வர வேண்டியிருந்தது.

ஒனிட்சா உயர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் கற்பித்துக்கொண்டிருந்த அகுனோவின் தமையன், அகுனோவை ஒருவாறு தனது கல்லூரி வளாகத்துக்குள் பாதுகாப்பாகக் கொண்டுபோனான். அகுனாவை மூன்று மாதங்கள் தன்னுடன் வைத்திருந்து சிகிச்சையளித்து ஓரளவுக்குத் தேற்றினான்.

ஒருநாள் இரவு, பல மணி நேர கால்நடைப்பயணமாக ரகசிய இடமொன்றுக்கு சென்று, அங்கு பெற்றுக்கொண்ட பயணச்சீட்டில் இருவரும் தான்சானியா போயிறங்கினார்கள்.

அகுனாவின் தமையன் அங்கிருந்து இந்தோனேசியாவில் பீனா நுஸந்தாரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் தன் நண்பனை அழைத்துப் பேசினான். சகல விவரங்களையும் சொன்னான். தான்சானியாவில் ஒருவழிப் பயணச்சீட்டு ஒன்றை வாங்கி, தனது தம்பியை இந்தோனேசியாவுக்கு அனுப்பிவைத்துவிட்டு ஒனிட்சா திரும்பினான்.

Also Read: நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `உலகின் மிக பாரமான சடலம்’ | பகுதி- 6

புதிய இடமும், துப்பாக்கிச் சத்தங்களற்ற வீதிகளும் அகுனாவுக்கு பாடசாலை ஞாபகங்களை நினைவில் சொரிந்தன. படிப்பின் மீதான பழைய ஈர்ப்பு அவனுக்குள் மீண்டும் மிதந்து வந்தது. பீனா நுஸந்தாரா பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் கணினிக்கலையை பயில்வதில் அகுனா ஆர்வம் காண்பித்தான். செய்தி அறிந்த அகுனாவின் அண்ணன் மிகுந்த மகிழ்ச்சியானான். ஆனாலும் அகுனாவால் படிக்கும் எதையும் சில நிமிடங்களுக்கு மேல் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை. கற்பவை அனைத்தும் காற்றில் மிதக்கும் குமிழ்களைப்போல நினைவில் உடைந்து மறைந்தன.

தன் தமையனை எப்படியாவது தன்னிடம் அழைத்துவிட வேண்டும் என்று பிடிவாதமான எண்ணத்திலிருந்தான். அதற்கு, தான் ஆஸ்திரேலியா போன்ற நாட்டுக்குப் போனால்தான் நல்ல வாழ்க்கை சாத்தியம் என்று நம்பினான்.

அகுனா ஆஸ்திரேலியாவுக்குப் படகேற ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, ஆதரவளித்த தனது அண்ணனின் பல்கலைக்கழக தோழரிடம் பயணத்தைப் பற்றிக் கூறினான். அவர் மிரண்டுபோனார். ஆனால், வெளியில் காண்பிக்கவில்லை. அகுனாவின் தமையனுக்கு அழைப்பெடுத்து விவரத்தைச் சொன்னார்.

அகுனாவுக்கு இயல்பு வாழ்க்கை சாதுவாகச் சாத்தியப்படுகிறதே தவிர, கடுமையான உட்காயங்களால் அவன் சிதைவடைந்த நினைவுகளோடு போராடுகிறான் என்றும், தனித்த வாழ்க்கை அவனுக்கு பாரதூரமானது என்றும் சொன்னார். `படகேற வேண்டாம் என்று அகுனாவின் தமையனும் பட்டும் படாமல் கூறிப் பார்த்தார்.

``எனக்கும் பொறுப்பு இருக்கிறது’’ – பதில் சொல்லி மடக்கினான் அகுனா.

அடர்ந்த இருள் வானில் நட்சத்திர வெள்ளம் சொட்ட, ஆஸ்திரேலிய வரைபடம் முகில்களாக நகர்ந்துகொண்டிருந்தது.

ஆஸ்திரேலியக் கடல் எல்லைக்குள் நுழைந்த முதல் நாளிலேயே படகைக் கண்டுபிடித்த படையினர், கரைக்கு இழுத்துச் சென்றனர். ஒருவாறு ஐந்து நாள்கள் பயணம் நிறைவுக்கு வந்தது. கிறிஸ்துமஸ் தீவில் அகுனா இறங்கிய அன்று, ஒனிட்சாவில் அவனுடைய அண்ணனின் தாறுமாறாக வெட்டப்பட்ட சடலம், கல்லூரி வளாகத்தின் இலக்கிய வகுப்பு மேசையொன்றின் கீழிருந்து மீட்கப்பட்டது.

கிறஸ்துமஸ் தீவிலிருந்து பேர்த் பெருநகர் வழியாக மெல்போர்னுக்கு ஏற்றி அனுப்பப்பட்ட அகுனாவுக்கு, தடுப்பு முகாமில் வைத்து முதல்நாள் மேற்கொண்ட சோதனையில், அவனை மேலதிக கதிர்வீச்சு சோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தார்கள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

அகுனா முகாமுக்கு வந்த அடுத்த நாள், இரண்டு உத்தியோகத்தர்களுடன் மெல்போர்ன் - `எப்பிங்’ வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டான்.

அன்று காலை, குடிவரவு அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற வழக்கமான சந்திப்பில், அகுனாவின் தமையன் இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. தங்களது முதற்கட்ட சோதனைகள் அகுனாவின் மனநிலை குறித்துப் பெரும் கரிசனைகளை ஏற்படுத்தியிருப்பதாக முகாம் வைத்தியர் சொன்னார். அகுனாவின் தலையில் காணப்படுகிற வெளிக்காயங்களின் விகாரம் பாரதூரமாக இருக்கிறது என்றார். நிச்சயம் அவனுக்கு, உட்காயங்களின் பாதிப்பு மோசமாக இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்லி உதட்டைப் பிதுக்கினார்.

``அதிர்ச்சியான எதையும் இப்போதைக்கு அவனுடன் பகிர்ந்துகொள்வது உகந்தது அல்ல.”

சொல்லிமுடித்துவிட்டு கண்ணாடியைக் கழற்றிக் கண்களைக் கசக்கினார் வைத்தியர்.

`ஆல்பா’ கம்பவுண்டின் மூன்றாவது அறை அகுனாவுக்கு ஒதுக்கப்பட்டது. குனிந்த தோள்களின் மீது எந்நேரமும் பணிவோடு குனிந்து நிமிரும் அவனது தலை, வயது வித்தியாசம் பாராதது. அவனது கண்களில் தெரிந்த கனிவு, அவனுள் தேங்கிக்கிடந்த கரிய துயரங்களின் வெள்ளை வடிவம்போல, எப்போதும் பார்ப்பவர்களை நின்று பேசவைத்தது.

தனது படுக்கைக்கு அருகில் சுவரெங்கும் யேசுவின் சித்திரங்களையும், தலையணைப் பக்கமாக தமையனின் பெரியதொரு படத்தையும் ஒட்டிவைத்திருந்தான்.

காலை எட்டு மணிக்கு பைபிளோடு பிரார்த்தனை மண்டபத்துக்குப் போய் வருவான். பிறகு, ஆல்பா கம்பவுண்டுக்கு வந்து விசாலமான தனது உடலைக் கதிரையில் பரப்பிவைத்துக்கொண்டு தொலைக்காட்சியைப் பார்ப்பான். அதில் என்ன ஒளிபரப்பானாலும், பார்க்கத் தொடங்கி, பத்தாவது நிமிடம் அழத் தொடங்கிவிடுவான். அது அவனை அறியாமல் இடம்பெறுவதாயிருந்தது. அவன் உறைநிலையில் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, மூடாத அவன் விழிகளில் கண்ணீர் கொட்டியது.

கடவுச்சீட்டு

முகாமுக்கு வந்த அடுத்த நாளே, இதை அவதானித்த உத்தியோகத்தர்கள், ஆதரவாக அவன் அருகிலிருந்து பேசிப் பார்த்தார்கள். அந்த நேரங்களில் அவனுக்கு யாரிடமும் பேச வார்த்தைகள் இருக்கவில்லை. வறண்ட உதடுகள் திறந்திருக்கும். முகமெல்லாம் தடித்திருக்கும். ஒரு வெப்பக்கிடங்காக வெடித்துப் பறக்கும் அவன் நினைவுகள், உடல்முழுதும் அங்கலாய்க்கும்.

அகுனாவின் நிலை தொடர்பாக முகாம் உத்தியோகத்தர்கள் எழுதிய அறிக்கைகளை வைத்தியரிடமும், குடிவரவு அமைச்சு அதிகாரிகளிடமும் கொடுத்தேன்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அகுனா காலை நேரத் தொலைக்காட்சியைத் தவிர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நேரங்களில் அவனோடு யாராவது சதுரங்கம் விளையாடுவதற்கு உத்தியோகத்தர்கள் ஒழுங்கு செய்யப்பட்டனர். ஆனால், பிரார்த்தனைக்குப் பிறகான அழுகை அவனுக்கு அவசியம் தேவைப்பட்டது. `ஆல்பா’ கம்பவுண்டுக்கு வெளியில் சென்று, உதைபந்தாட்டத் திடலில் அமர்ந்து, காலைச் சூரியனை அழுவதற்குத் துணைக்கு அழைத்தான்.

முகாமிலிருந்த கணினியும் இணையமும் பல கட்டுப்பாடுகள் நிறைந்தவை. கடிதங்களைத் தட்டச்சு செய்வதற்கும், சில குறிப்பிட்ட வீடியோக்களைப் பார்ப்பதற்கும்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த வடிகட்டிய வசதிகளாவது கிடைத்தது பெரும்பேறு என்று அநேகமானவர்கள் மணிக்கணக்கில் ஏதாவது ஒரு கணினியில் இரவு பகலாகக் கிடப்பார்கள்.

அகுனாவுக்கு தனது மின்னஞ்சல், முகநூல் கடவுச் சொற்களை நினைவில் வைத்திருக்குமளவுக்கு ஞாபகங்கள் மனதில் தேங்கவில்லை. களைத்த கண்கள் எந்நேரமும் அவனைத் தூக்கத்துக்குத் துரத்தின. `கன்டெய்னர்’ கொலைகள் அவன் மனதில் அகற்ற முடியாத அச்ச வடுக்களை ஏற்படுத்தியிருந்தன. எண்ணுக்கணக்கில்லாமல் அவனுடலில் ஏற்பட்ட காயங்களும், நினைவு கலங்குமளவுக்கு இருட்டில் வாங்கிய அடிகளும் இன்னமும் கண்களை மூடினால் அடிமனதிலிருந்து சினந்து எழுந்தன.

முகாம் மருத்துவர்கள் தொடர்ச்சியாகக் கொடுக்க ஆரம்பித்த தூக்க மாத்திரைகள் அவனது தூக்கத்துக்கு அவ்வப்போது வசதியாக இருந்தாலும், பகல் முழுவதும் உடலைச் சோர்வாகவே வைத்திருந்தன.

தூக்கம் வராத இரவுகளிலும், அவன் தூங்க விரும்பாத இரவுகளிலும் த ந் தமையனோடு பேசுவதற்காக `ஆல்பா’ கம்பவுண்டிலுள்ள அகதிகளுக்கான பொதுத்தொலைபேசியில் வந்து குந்துவான். தனது டயரிக் குறிப்பிலிருந்து தமையனின் தொலைபேசிக்கு ஒவ்வொரு எண்ணாகப் பார்த்துப் பார்த்து அழுத்துவான். எப்போதும் அவனுக்கு அழைப்பு கிடைப்பதேயில்லை.

நான் இரவுப் பணியிலிருக்கும்போது ஒருநாள், இந்தோனேசிய தொலைபேசி எண்ணுக்கு அழைப்பெடுத்து தருமாறு உதவி கேட்டான். ``அங்கிருந்து படகில் வந்துவிட்டு, இந்தோனேசியாவுக்கு அழைத்துப் பேசாதே. இங்குள்ள தொலைபேசிகள் அனைத்தும் ஒற்றுக்கேட்கப்படுபவை” – என்று ஆலோசனை கூறினேன். கைகளை இறுக்கிப் பிடித்து நன்றி கூறினான்.

அகுனாவுடன் சதுரங்கம் விளையாடுவேன். அவன் நுட்பமாக விளையாடுவதைப்போல சிந்திப்பான். ஆனாலும் அவனுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல், தன்னோடு போராடுவான்.

``என்னால் முடியாது ஆபீஸர்.”

ஓர் இனத்தை முழுதாக அழிப்பதற்காக வருடக்கணக்கில் துடிக்கும் கைகளால் வதைபட்டவனின் அருகாமை, எப்போதும் எனக்குள் இனம்புரியா பதற்றத்தை உதறிவிடும். அவனுக்காக என்றாவது ஒருநாள் பகிரங்கமாக அழுதுவிடுவேனோ என்ற அச்சம் எப்போதும் எனக்குள்ளிருந்தது.

அன்று மதியம், உதைபந்தாட்டத் திடலைச் சுற்றி நடந்துகொண்டிருந்த அகுனோ திடீரென்று `சார்ளி’ கம்பவுண்டை நோக்கி வேகமாக ஓடினான்.

அகதிகள்

குடிவரவு அமைச்சின் அலுவலகத்துக்குள் மயங்கி விழுந்த குயிலனின் மனைவியை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக, தலையில் சிவப்பு, நீல வெளிச்சத்தை சுழலவிட்டபடி, முகாமின் அவசரகாலப் படலையினால் உள்ளே ஆம்புலன்ஸ் வண்டி வந்திருந்தது. அதிகாரிகள் குயிலனின் மனைவியைப் பக்குவமாக வண்டியில் ஏற்றினார்கள். குயிலனோடு ஓர் அதிகாரியும் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏறிக்கொண்டான்.

முகாம் அகதிகள் ஏகப்பட்டவர்கள் திரண்டு வந்து புதினம் பார்த்தபடி நின்றார்கள். சிறுவர்கள் ஆஸ்திரேலிய ஆம்புலன்ஸ் வண்டியை ஆச்சர்யத்தோடு பார்த்துச் சிரித்தார்கள். மாறி மாறிச் சுழலும் வண்ண விளக்குகள் அவர்களுக்கு விநோதமாகத் தெரிந்தன.

அப்போது முகாம் அதிர அகுனோ குழறினான்.

``கர்த்தர் உங்களை இரட்சிப்பார். உங்களுடனேயே இருப்பார். இரக்கமும் உருக்கமும் நிறைந்த யேசுவின் கிருபையால் நீங்கள் மீண்டு வருவீர்கள் சகோதரி.”

குடிவரவு அமைச்சின் சந்திப்பு அறைக்கு வெளியிலிருந்து கம்பிவேலியைப் பிடித்தபடி, இன்னும் இன்னும் அகுனா சத்தமாகக் குழறினான்.

(தொடரும்...)

Also Read: நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | கடல் எனும் நீலக்குருதி | பகுதி- 5



source https://www.vikatan.com/government-and-politics/politics/young-nigerian-refugee-travel-to-australia-naadatravargalin-kadavucheetu-part-7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக