Ad

புதன், 3 நவம்பர், 2021

AKS - 52: ஆண் - பெண் நட்புக்குள் காதல் நுழைந்தே தீருமா? சமூகப்பார்வையும் அதன் அதிர்வலைகளும்!

கவிதாவும் ராஜேஷும் பெங்களூரு ஹோட்டலில் ஒரே அறையில் தங்குகிறார்கள். ராஜேஷ் கவிதாவை சாப்பிடச் சொல்கிறான். கவிதா அமைதியாக எதையோ யோசிக்கிறாள். கவிதா தனக்கு பசிக்கவில்லை என்று சொல்கிறாள். ராஜேஷ் தனியாக சாப்பிடுகிறான். பிறகு கவிதாவுடன் தான் ஒரே அறையில் தங்கியிருப்பது பற்றி சிலாகித்து பேசுகிறான். கவிதா சகஜமாக பேசவே, அவளை அருகில் வந்து உட்காரச் சொல்லி அழைத்து, முத்தமிட முயல்கிறான். கவிதாவிற்கும் அது பிடித்திருக்கிறது. ஆனால் சட்டென்று ராஜேஷை விலக்கி விடுகிறாள். தன் எண்ணம் முழுவதும் பாண்டியனைத் தனியாக விட்டுவிட்டு வந்தது பற்றியே இருப்பதாகக் கூறுகிறாள். பாண்டியன் தனக்கு கால் செய்யாதது பற்றியும், அவன் சாப்பிட்டானா என கவலையாக இருக்கின்றது எனவும் கவிதா ராஜேஷிடம் சொல்கிறாள். சிறுவயது முதலே அருகருகே இருந்ததால் எந்த நேரமும் ஒன்றாக இருந்தவர்கள் முதன்முறையாக கவிதாவின் காதல் எனும் தனிப்பட்ட விஷயத்திற்காகப் பிரிந்து இருக்கின்றனர்.

AKS - 52

பாண்டியன் தனியாக சாப்பிடச் செல்கிறான். வழக்கமாகச் செல்லும் கடை என்பதால் கடைக்காரர் கவிதாவைக் காணவில்லை என்று கேட்கிறார். மூன்று நாள்கள் கவிதா இல்லாமல் பாண்டியனால் இருக்க முடியுமா என்றும் கேட்கிறார். பாண்டியன் யோசித்துக் கொண்டிருக்கிறான். கடைக்காரர் பாண்டியனும் கவிதாவும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறுகிறார். பாண்டியன் அவரிடம் பலமுறை தாங்கள் இருவரும் நண்பர்கள் என்பதை விளக்கிவிட்டான். அவன் கடைக்காரரிடம் அப்படிச் சொன்னாலும் கவிதாவைப் பிரிந்திருக்கும் இந்த நேரத்தில் அவர் சொன்னது அவனை யோசிக்க வைக்கிறது. சரியாக அதே நேரம் பாண்டியனுக்கு அவன் தந்தை கால் செய்கிறார். பாண்டியனுக்கும் கவிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது எனச் சொல்லி ஊருக்கு வரச் சொல்கிறார். பாண்டியன் அவரிடமும் தாங்கள் இருவரும் நண்பர்கள் என்பதை விளக்க முயற்சி செய்கிறான்.

இவ்வளவு நாள்களாக சுற்றியிருக்கும் மற்றவர்கள்தான் கவிதாவையும் பாண்டியனையும் நண்பர்களாக அல்லாமல் காதலர்களாகப் புரிந்து கொண்டு இருந்தனர். அது கவிதாவுக்கும் பாண்டியனுக்கும் அவ்வளவாக பிரச்னை இல்லாமல் இருந்தது. ஆனால் பாண்டியன் மற்றும் கவிதாவின் வீட்டில் இருப்பவர்களும் அவர்கள் இருவரையும் காதலர்களாக நினைத்துக் கொண்டு அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருப்பது பாண்டியனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ரத்த சம்பந்தமுள்ள சகோதர, சகோதரிகளாக இல்லாத ஆணும், பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் அன்போடு இருந்தாலே அது காதல் என்று பொது சமூகம் முடிவுக்கு வந்துவிடுகிறது.

AKS - 52

கவிதாவிற்கு பாண்டியன் மீதிருக்கும் அக்கறை சாதாரணமாக நாம் அன்பு வைத்திருக்கும் யாருக்கும் இருப்பதுதான். தினமும் ஒன்றாக சாப்பிட்டு, ஒரே அறையில் இருந்தவர்களுக்கு இதுபோன்ற சிறிய பிரிவு கூட மிகத் துயரமானதாக இருப்பது இயல்பு. பாண்டியனுக்கும் இதே போன்ற மன அலைக்கழிப்புகள் இருக்கின்றன. ஆனால் கவிதா ராஜேஷைக் காதலிக்கிறாள் என்பதற்காக வெளிப்படையாக தனது மனம் கவிதாவைத் தேடுவதைப் பற்றி வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான்.

உணவகத்தில் கடைக்காரர் கவிதா ஒரே நாளில் திரும்பி வந்துவிடுவாள் என்று சொல்லும்போது கூட பாண்டியன் அதற்கு பெரிதாக மறுப்பேதும் சொல்லாமல் பேச்சை மாற்றுகிறான். கவிதாவுக்கு பாண்டியனைத் தேடுவதும் பாண்டியனுக்கு கவிதாவைத் தேடுவதும் காதலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கவிதாவுக்கு பாண்டியன் சாப்பிட்டானா தனியாக இருப்பான் என்பது பற்றிய கவலையெல்லாம் தினமும் உடன் இருந்த ஒருவர் மீதான அக்கறையினால் உண்டாகும் உணர்வு.

AKS - 52

கடைக்காரர் சொன்னது போல, பாண்டியன், கவிதாவின் பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல பாண்டியனும் கவிதாவும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கிடையில் இருக்கும் புரிதலுக்கும், அன்புக்கும் வாழ்க்கை நன்றாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதன் மூலம் ஆணும் பெண்ணும் கடைசி வரை நண்பர்களாக மட்டுமே இருக்க முடிவது சாத்தியமே இல்லை என்பதை வலியுறுத்துவதாக அமைந்துவிடுமோ என்கிற வருத்தம் ஏற்படுகிறது.

அதேபோல் கவிதாவிற்கு இவ்வளவு நாள் கழித்து அதுவும் ராஜேஷுடன் காதலில் இருக்கும்போது பாண்டியன் மீது காதலை உணர்வதில் எந்தத் தவறும் இல்லை. காதல் உணர்வு இவை எல்லாவற்றையும் கடந்து அழுத்தமாகத் தோன்றுவது. கவிதா ராஜேஷிடம் இதை வெளிப்படையாக பேசியது பாராட்டுக்குரியது. அதே சமயம் பல சூழ்நிலைகளில் கவிதா பாண்டியனை வெறுப்பேற்ற ராஜேஷை பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள். ராஜேஷின் மனதைப் பற்றியும் யோசிக்க வேண்டியது அவசியமாகிறது. ஒரு உறவில் வெளிப்படையாகப் பேசுகிற நேர்மை எவ்வளவு முக்கியமோ, நம்பிக்கையும் அன்பும் வைத்திருக்கும் ஒருவரின் மனம் வருந்தச் செய்யக்கூடாது என்கிற கவனமும் முக்கியம்.

அதேபோல் பாண்டியனும் கவிதாவும் காதலிப்பதாக உணர்ந்து ஒருவேளை திருமணம் செய்து கொண்டாலும் ராஜேஷுடன் கவிதா பழகியது பாண்டியனுக்கு பிரச்னையாக இருக்கக் கூடாது.

AKS - 52

கிஷோரின் அழைப்பை ஏற்று பரத்தும் புனிதாவும் அவனுடன் மது அருந்தச் செல்கின்றனர். புனிதாவைப் போன்ற ஒரு தேவதையை தட்டிக் கொண்டு சென்றதற்காக கிஷோர் பரத்தை லக்கிமேன் என்று அழைக்கிறான். அதேபோல் கிஷோர் தான் புனிதாவிடம் ப்ரபோஸ் செய்த விஷயத்தையும் பரத்திடம் சொல்கிறான். புனிதா தன்னிடம் ஏற்கெனவே சொன்னதாக பரத் கூறியபொழுது புனிதா மற்றும் பரத்தின் இடையில் இருக்கும் புரிதலை கிஷோர் பாராட்டுகிறான். கிஷோர் புனிதாவை காதலிப்பதாக அவளிடம் சொன்னது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதை புனிதா பரத்திடம் சொல்லாமலும் இருக்கலாம். கிஷோர் இதை பரத்திடம் வேண்டுமென்றே நேரடியாகச் சொல்வதன் மூலம் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறான். கிஷோருக்கு புனிதா பரத்தைக் காதலிப்பது பொறாமையாக இருக்கிறது.

அந்த நேரத்தில் பரத் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் அதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்வானா என்பதும் சந்தேகம்தான்.

Also Read: AKS 51: காயத்ரியாக வாழ்வதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன? ராஜேஷ்களின் பொதுப்புத்தி உடைக்கப்படுமா?

மூவரும் பேசிக் கொண்டிருக்கையில் திடீரென்று கிஷோர் புனிதாவுக்காக ஒரு பாடல் பாடுகிறான். பரத்தின் முன்னிலையில் புனிதாவை ரசித்து அவளுக்காகவே பாடுவது போன்ற பாவனையில் பாடுகிறான். பரத்தின் உடல் மொழியிலும், முகத்திலும் அவன் அதை ரசிக்கவில்லை என்பதும், அவ்விடத்தில் இருப்பதே எரிச்சலாக இருப்பது போலவும் காட்டிக் கொள்கிறான். புனிதாவிற்கு இது புரிந்தாலும் கிஷோரிடம், ”இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்களைப் பார்த்து இருந்தால் உங்கள் குரலுக்காகவே காதலித்து இருப்பேன்” என்று சொல்கிறாள்.

AKS - 52

இது புனிதா கிஷோரின் குரலை உச்சமாக பாராட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் சொல்வது. ஆனால் பரத்தை வைத்துக்கொண்டு அதுவும் பரத்திற்கு ஏற்கெனவே கிஷோரைப் பிடிக்கவில்லை என்று தெரிந்தும் கூட இதுபோன்ற பாராட்டுகள் ஆர்வக்கோளாறுத்தனமாக இருக்கின்றது. புனிதா எப்போதும் மன முதிர்ச்சியுடன் சிந்தித்து, வெளிப்படையாகப் பேசுபவள். பரத்தின் தாழ்வு மனப்பான்மை தெரிந்தும் இதுபோல் பேசுவது தேவையற்றது. ஒருவேளை இதுபோன்ற பேச்சுக்களை “Normalize” செய்வதற்காக புனிதா அவ்வாறு பேசி இருந்தால், அதை வேறொருவரின் முன்னிலையில் செய்வது மேற்கொண்டு இருவருக்கும் பிளவை அதிகமாக்குமே அன்றி புரிதலை ஏற்படுத்தாது.

கவிதா தனக்கு பாண்டியன் மீது இருப்பது என்ன உணர்வு என்று கண்டுகொள்வாளா? ராஜேஷின் நிலை என்ன?

காத்திருப்போம்!



source https://cinema.vikatan.com/television/aks-episode-52-can-a-boy-and-girl-be-friends-forever-without-the-feeling-of-love

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக