சென்னை வில்லிவாக்கம் 3-வது சந்து தாமோதர பெருமாள் காலனியைச் சேர்ந்தவர் லாவண்யா (28). இவர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் 30.10.2021-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, `` நான் நர்சிங் படிப்பு படித்திருக்கிறேன். எனக்கும் ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு வதன ஸ்ரீ (8) என்ற மகளும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். வதன ஸ்ரீ, 4-ம் வகுப்பு படித்து வந்தார். என் மகன் சற்று மனவளர்ச்சி குன்றியவன். ராதாகிருஷ்ணன், சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நான் வில்லிவாக்கம் ராஜாஜி நகரில் உள்ள கிளினிக்கில் நர்சாக பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய கணவர் பல மாதங்களாக வேலைக்குச் செல்வதில்லை. அவருக்குக் குடிபழக்கம் இருக்கிறது. என் நடத்தைமீது சந்தேகப்படுவார். அதனால் எனக்கும் என் கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால், நான் கணவரைப் பிரிந்து குழந்தைகளோடு தனியாக வசித்து வருகிறேன். என் கணவர், தலைமைச் செயலக காலனில் உள்ள அவரின் அம்மா வீட்டின் அருகில் தனியாக வசித்து வருகிறார். ஆனால் அடிக்கடி என் வீட்டுக்கு வந்து தகராறு செய்வார். நான் இல்லாத நேரங்களில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வார். நான் அதைக் கண்டித்தேன். அதனால் நான் வேலைக்குச் செல்லும்போது வீட்டின் கேட்டை வெளிபக்கமாகப் பூட்டிவிட்டுச் செல்வேன். ஒரு சாவி வீட்டுக்குள் இருக்கும். கடந்த சில தினங்களுக்கு முன்பு எனக்கும் என் கணவருக்குமிடைய நடந்த சண்டையில் வீட்டிலிருந்து என்னுடைய செல்போனை அவர் எடுத்துச் சென்றுவிட்டார்.
Also Read: 8 கொலை; 21 வழிப்பறி; என்கவுன்ட்டர் செய்யப்பட்ட தூத்துக்குடி துரைமுருகன்; நடந்தது என்ன?
கடந்த 30-ம் தேதி இரவு ராதாகிருஷ்ணன், என் மகள் வதனஸ்ரீயின் செல்போனிலிருந்து எனக்கு போன் செய்தார். அப்போது என்னுடைய மகனின் குரல் கேட்டது. உடனே நான், ``பையனை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள்!" என்று கேட்டதற்கு, ``நீ வேலைப்பார்க்கும் இடத்துக்குதான் கூப்பிட்டு வருகிறேன்" என்று பதிலளித்தார். அதன்பிறகு நான் அவருக்கு போன் செய்தபோது போனை எடுக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்து நான் குடியிருக்கும் பிளாட்டில் வசிக்கும் லட்சுமி என்பவருக்கு போன் செய்து விவரத்தைக் கூறி, ``வதனஸ்ரீ வீட்டில் இருக்கிறாளா?" என்று கேட்டேன். உடனே அவர் வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு, ``கதவு பூட்டியிருக்கிறது. வீட்டுக்குள் டிவி சத்தம் கேட்கிறது. ஆனால், நான் வதனஸ்ரீயை கூப்பிட்டும் அவர் பதிலளிக்கவில்லை" என்று லட்சுமி என்னிடம் கூறினார்.
Also Read: சென்னை: மூத்த மகள் கொலை; கடன் தொல்லையால் பேராசிரியை தற்கொலை! 2-வது மகளுடன் எஸ்கேப்பான கணவர் கைது
அதனால் மீண்டும் என் கணவருக்கு போன் செய்தேன். அப்போது அவர், என்னுடைய தங்கை சரண்யா வீட்டில் மகனை விட்டுவிட்டுச் செல்கிறேன் என்று கூறியதும் வதனஸ்ரீ எங்கே என்று அவரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர், ``அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவளை நீ நல்லா வளர்த்திருக்க, ஆனால் நான்தான் பெரிய தப்பு பண்ணிட்டேன்" என்று போன் இணைப்பை துண்டித்துவிட்டார். உடனடியாக நான் என்னுடைய தங்கைக்குப் போன் செய்தேன். அப்போது அவர், ராதாகிருஷ்ணன் வரவில்லை என்று கூறினாள். சில நிமிடங்களில் என் தங்கை சரண்யா எனக்கு போன் செய்து மகனை விட்டுவிட்டு ராதாகிருஷ்ணன் வேகமாக சென்றுவிட்டார். அவர் அணிந்திருந்த டீ சர்ட், பேண்டில் ரத்தக்கறைகள் இருந்தன என்று கூறினாள். அதைக்கேட்டதும் நான் பயந்து, உடனடியாக வீட்டுக்கு வந்தேன். என்னிடம் இருந்த சாவியைக் கொண்டு கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது என் மகள் வதனஸ்ரீ கழுத்து அறுக்கப்பட்டு பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.
அதனால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு அவளை அருகில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள் வதனஸ்ரீ இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து என் கணவருக்கு போன் செய்தேன். அப்போது அவரிடம், ``வதனஸ்ரீயை என்னடா செய்தாய்!" என்று கேட்டதற்கு, ``அவளைக் கொன்னுட்டேன்" என்று கூறினார். எனக்கும் என் கணவருக்கும் உள்ள பிரச்னையில் என்னைப் பழிவாங்கும் நோகத்தில் என் மகள் வதனஸ்ரீயைக் கொலை செய்த ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் சகாதேவன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விஜயராகவன், கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். வில்லிவாக்கம் போலீஸார் ராதாகிருஷணைத் தேடிவந்தனர். இதையடுத்து ராதாகிருஷ்ணனைப் போலீஸார் கைது செய்து விசாரித்தபோது வதனஸ்ரீயைக் கொலை செய்ததற்கான காரணத்தை அவர் தெரிவித்தார்.
Also Read: கோவை: மூன்று மாதப் பிஞ்சுக் குழந்தையைக் கொன்ற பாட்டி... நடந்தது என்ன?! - அதிர்ச்சித் தகவல்கள்
இதுகுறித்து வில்லிவாக்கம் போலீஸார் கூறுகையில், ``லாவண்யா மீது அவரின் கணவர் ராதாகிருஷ்ணன் சந்தேகப்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். லாவண்யா குறித்து வதனஸ்ரீயிடம் ராதாகிருஷ்ணன் விசாரித்தபோதெல்லாம் அவள் அம்மாவைக் குறித்து எந்தத் தகவலையும் சொல்லாமல் இருந்திருக்கிறாள். சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த ராதாகிருஷ்ணன், கதவைத் திறக்கும்படி மகளிடம் கூறியிருக்கிறார். அதற்கு வதனஸ்ரீ மறுத்திருக்கிறாள். உடனே ராதாகிருஷ்ணன், அம்மாவின் செல்போனைக் கொண்டு வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். உடனே வதனஸ்ரீ, ``போன் கொண்டு வந்திருப்பதாக என்னிடம் சத்தியம் செய்யுங்கள், அதன்பிறகு கதவைத் திறக்கிறேன்" என்று தன் அப்பாவிடம் கூறியிருக்கிறாள். உடனே ராதாகிருஷ்ணனும் சத்தியம் செய்துள்ளார். அதன்பிறகே வதனஸ்ரீ, வீட்டுக்குள் இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்திருக்கிறாள். அப்போது மீண்டும் லாவண்யா குறித்து வதனஸ்ரீயிடம் ராதாகிருஷ்ணன், கேட்டபோது அவள் எந்தத் தகவலையும் சொல்லவில்லை. அதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், பாத்ரூமுக்கு மகளை தூக்கிச் சென்று மார்பு, வயிறு, கழுத்து என கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார். அப்போது அவரின் மனவளர்ச்சி குன்றிய மகன், டிவி பார்த்துக் கொண்டிருக்கிறான். இதையடுத்து மகனை, லாவண்யாவின் தங்கை சரண்யாவின் வீட்டில் விட்டுவிட்டு தப்பிச் சென்றியிருக்கிறார். அதன்பிறகுதான் அவரைக் கைது செய்து, கொலை செய்த கத்தியையும் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/in-chennai-girl-child-murdered-by-her-father
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக