நைஜீரியாவில் நடந்த உலக திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டு, இலங்கை திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார் தமிழ் நடிகையான நிரஞ்சனி சண்முகராஜா.
Also Read: ``படிக்கணும்; நடிக்கணும்; மதுரைக்குப் பெருமை சேர்க்கணும்!" - தேசிய விருது பெற்ற நாகவிஷால்
இலங்கை மலையகத்தில் பிறந்த நிரஞ்சனி சண்முகராஜா, இலங்கை திரைப்பட உலகில் முன்னணி கலைஞராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்திய வம்சாவளியான நிரஞ்சனி, 1989-ல் பிறந்தவர். சிறு வயது முதல் கலைத்துறை மீது ஆர்வம் அதிகம். தமிழ், சிங்களம், ஆங்கிலம் இனிமையாகப் பேசத் தெரிந்தவர்.
கண்டியில் கல்லூரிப் படிப்பை முடித்து 2009-ல் தனியார் வானொலியில் தொகுப்பாளராக அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து வானொலி நாடகத்தில் பின்னணி குரல் கொடுப்பவராகவும், நடிப்பவராகவும் மாறி பின்பு சிங்கள - தமிழ் மேடை நாடகங்களில் தன் முத்திரையைப் பதித்தார் நிரஞ்சனி.
திரைப்படங்களில் நடிக்க குடும்பத்தினர் முதலில் சம்மதிக்கவில்லை. ஆனால், நிரஞ்சனியுடைய ஆர்வமும், தன்னம்பிக்கையும், துணிச்சலும் அவர்களைப் பின்னர் சம்மதிக்க வைத்தது.
நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்கு 2011-ல் விருது பெற்றார் நிரஞ்சனி. அதிலிருந்து அவருடைய கலைத்துறை கிராஃப் மேல் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் தேடிவர தமிழ், சிங்கள படங்களில் நடித்தார்.
`இனி அவன்', `கோமாளி கிங்க்ஸ்' போன்ற திரைப்படங்களில் நடித்த நிரஞ்சனி, இலங்கை திரைப்படத்துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட `கிரிவெசிபுர' என்ற வரலாற்றுப் படத்தில் நாயகியாக நடித்தார்.
அதைத் தொடர்ந்து தமிழ் - சிங்கள மொழியில் வெளியான `சுனாமி' திரைப்படத்தில் `கல்யாணி' என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததை, இலங்கை ஊடகங்கள் பாராட்டியிருந்தன.
இந்நிலையில்தான் நைஜீரியாவில் நடந்த உலக திரைப்பட விழாவில் `சுனாமி' படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இலங்கை மக்கள், குறிப்பாகத் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இலங்கையில் சுனாமி ஏற்படுத்திய பாதிப்புகளை அடிப்படையாக வைத்து இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்படும் சிக்கல்களை உணர்வு ரீதியாக பதிவு செய்த படைப்பாக அமைந்த இப்படம் இலங்கை மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த விருது அறிவிப்பின் மூலம் தற்போது உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ், சிங்கள நாடகங்கள், திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் இலங்கையில் இதுவரை 8 விருதுகளை பெற்றிருக்கும் நிரஞ்சனி, சர்வதேச அளவில் ஏற்கெனவே பூடானில் நடந்த ட்ரக் திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளார். தற்போது நைஜீரியாவில் நடந்த உலக திரைப்பட விழாவிலும் விருது பெற்றுள்ளார்.
நைஜீரியாவில் `பேயல்சா உலக திரைப்பட விழா'வில் 83 நாடுகளின் 1,300 திரைப்படங்கள் கலந்துகொண்டதில், `சுனாமி'க்கு சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டது அனைவராலும் பாராட்டப்படுகிறது.
நடிகை என்ற வட்டத்துக்குள் தன்னை சுருக்கிக் கொள்ளாமல் பல்வேறு அரசியல், சமூகப் பிரச்னைகளில் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறி வருகிறார் நிரஞ்சனி என்பது குறிப்பிடத்தக்கது. தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் மழுப்பாமல் நேரடியாகவே பதில் அளிக்கிறார்.
இதற்கு முன் மலையகத்திலிருந்து ருக்மணிதேவி என்ற தமிழ் நடிகை இலங்கைத் திரையுலகில் இயங்கியிருக்கிறார். அதற்குப் பின் சிறந்த நடிகையாக நிரஞ்சனி புகழ் பெற்று வருகிறார்.
Also Read: புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலம் 4 பேருக்குப் பார்வை; எப்படி சாத்தியம்? விளக்கும் மருத்துவர்
தன் நடிப்புத் திறமையால் இலங்கை மட்டுமல்லாமல் உலகம் முழுதும் உள்ள தமிழ் மக்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார் நிரஞ்சனி சண்முகராஜா.
source https://www.vikatan.com/arts/international/srilankan-tamil-niranjani-won-best-actress-award-in-international-film-festival-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக